லூர்து நகரின் சிறப்பும், அன்னையின் காட்சியும்
அருள்சகோதரி ஜோவிட்டா- தூய சிலுவைமடம் திருச்சி
அன்னையின் பண்புகள்: அன்பு, கனிவு, கரிசனை, தியாகம், துணிவு... இத்தகு பண்புகள் மட்டுமல்ல, பிறர் தேவையை உணர்ந்து உடனே உதவி செய்வது போன்ற உயர் பண்புகளை உடையவர் தாயாவார். கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசம் தீர்ந்துவிடவே மனப்பாரத்தோடு இருந்த அவர்களுக்காய் தன் மகனிடம் ஒரு விண்ணப்பம் செய்கிறார் அன்னை மரி. அதற்கு அவர் தெளிவான பதில் அளிக்காவிட்டாலும், மகன்மீது நம்பிக்கை வைத்து இயேசுவின் தாய் பணியாளர்களிடம் "அவர் உங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்" என்றார் (யோவா 2:5-6). யூதேயா மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்று எலிசபெத்திற்கு உதவி செய்தார் மரியா. இதனால் பெண் என்றால் பேதை அல்ல, மாறாக நம்பிக்கையும், துணிவும், தியாகமான திட உள்ளமும் உடையவர்கள் என்பது தெளிவாகிறது. மேலும் துன்பம் கண்டு துவண்டு போகாது, துன்பத்தினை இறைத் திட்டமென ஏற்று தன் மகன் வாழ்ந்திட ஓர் ஏணிப்படியாய் செயல் புரிந்தார். தாய் ஒரு குழந்தையை உதிரத்தில் தாங்கி, அதற்குப் பாலூட்டி வளர்ப்பதோடு, வீரமாய் செயல்படவும் பல வழிகளில் துணையாக இருந்து செயலாற்றுகின்றார். இதனால் 'அன்னை ஓர் ஆலயம்' என்று அகிலம் போற்றுகிறது. எனவே, இத்தரணியில் வாழும் நமது அன்னையைப் போற்றினால் அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவார் (சீராக் 3:4).
மலைகளின் சிறப்பு: ஓங்கி உயர்ந்து, ஒய்யாரமாய் காட்சியளிப்பது மலை. அங்கு பலவகையான மரங்கள், அழகுமிக்க பூக்கள் மிகுந்து காணப்படுகின்றன. மேலும் 'சில்'லென்ற தென்றலும், பனித்துளிகளும் நிறைந்து பார்ப்போரின் மனம் மகிழ்ந்திடும் இயற்கைக் காட்சிகள் மிகுந்த இடமே மலையாகும். அங்கு பல நதிகள், அருவிகள், பச்சைப் பசேலென்ற புல்வெளிகளும் நிறைந்து பார்ப்போரின் கண்கள் வியக்கும் அழகு மிகுந்த இடம். எனவேதான் "நீங்கள் காணும் கண்கள் பேறுபெற்றவை" (லூக் 10:21-23) என்று இறைவாக்கு சொல்கிறது. இயேசு மலைமேல் அமர்ந்து தனிமையாய் செபித்து, பிறர் நலமுடன் வாழ்ந்திட, கரடுமுரடான மலைப்பகுதியில் வாழ்ந்திடும் மக்களுக்கு நல்வாழ்வு கொடுத்திட மலைமேல் ஏறி இறை வார்த்தையைப் போதித்தார் (மத் 5:1-10). அதன்பின் அவர்கள் நலமுடன் வாழ்ந்திட தனிமையான இயற்கை எழில் மிகுந்த மலைப்பகுதியில் தம் வாழ்நாட்களில் செபத்திலும், தவத்திலும் ஒன்றித்து இறை அருள்மிக்கவராய் வாழ்ந்தார். எனவேதான் "மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகிறேன்" என திபா 121:1 மிக அழகாகக் கூறுகிறது. இவ்வாறு இயற்கையும், மலைகளும் மிகுந்த பகுதிகளில் அன்னை மரியா பலமுறை காட்சியளித்துள்ளார்.
