தாய்ப்பாசத்தின் சிறப்பு -அன்னை மரியா!
தந்தை தம்புராஜ் சே.ச.
பிப்ரவரி மாதம் லூர்து மாதா திருவிழாவைக் கொண்டாடுகிறோம். டிசம்பர் மாத இறுதியில் திருக்குடும்பத் திருவிழா கொண்டாடினோம். இறை அன்னை திருவிழாவையும் ஜனவரி மாதம் முதல் நாள் கொண்டாடினோம். தாயின் உயர்வை, மகிமையைத் திருச்சபை இவ்விழாக்களின் வழியாக நமக்கு நினைவூட்டுகின்றது.
குழந்தை வளர்ப்பில் தாய்க்கு மிகப்பெரிய பங்கு உண்டு. குழந்தை இயேசுவை பக்தியில் வளர வைக்க பல உக்திகளை அன்னை மரியா பயன்படுத்திருப்பார்.
'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?' என்ற பழமொழியின் தத்துவத்தைக் குறிப்பிடும்போது, ஐந்து! என்பது ஐந்து வயதைக் குறிக்கவில்லை. தாயின் வயிற்றில் கருவாய் இருக்கும்போது, சிசு ஐந்தாவது மாதத்திலேயே வெளி உலகைப் பற்றிய அறிவை அறிந்து கொள்ளத் துவங்கி விடுவதால், ஐந்து என்பது அன்னையின் கருவறையில் உள்ள ஐந்தாவது மாதத்தைக் குறிக்கும் என்றும், அப்போதே குழந்தைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள் என்பர் விஞ்ஞானிகள்...
குழந்தைகளை வளர்க்கும்போது, நமது பாரம்பரியத்தின் பெருமையைச் சொல்லி வளர்க்க வேண்டும். தாலாட்டு என்பது குழந்தையைத் தூங்கச் செய்யும் முறை மட்டுமல்ல, தாலாட்டுப் பாடல்கள் நல்ல தர்மங்களும், சித்தனைகளும், பரம்பரைப் பெருமைகளும் தன்னகத்தே கொண்ட தத்துவப் பாடல்களாகும். குழந்தைக்குத் தாலாட்டின் மூலமாக முதன் முதலாக ஞானத்தைப் போதிக்கும் குரு தாய் தான். மங்கையர்க்கரசி என்பவர் தாய்ப்பாசத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில் தான் படித்த ஓர் அருமையான செய்தியைப் பற்றிக் கீழ் வருமாறு கூறுகின்றார்:
ஆஸ்திரேலியாவில் கருவுற்ற ஒரு தாய்க்குக் குறைப் பிரசவமாக ஏழு மாதக் குழந்தை பிறந்து, சுயநினைவின்றிக் கிடந்தது. மருத்துவர்கள், குழந்தை பிழைப்பதற்கான வாய்ப்பில்லை என்று கூறி தாயிடம் கொடுத்தனர். மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட அந்தத் தாய், குழந்தையை மார்போடு போட்டு தான் எப்படியெல்லாம் ஆசைப்பட்டு அந்தச் சிசுவை வளர்க்க எண்ணியிருந்தாரென்று குழந்தையின் காதில் சொல்லிச் சொல்லி அழுதாள்.
தாயின் உணர்ச்சிப்பெருக்கான அரவணைப்பிலே இரண்டு மணி நேரம் இருந்த அந்தக் குழந்தையின் அசைவைத் திடீரென உணர்ந்த தாய், திகைத்துப் போய் மருத்துவர்களைக் கூப்பிட்டு, தன் குழந்தை பிழைத்துக் கொண்டதை அறிவித்தார். மருத்துவர்கள் இதைப் பெரிய மருத்துவ அதிசயமாகக் குறிப்பிட்டனர். இறைவன் கருணையும் குழந்தையைப் பிழைக்க வைக்கும் அதிசயம், புராண காலத்தில் மட்டுமல்ல, இப்போதும் நடைபெறும் என்பதற்கான சான்றுதான் இந்தச் செய்தி.
ஆம், அன்பார்ந்தவர்களே! நாமும் இறைஅன்னையாம் கன்னி மரியாவின் அரவணைப்பில் இருப்போம். அவரது குரலுக்குச் செவிமடுப்போம். அவர் நமது ஆன்மீக வாழ்வை வழி நடத்துவார். நாமும் உயிருள்ள விசுவாசத்தில் வளர்ந்து, முதிர்ந்து, அவரது மகன் இயேசுவுக்குச் சாட்சியாய் வாழ்வோம்.