அவள் சேயின் வழிதான் மோட்சம்

அருள்பணி ஜோசப் சஜீ OMD

maryjesus “தாயின் மடிதான் உலகம், அவள் தாளைப் பணிந்திடுவோம், அவள் சேயின் வழிதான் மோட்சம் நம் இயேசுவை தொழுதிடுவோம்” என்ற பாடல் தாயின் பாசத்தை அள்ளிக்கொடுக்கும் அன்பு பாடல். உலகைப் படைத்து, காத்து வரும் பரம்பொருளான இறைவன் உலகில் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியாததால்தான், ஒவ்வொரு உயிருக்கும் ஓர் அழகிய தாயைத் தந்து, தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை என்று கடவுளுக்கே நிகராக்கி, தாயும் தெய்வமும் தனித்தனி வடிவங்கள் அல்ல மாறாக ஒன்றுதானென உணர்த்தியிருக்கிறார். ஒவ்வொரு குழந்தையும் தன் பிஞ்சுப் பாதங்களை இம்மண்ணில் பதிக்கின்றபோது, தாய்மை எனும் தாயின் மடியில் தவழ வேண்டும் என்று விரும்புகிறது. எனவேதான் தாயின் மடியில் தவழ்வதை மிகப்பெரிய உலகம் என ஏங்கும் குழந்தைகளும், தாயின் பாச உலகம் கிடைக்கவில்லையேயென ஏங்கும் குழந்தைகளும் நாம் பார்க்கும் அன்றாட காட்சிகளாகவே மாறிவிடுகின்றன.

“அம்மா” என்று அழைக்கும் குழந்தையின் ஓசையில் இருக்கும் ஆயிரம் அளப்பரிய அர்த்தங்கள் வேறு எந்த மொழியிலும் வர்ணிக்க முடியாது. குழந்தைக்கு உயிர்கொடுத்து, மெய்கொடுத்து, தன் குழந்தையின் மெல்லிய கரங்களைப் பிடித்து உலா வரும் தாயின் பாசத்தை வர்ணிக்கவே உயிர், மெய், உயிர்மெய் என்ற ஆழமான அர்த்தங்கள் அம்மா என்ற வார்த்தையினுள் பொதிந்து பொன்போல மிளிர்கிறது. உறவுகளைத் தாண்டி, உடமைகளைத் தாண்டி, ஏன் உலகையே தாண்டி, காடு, மேடு, பள்ளங்கள் எனச் செல்லும் துறவிகளுக்குக்கூட என்றோ ஒருநாள் தாயின் பாசத்தை தேடி அலைகின்றனர். தன் தாயை தெய்வமாகக் கொண்ட பட்டினத்தார் தன் தாயின் மீது கொண்ட பாசத்தை தன் பாடல் வரியில்,

வட்டிலும் தொட்டிலும்
மார்மேலும் தோள்மேலும்
கட்டிலும் வைத்தென்னைக் காதலித்து
முட்டச்சிறகிலிட்டுக் காப்பாற்றிச்
சீராட்டிய என் தாயே!

என வர்ணிக்கின்றார். ஆனால் இன்று தாயை கண்விழித்து பார்க்காத குழந்தைகள் ஏராளம் ஏராளம். உலகின் செல்வம் எனும் கவர்ச்சி வலைகளில் சிக்கிக்கொண்டு, பணம்தான் உலகம் என உருவகம் கொடுத்து, தன் உதிரம் கொடுத்து உயிர் கொடுத்த தாயை, சிதறிச்செல்லும் வியர்வைத் துளிகளில் இருக்கும் உழைப்பின் மாண்பை உலகிற்கு காட்டிய தந்தையை மறந்து நிற்கும் மனிதர்களை இன்று பெரும் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். ஒரு குழந்தை தன் தாயிடம் பெற்ற குறைபடா பாசத்தை, அன்பை முழுமையாக உணர்ந்து வாழ்ந்திருந்தால், முதியோர் இல்லங்கள், பெற்றோர் விடுதிகள் எனும் பாசங்களற்ற கட்டிடங்கள் என்றோ தன் சுவடுகளின்றி மறைந்திருக்கும். இதை உணர்ந்த முதியோர்கள் “தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது” என்று சொல்லுகிறார்கள்.

குவியல் குவியலாக கொன்று குவித்த ஹிட்லர், இரண்டாம் உலப்போரில், தான் எதிர்பார்த்திராத தோல்வியைச் சந்தித்து, தன்னையே மாய்த்துக்கொள்ள வேண்டும் என்று துடிக்கின்ற போதும் கூட, தன் தாயின் உருவ படத்தின் நிழல் தழுவியபடி இறந்தார் என்பது ஹிட்லரின் இரக்கமற்ற இதயத்தில்கூட தன் தாய் பாசத்தின் ஈரம் எங்கோ மறைந்திருந்தது என்று வரலாறு கூறுகிறது. இந்தத் தாயின் பாசத்தைத்தான் இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, கண்மூடும் கடைசி நேரத்தில்கூட, ஒவ்வொரு நெஞ்சிலும் தாயின் அன்பு, பாசம், பரிவு நிழலாட வேண்டும் என்பதற்காக, “இவரே உம் தாய்” (யோவா 19:27) என்று தன் தாயை உலகின் எல்லா மக்களுக்கும் தாயாக தந்து வெளிப்படுத்தினார். அன்று சிலுவையின் அருகில் உதித்த தாயின் பாசம் இன்றும் தொன்றுதொட்டு “அம்மா” என்று அழைக்கும் ஒவ்வொரு ஓசையிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

ஆகவே வானவில் போல் பல வண்ணங்களாய் மிளிரும் நம் அன்னையர்களை பரிசாய் கொடுத்த கடவுளுக்கு முதலில் நன்றி கூறி, “தாய் இல்லாமல் நான் இல்லை. தானே எவரும் பிறந்ததில்லை. எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னைக் காக்கின்றாள்” என்ற திரைப்பட பாடல் வரிகளை இதயத்தில் ஏந்தி, நம் தாயின் பாசத்திற்கு புதிய வடிவம் கொடுப்போம். தான் கட்டிய புதிய வீட்டிற்கு பெயரிட்டான் “அன்னை இல்லம்” என்று, ஆனால் அவன் அன்னை இருப்பதோ முதியோர் இல்லத்தில். தாயின் பாசம் ஒரு பாசமேயென உணர்ந்திடும் நாம், இனி ஒரு விதி செய்து, நம் இல்லம் இருக்க, நம் தாய்க்கு இனி ஒரு இல்லம் தேவையா? எனச் சிந்திப்போம்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  மரியாளின் கருத்தோவியங்கள்