புரட்சிப் பெண் மரியா!

திருமதி அருள்சீலி அந்தோணி

மரியா
விவேகம் என்ற வேள்வியை ஆடையாக உடுத்தி வையகம் விடியலைக் காண வந்தவர் மரியா.

புரட்சி என்றால் முரட்டுப் பிள்ளையென்று முலாம் பூசி விடாதீர்கள்! ஏனெனில் இந்த உலகமே சில புரட்சியாளர்களின் படைவீடு - தானே!

மரியா ஏற்படுத்தியது ஆன்மீகப்புரட்சி ஈடு இணை இனி இதற்கு ஏதுமில்லை! மானிடருக்கோ வானகமே தாய்வீடு மீட்பர் வருவார் என்று ஏங்கியவருக்கு ஆக்கபூர்வமாக்கியவள் புரட்சி மரியா!

மண்ணையும் விண்ணையும் இணைக்கத் தன்னையே தாரை வார்த்தவள் புரட்சிக் கன்னி! பாவ இருள் சூழ்ந்த உலகை ஒளிபுள்ளிகளால் அலங்கரித்த ஆழி விண்மீன் மரியா!

இன்பவனத்தில் அரங்கேறியச் சாபத்திற்குச் சாவுமணியடித்தவள் புரட்சி மரியா! அடக்கமாக அடங்கிக் கிடந்தவள் அல்ல - அகிலத்தைக் காத்திட வலம் வந்தவள் மரியா!

தன் வயிற்றில் சுமத்தக் கருவை இறக்கிடத் திரிந்தாள்! சத்திரம்- சாவடி துரத்திட ஏரோது எனும் கொடிமுடி ஆதிக்கத்தையே எதிர்த்து இறைமைந்தனைப் பெற்றெடுத்த புரட்சிப் பெண் மரியா!

இறைத்தூதனின் வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் பச்சை இளம் மகனைக் காக்கத் தூரம் எகிப்துக்கு இரவோடு இரவாகப் பறந்துச் சென்றவள் மரியா! மழலை இயேசு வளர்ந்திட அனுதினம் இறைவன் துதித்து ஆரிராரோ பாடி வளர்த்தவள் மரியா!

பன்னிரெண்டு வயதில் எருசலேம் தேவாலயத்தில் தன் மகனைக் கண்டு கேள்வித் தொடுக்க என்னை ஏன் தேடுகிறீர்கள் என்ற வரிகளைச் சிந்தையில் ஏற்றி மகிழ்ந்தவள் மரியா!

தந்தையின் பணி ஆற்ற மண்ணகம் இறங்கிய மைந்தன் பன்னிரெண்டு முதல் முப்பது வயது வரை உலகின் கடையெல்லை வரை சென்று பகுப்பாய்வு கொண்டதின் பெருமையைச் சிந்தையில் கொண்டுமங்களம் பாடியவள் மரியா!

கானாவூர் திருமணத்தின் முதல் புதுமை ஆற்றிடப் பரிந்துரைத்தவள் மரியா இறைமகனின் மூன்று ஆண்டுப் போதனைகளைச் சாதனைகளாக்கிடத் தன்னையே தாரை வார்த்துப் பரிந்துரைப்பவளின் சக்தியானாள்!

தன் மகன் ஒரு சான் இடம் கூடச் சொந்தமின்றி ஆவிபிரியும் மகனின் இறுதி வார்த்தைக்காகச் சிலுவையடியில் கதறி நின்றவள் மரியா! மகனின் பஞ்சடைந்த கண்கள் சொன்னச் சேதியை இன்றுவரைக் காத்து வருபவள் புரட்சிமரியா!

வானதூதரின் வார்த்தைகளைக் கருவில் தாங்கி எந்த மகனை உருவாக்கக் காலம் முழுவதும் துயரப்பட்டாளோ அதே அவமானங்களைத் தாங்கிய அந்த உறவு இரவலாகி விட்டதே!

அவரோ மனுகுலத்தின் மீட்பர் ஆனார்! அன்னையோ மனுகுலத்தின் தாயானாள். மாதர்குலம் மகிழ்வோடு வாழ்ந்திட ஏவாளின் சாபத்தை நீக்கிக் காத்திட்டவள் மரியா! தன்னிகரில்லா வல்லமைப் பொருந்தியவள்! பெண்குலத்திற்கு விடுதலைப் பெற்றுத் தந்தப் புரட்சிப் பெண் மரியா!

பெண்ணே மாமரியின் பாதையைப் பற்றிக் கொள்! இகமதை வென்றிடுவாய்! மரியின் புகழைப் பாரெங்கும் பறைசாற்றிட வரமதை நல்கிடுவாய் இறைவனே!

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு மரியாளின் பக்கங்கள்