நிக்கதேம் கூறியதைக் கேட்ட அந்தத் தாயும் மகளும் அதிர்ச்சியடைந்தார்கள். வயது முதிர்ந்த அந்த தாயார், நடுங்கும் குரலில், "தம்பி, இப்போது நீ சொன்ன தகவல் நிஜம்தானா? நாசரேத்தூர் ரபி இயேசுவை இந்த இரவு நேரத்தில் சிறைபிடித்தது ஏன்? நீயும் தலைமை சங்கத்தைச் சேர்ந்தவன்தானே? உனக்குத் தெரியாதா?" என்று கேட்டார். "என்னவென்று சொல்வது? லியோரா! எல்லாம் அந்த தலைமை சங்கத்தாரின் சதிவேலை தான்.." என்றார் நிக்கதேம்.
அவர் தொடர்ந்து கூறினார்: "நாசரேத்தூர் ரபியை ரகசியமாகப் பிடித்துவர பலநாட்களாகவே காவலர்கள் ஏவப்பட்டிருந்தார்கள். நானும் சங்கத்தில் எவ்வளவோ வாதாடிப் பார்த்தேன்... தீர விசாரிக்காமல் ஒருவனை தீர்ப்பிடுவது நமது சட்டப்படி முறையல்ல என்று நான் சொன்னபோது, தலைமைக் குருக்களும் மற்ற பரிசேயர்களும் "நீயும் அவனுடைய ஆளா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும்... கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பது தெரியாதா?" என்று என்னை அடக்கிவிட்டார்கள்.. இந்த எருசலேம் பட்டணத்து தலைமை சங்கத்தார் ஏதோ வெறிபிடித்ததுபோல நடந்துகொள்கிறார்கள்... சற்று முன்னர் நான் தலைமை குருவைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, அந்த போதகரை கயிறுகளால் கட்டிப் பிணைத்து கயபாவின் மாளிகைக்குள் இழுத்துச் செல்வதைக் கண்டேன்... அவரை என்ன செய்யப் போகிறார்கள் என்று நாளை காலையில் தெரிந்துவிடும்.."
இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த லியோராவின் மகள் தன் கையில் ஊசியும் நூலும் வைத்துக் கொண்டு ஏதோ மந்திரவித்தை செய்வதுபோல ஒரு வெள்ளைத் துணியை நெய்துகொண்டிருந்தாள். நிக்கதேம் சொன்னதைக் கேட்டவுடன் தன் கைவேலையை நிறுத்திவிட்டு சொன்னாள்: "சில நாட்களுக்கு முன்பு நானும் அம்மாவும் எரிகோவிலிருந்து பெத்தானியா வழியாக வந்துகொண்டிருந்தோம். அந்த ஊரில் ஓரிடத்தில் ஏராளமான ஜனக்கூட்டம் இருப்பதைக் கண்டு அங்கே சென்றோம்.. அது ஒரு கல்லறை குகை.. நான்கு நாட்களுக்கு முன் இறந்துவிட்ட அந்த நாசரேத்தூர் ரபியின் நண்பர் இலாசரை அந்த கல்லறையில் தான் அடக்கம் செய்திருந்தார்களாம்.. நாங்கள் அந்த இடத்திற்க்குச் சென்றபோது, அந்த போதகர் கல்லறையின் முன்னே நின்று அழுதுகொண்டிருந்தார்.. அவர் அருகில் இறந்து போனவனின் சகோதரிகள் இருவரும் நின்றிருந்தார்கள்.. அந்தப் பெண் தடுத்தும் கேட்காமல், அங்கே இருந்தவர்களைப் பார்த்து குகையை மூடியிருந்தக் கல்லை அகற்றுமாறு போதகர் சொன்னார்.. பிறகு கைகளை விரித்து கண்களை மேலே உயர்த்தி வேண்டுதல் செய்துவிட்டு, உரத்த குரலில், "இலாசரே, வெளியே வா" என்று கூப்பிட்டார். என்ன அதிசயம்!.. மாமா! சொன்னால் நம்பமாட்டீர்கள்.. நான்கு நாட்களுக்கு முன் இறந்து அடக்கம் செய்யப்பட அந்த இலாசர் உயிரோடு வெளியே வந்தான்... அவனுடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்" என்று இயேசு அவர்களிடம் கூறினார்... இதை நாங்கள் எங்கள் கண்களால் நேரிலே கண்டோம்.. கூடியிருந்த ஜனங்களில் சிலர் ஆச்சரியத்தோடு கோஷமிட்டார்கள். வேறு சிலர் தரையில் விழுந்து கடவுளைப் புகழ்ந்தார்கள்.. நான் திகிலடைந்து அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டேன்.. மாமா! அந்த ரபி ஒரு இறைவாக்கினர் மட்டுமல்ல... ஆபிரகாமின் தேவனுடைய அருள்பெற்ற தெய்வ மனிதர்..." இதைச் கூறியபோது அந்தப் பெண்ணின் விழிகள் நனைந்திருந்தன.