லூர்து நகரின் சிறப்பு: லூர்து மாதா கோவில் என்றாலே அங்கு ஒரு கெபி இருக்கும். மாதாவின் சிறப்பினை அறிந்த வரும், அறியாதவரும் இக்கெபி முன் நின்று கண்களில் நீர் வழிந்தோடிட அழுது செபிப்பது அவர்களின் பக்தியையும், விசுவாசத்தையும் நன்கு உணர்த்துகிறது. பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காவ் என்ற ஆற்றின் பின் பகுதியில் உள்ள பிரன்னீங் மலைத்தொடரில் மசபியேல் என்ற குகையில் தான் லூர்து மாதா காட்சி கொடுத்தார். விறகு பொறுக்கி அதில் கிடைக்கும் வருவாயில் வாழும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள் பெர்னதெத்து. அவள் ஆடுகளை மேய்த்துக் கொண்டும், விறகுகளைச் சேகரித்துக் கொண்டும் வீடு திரும்புவாள். இவ்வாறு விறகுகளை அவள் பொறுக்கிடும் நேரத்தில் திடீரென்று காற்றுடன் கூடிய மழை பெய்தது. உடனே பெர்னதெத் ஒரு குகை பக்கமாய் ஒதுங்கினாள். மலையடிவாரத்தின் மேல் ஒரு மாடம் இருந்தது. 1858 பிப்ரவரி 11 ஆம் நாள் அழகு மிகுந்த ஒரு பெண்மணி அந்த மாடத்தில் தோன்றி பெர்னதெத்திடம் பேசினார். அப்பெண்மணி அவளிடம் தரையைக் கீறிப் பறித்து, குழியில் வரும் சேற்று நீரைப் பருகி, அதில் முகம் கழுவு என்றும், மக்கள் இங்கு பவனியாக வரவேண்டும் எனவும் சொன்னார். இத்தகு அழகு மிக்க லூர்து நகர் செல்ல முடியாதவர்களும், மசபியேல் குகையின் சிறப்பினையும், அதன் இயற்கை எழிலையும் காண முடியாதவர்களும் லூர்து மாதா காட்சி கொடுத்தார் என்பதை நம்பினால், லூர்து நகரின் சிறப்பினையும், அன்னையின் வேண்டுகோளையும் அறிய முடியும்.
பெர்னதெத்திடம் அன்னை கூறியவை: முதல் முறையாக 1858 பிப்ரவரி 11 இல் அன்னை மரியா பெர்னதெத்துக்குக் காட்சி கொடுத்தார். அன்னை இவ்விடத்தில் ஒரு கோயில் கட்டி மக்கள் பவனியாக வரவேண்டும் என்றும், அதன்பின் தொடர்ந்து 15 நாட்கள் இங்கு வா என்றும் கூறினார். உடனே "அம்மா நீர் யார்?" என்று பெர்னதெத் கேட்டபோது மூன்றாம் முறையாகக் காட்சி கொடுக்கும்போது அவர் முகம் பேரொளி வீசிட, அவர் கண்களை உயர்த்தி வானுலகை நோக்கியவராக "நாமே அமல உற்பவம்" என்றார்.
பிப்ரவரி 11ஆம் நாள் தொடங்கி, ஜூலை 16 ஆம் நாள் வரை 18 முறை இந்தக் காட்சிகள் நிகழ்ந்தன. இதை அறியாதவர்கள் பெர்னதெத்தை இழிவாகப் பேசினார்கள். பங்குத் தந்தையும் அவள் சொன்ன உண்மை நிகழ்வுகளை ஏற்க மறுத்தார். அவளின் செபமும், தபசும், கீழ்ப்படிதலும் அந்தக் காட்சிகள் உண்மை என ஏற்க வைத்தன. அதன் பின் மனமாற்றம் மிகத் தேவை என்பதை மக்கள் ஏற்றனர். அதனால் சாவின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டனர். "ஆண்டவரை என் கண்முன் வைத்துள்ளேன்; எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுவேன்; ஏனெனில் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்" (திபா 16:8-11) என்ற உண்மையை உணர்ந்து, மக்கள் மனம் மாறி னார்கள்.
பெர்னதெத் இறந்து அடக்கம் செய்யப்பட்ட பின் அவள் கல்லறையைத் திறந்து பார்த்தபோது, உடல் அழியாது காணப்பட்டது. அதனால் ஏழை, பணக்காரர் யாராயினும் லூர்து மாதாவின் கூற்றை ஏற்று பெர்னதெத் வாழ்ந்ததால் அவளின் கருத்தை ஏற்று "மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற் 1:15) என்ற இறைவார்த்தையின்படி வாழ்ந்த மக்கள் அன்னை வழியாக இயேசுவின் சொந்தப் பிள்ளைகளாகினர். உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால் நீங்கள் வாழ்வீர்கள் (உரோ 8:17) என்பதை இதயத்தில் ஏற்றவர்கள் மனம் மாறி உலகில் சமாதானம் நிலவிட அரும்பாடுபட்டனர்.
லூர்து நகரில் பெரிய கோவில்: பெர்னதெத்திடம் லூர்து மாதா சொன்னபடி கெபிக்கு மேல் பெரிய பசிலிக்கா கட்டப்பட்டு, லூர்து மாதா கையில் பெரிய செபமாலையும் அணியப்பட்டது. 1854 ஆம் ஆண்டு மாதா ஜென்மப் பாவமின்றி பிறந்தவர் என்று திருத்தந்தை 9 ஆம் பத்திநாதர் உலகிற்கு அறிவித்தார். திருத்தந்தை 13 ஆம் லியோ அறிவித்த படி திருத்தந்தை பத்தாம் பயஸ் பிப்ரவரி 11 இல் சிறப்பு ஒப்பிசும், திருப்பலியும் ஒப்புக்கொடுக்க உத்தரவிட்டார். 1872 இல் உலகெங்குமிருந்து திருயாத்திரையாக அங்கு வந்தனர்.