நிக்கதேம் அந்தப் பெண்ணை உற்றுபார்த்தார். "ஆம்! அம்மா, அவர் தேவமனிதர் தான்.. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒருநாள் இரவு அந்த ரபியை நேரில் சந்தித்து நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.. அப்போதே அவர் சாதாரண மனிதனல்ல என்பது எனக்கு விளங்கிற்று.. சமீப காலத்தில் நமது குலத்தில் இத்தகைய மேன்மையான இறைதூதர் எவரும் தோன்றியதில்லை.. பல நூற்றாண்டுகளாக இஸ்ராயேல் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மெசியா இவராயிருக்குமோ என்ற சந்தேகம் கூட எனக்கு உண்டு".. என்று கூறிவிட்டு நீண்ட பெருமூச்சுவிட்டார். அந்தப் பெண்ணின் கையிலிருந்த துணியைப் பார்த்த நிக்கதேம், "என்னம்மா, வழக்கம் போல இந்தத் துணியும் தேவாலய திருப்பணிக்குத்தானா?" என்று கேட்டார். “முதலில் தேவாலய தூயகத்திற்கு என்று நினைத்துத்தான் நெய்ய ஆரம்பித்தேன்.. ஆனால், இப்போது என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.. இந்தத் துணியை அந்த நாசரேத்தூர் போதகருக்கு பரிசாகத் தரப் போகிறேன்.. நன்றாயிருக்கிறதா?" என்று அந்தத் துணியைத் தன் கைகளில் பிடித்து உயர்த்திக் காட்டினாள்.
மிகச் சிறந்த உயர்தர நூலிழைகளால் அந்தத் துணி நெய்யப்பட்டிருந்தது. "நல்ல பரிசுதான், அம்மா.. ஆனால் அவரை எங்கே, எப்படி சந்தித்து இந்தப் பரிசை கொடுப்பாய்?.. சரி, கடவுள் உன் எண்ணத்தை நிறைவேற்றட்டும்.. அக்கா! நான் மேல்மாடியில் தூங்கப் போகிறேன்.. நாளை காலையில் நான் சீக்கிரமாகவே வெளியே செல்லவேண்டும்.. அந்த ரபிக்கு என்னாயிற்று என்று தெரிந்துகொள்ளவேண்டும்..."
மறுநாள் அதிகாலையிலேயே நிக்கதேம் புறப்பட்டுச் சென்றுவிட்டார். காலை பத்து மணிக்கு மேல் வெயிலின் வெப்பம் அதிகமாகத் தெரிந்தது. லியோராவின் மகள், தான் நெய்துகொண்டிருந்த துணியில் கடைசி இழைகளை கோர்த்து முடித்து, அந்தத் வெண்துகில் நேர்த்தியாக அமைந்தது குறித்து சந்தோஷத்தோடு அந்தத் துணியை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தாள். அந்த சமயத்தில் வீட்டினுள் வந்த பக்கத்து வீட்டு பெஞ்சமின், "தெரியுமா, லியோரா, அந்த ரபியை கொல்லப் போகிறார்கள்.. உரோமை ஆளுநர் அவரை விசாரணை செய்து மரண தண்டனை விதித்துவிட்டாராம்.. இன்று பகல்பொழுதில் கொல்கொதா மலையில் அவரை சிலுவையில் அறையப் போகிறார்களாம்.. அந்த போதகர் சிலுவை சுமந்து போவதைக் காண வழியெங்கும் ஜனங்கள் கூட்டமாக நிற்கிறார்களாம்,, நானும், என் அம்மாவும் தங்கையும் கூட அங்கே போகிறோம்.." என்று கலவரத்தோடு சொன்னான்:
இதைக் கேட்ட லியோராவின் மகள் வாயடைத்து நின்றாள். தன் தாயாரை ஏறெடுத்து பார்த்த அவள், "அம்மா, நான் அந்த போதகரை பார்க்கப் போகிறேன்... நான் வரும் வரை கவனமாயிரு.." என்று கூறிவிட்டு பெஞ்சமினோடு புறப்பட்டாள். லியோரா தன் மகளிடம், "சீக்கிரமாக வீட்டிற்கு வந்துவிடம்மா.. இன்று மாலை ஒய்வு நாளுக்கு தயாரிக்கவேண்டும்.." என்று சொன்னாள்.
பெஞ்சமின் குடும்பத்தாரும் லியோராவின் மகளும் நகரத்தின் கோட்டை வாயிலருகே வந்தபோது, ஏராளமான ஜனங்கள் வழிநெடுக கூடியிருந்தார்கள். ஒரே நேரத்தில் பலர் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்ததால், அந்த ஆரவாரம் பெருங்கூச்சலாகக் ஒலித்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஆங்காங்கே குதிரை வீரர்கள் அதட்டிக் கொண்டிருந்தார்கள். திடீரெனெ ஒரு ஆள் "அதோ! குற்றவாளிகள் வருகிறார்கள்.." என்று கத்தினான். சட்டென அந்த இடத்தில் கூச்சல் குறைந்து, ஒருவித மௌனம் சூழ்ந்தது. படைவீரர்களும், தலைமை குருக்களும், மூப்பர்களும் முன்னே வர, மூன்று பேர் சிலுவைகளை சுமந்து கொண்டு வந்தார்கள். அதில் ஒருவருடை ய உடல் மட்டும் உருதெரியாவண்ணம் சிதைக்கப்பட்டிருந்தது. தள்ளாடி அவர் கீழே விழுந்த போதெல்லாம், படைவீரர்கள் அவரை சவுக்கால் அடித்து எழுப்பினார்கள். நடக்கவே இயலாத நிலையில் தட்டுத் தடுமாறி வந்த அவருடைய சிலுவையை வேறொரு ஆள் சுமந்துகொண்டு வந்தார். பின்னால் கூட்டமாக வந்த சிலர், ஏளனமாக கேலி செய்து போதகரை நிந்தித்துக்கொண்டு வந்தார்கள். ஆனாலும் கூட்டத்தில் இருந்த சில பெண்கள் அழுதுகொண்டும், தலையில் அடித்துப் புலம்பிக் கொண்டும் வந்தார்கள். இதற்கெல்லாம் பின்னால் வந்த பெண்களில் ஒருவரை சுட்டிக்காட்டிய பெஞ்சமின், "அந்தப் பெண்தான் நாசரேத்தூர் ரபியின் தாயார்" என்று சொன்னான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த லியோராவின் மகள் கண்ணீர் மல்க வாய்விட்டு அழுதாள். "இது என்ன கொடுமை! நன்மைகள் செய்து, நல்லதையே போதித்த இந்த ரபியை இவ்வாறு அவமானப்படுத்துவது தகுமா?" என்று கதறினாள். சிலுவையை சுமந்து வந்தவர்கள் இப்போது அருகே வந்துவிட்டார்கள். லியோராவின் மகள் இயேசுவின் முகத்தை நேராகப் பார்த்தாள். தலையில் பதிந்திருந்த முள்முடியின் காயங்களிலிருந்து வடிந்த இரத்தம், அவருடைய முகத்தில் வழிந்திருந்தது. உதடுகள் வீங்கியிருந்தன. கைகளை குவித்த லியோராவின் மகள், போதகரை வணங்கிட தலைகுனிந்தாள். அப்போது அவளது இடைக்கச்சையில் செருகியிருந்த வெண்ணிற துணி அவள் கண்ணில் தென்பட்டது. கணநேரத்தில் அந்தத் துணியைக் கையிலெடுத்த அவள், படைவீரர்கள் கவனம் சிதறிய ஒரு சிறு இடைவெளியில் கூட்டத்தினுள்ளே புகுந்து, இயேசுவின் கையில் அந்தத் வெண்துகிலைக் கொடுத்துவிட்டு, குனிந்து அவருடைய பாதங்களை முத்தமிட்டாள். கனிவோடு அவளை நோக்கிய இயேசு, அந்தத் துணியால் தன் முகத்தை துடைத்துவிட்டு அவளிடம் திருப்பிக் கொடுத்தார். அதற்குள் வேகமாக வந்த ஒரு படைவீரன், அவளைப் பிடித்திழுத்து, ஓரமாகத் தள்ளினான். கீழே விழுந்த அந்தப்பெண்ணை பெஞ்சமினும் அவனுடைய தாயாரும் கைகொடுத்து எழுப்பிவிட்டார்கள்.