இப்பொழுது ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வந்து செபிக்கின்றனர். அங்கு வருவோரின் கையில் செபமாலையும், எரியும் மெழுகுவர்த்தியும் இருக்கும். பல்வேறு நோய்களால் வருந்தும் நோயாளிக்கு உதவிட செவிலியரும் அங்கு இருப்பர். அவர்களும் செபமாலை சொல்லியபடி தங்கள் பணிகளைச் செய்வர். இதைக்காணும் மக்கள் மனதில் விசுவாசம் அதிகரித்து, எரியும் மெழுகுவர்த்தியை கையில் பிடித்துக் கொண்டும், செபமாலை சொல்லிக் கொண்டும் அன்னையிடம் செபிப்பர். லூர்து நகரில் அழுகையும், செபமாலை சொல்லும் குரலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். எங்கு விசுவாசம் உண்டோ அங்கு சுகமளித்தலும், குணமடைதலும் உண்டு. இத்தகு காட்சிமிக்க இடம் லூர்து நகர் திருத்தலம். ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11 இல் லூர்து மாதாவின் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. லூர்து மாதா கெபியில் 'நாமே அமல உற்பவம்' என்று எழுதப்பட்டு, திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறது. மாதாவை நோக்கி 'மரியே வாழ்க' என்று குரல் எழுப்பி ஆயிரக்கணக்கானோர் கூடி செபிக்கையில் அங்குள்ள நோயாளிகளில் அநேகம் பேர் உடல் சுகம் பெற்று மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வீடு செல்கின்றனர். எனவே, லூர்து அன்னையை நம்பி நாள்தோறும் செபமாலை சொல்லி செபிப்போம். 'கூடிச் செபிக்கும்போது கோடி நன்மை உண்டு' என்ற வாக்கின்படி கூடிச் செபித்து அன்னையை வாழ்த்தி நாமும் கோடி நன்மைகள் பெற்றிட வீட்டில், பங்குகளில் ஒருமனதாய் செபிப்போம்.
இயேசு, தந்தையோடு இணைந்திருப்பது போல், நாமும் இயேசுவின் வாக்கின்படி வாழ்ந்தால், "நீங்கள் என்னுள்ளும், என் வார்த்தைகள் உங்களுக்குள்ளும் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்பி கேட்பதெல்லாம் நடக்கும்" (யோவா 15:7) என்ற வாக்கு உண்மையாகும். அன்னை மரி "இதோ, நான் ஆண்டவரின் அடிமை" (லூக் 1:38) என்று கூறி அதன்படி வாழ்ந்ததால் இயேசுவின் தாயாகி, நம் துன்பங்களில் துணை நின்று நமக்காய் பரிந்து பேசுகிறார். எனவே, தாயின் வழிகாட்டுதலை நாமும், ஏற்று பாவத்திலிருந்து விலகி பரிசுத்தமாய் வாழ்வோம்.
நாளும் நமது கடமை: தினமும் அன்னை யிடம் வேண்டும்போது ஆவியால் நிரப்பப்பட்ட அன்னை நம்மை தமது Mandle-க்குள் நம்மை மூடி மறைத்திடுவாள். பாவத்திலிருந்து நாமும் மீட்பு பெற்று ஆவியின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் (கலா 5:22-23) மிக்கவாய் வாழ்ந்து, புதுப்படைப்பாக மாறிட முடியும். அப்போது தன்னுள், வீட்டில், பங்கில், சமுதாயத்தில், நாட்டில், உலகில் சமாதானம் நிலவிட செபம், தபசு, செபமாலை சொல்லுதல் இவை மூன்றையும் நாம் கடைப்பிடித்தால் உலகம், பசாசு, சரீர இச்சைகளை வென்று, "கடவுளே, தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்" (திபா 51:10) என்று தூய ஆவியிடம் செபிக்கும்போது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட அன்னை மரி நமக்காய் பரிந்து பேசிடுவார். இதனால் நாமும் எடுத்த காரியத்தில் வெற்றி பெறமுடியும்.
கடவுள் அன்னை மரியிடம் "எதிரியான சாத்தானை உன் குதிகாலால் நீ மிதித்துக் காயப்படுத்துவாய்" (தொநூ 3:16) என்றதால் எதிரியை வென்ற வெற்றியின் மக்களாய், பரிசுத்தமாய் நாம் வாழ்ந்து 'வாழ்க மரியே' என்ற கீதம் பாடி, அன்னையைப் போற்றி அவளின் அருளையும், தூய ஆவியின் துணையையும் நாளும் வேண்டிச் செபிப்போம்.