எழுந்து நின்ற அந்தப் பெண், உருக்குலைந்த நிலையில் முன்னே சென்றுகொண்டிருந்த இயேசுவையே பார்த்துக்கொண்டிருந்தாள். பலவீனமுற்றிருந்த கால்கள் தள்ளாட, அடுத்த அடி எடுத்து வைக்க இயலாமல், இயேசு சரிந்து கீழே விழுந்தார். அதை பார்த்த அந்தப் பெண் "ஐயோ! கடவுளே!" என்று கத்திக் கொண்டு முன்னே ஓட முயன்றாள். ஆனால், அவளால் ஓட முடியவில்லை. வலுவான கரம் ஒன்று அவளைப் பிடித்துக் கொண்டிருந்தது. திரும்பி பார்த்த அவள், தன்னை பிடித்து தடுத்து நிறுத்தியது நிக்கதேம் என்பதை கண்டவுடன், ஓவென்று கதறியழுது அவருடைய தோள்களில் சாய்ந்தாள். அவளை அணைத்துக் கொண்ட நிக்கதேம், "அழாதே, வெரோனிகா! இந்த கொலைபாதகர்கள் மத்தியில் நாம் அவருக்கு எந்த வகையிலும் உதவி செய்யமுடியாது... மேலும் நமது உதவியும் அவருக்கு தேவையில்லை.. இந்த கொடிய வேதனையையும், துன்பத்தையும் அவர் விருப்பத்தோடு ஏற்றுக்கொண்டது போலத்தான் தெரிகிறது... இதற்கு மேலும் நீ இங்கு இருக்கவேண்டாம்... உடனே வீட்டிற்குத் திரும்பி போ... நான் கடைசிவரை கூட இருந்து இதன் முடிவு என்ன என்று பார்த்துவிட்டு வீட்டிற்கு வருகிறேன்.." என்று சொன்னார்.
சற்று தூரத்தில் படைவீரர்களின் உரத்த குரலுக்கிடையே, பெண்களின் அழுகுரலும் புலம்பலும் கேட்டது. நிக்கதேமும், வெரோனிகாவும் அங்கே நோக்கினார்கள். தன் சிலுவையை சுமந்துவந்த ஆளைப் பற்றிக்கொண்டு நின்றிருந்த இயேசு, தீனமான குரலில் அந்தப் பெண்கள் பக்கம் திரும்பி, "எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்... பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!" என்று கூறினார். அதைக் கண்ணுற்ற நிக்கதேம், "பார்த்தாயா, வெரோனிகா! நீ அவருக்கு ஆறுதல் சொல்ல நினைக்கிறாய்.. ஆனால் சொல்லொண்ணா துயரத்தை அனுபவிக்கின்ற இந்த நேரத்திலும், அவர் நமக்கு ஆறுதல் வார்த்தை சொல்லுகிறார்... உண்மையிலே அவர் இறைமகன் தான்... சரி... மகளே, நீ வீட்டிற்கு போ,.." என்று சொல்லிவிட்டு, அவர் கொல்கொதா நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
மாலையில் சூரியன் மறைந்து ஒரு மணி நேரம் கழித்து தான் நிக்கதேம் திரும்பி வந்தார். குளித்து ஆடை மாற்றிக்கொண்டு வந்த அவர், தன் தலையை துணியால் மூடிக் கொண்டு, தேவாலயம் இருக்கும் திசை நோக்கி நின்று தொழுதார். கைகளை விரித்து மாலைநேர வேண்டுதலுக்கான மறைநூல் திருப்பாடல் பகுதியை சொல்லி முடித்தார். அவர் கண்கள் பனித்திருந்தன. லியோராவும், அவருடைய மகள் வெரோனிகாவும் அவருக்காக வெளிமுற்றத்தில் காத்திருந்தார்கள். வெரோனிகா கேட்டாள்: "மாமா, ரபிக்கு என்னாயிற்று?" சற்று நேரம் ஆழ்ந்த சிந்தனையிலிருந்த நிக்கதேம், தனது நெற்றியைத் தடவிக் கொண்டே சொன்னார்: "ரபி இறந்துவிட்டாரம்மா... அவர் இறையருள் பெற்ற மகான் என்பதற்கு இயற்கையே இன்று சாட்சி சொல்லிற்று.. நண்பகல் தொடங்கி அவர் உயிர் பிரியும் வரை சூரியன் மறைந்து நாடெங்கும் இருள் சூழ்ந்தது.. புயற்காற்றும், பூமியதிர்ச்சியும் கொல்கொதா குன்றையே குலுக்கியது.. வானம் சிந்திய கண்ணீர், மழையாகப் பொழிந்து, அந்த ரபியின் சிதைந்த உடலைக் கழுவி சுத்தம் செய்தது…” தன் கண்களைத் துடைத்துக்கொண்ட நிக்கதேம் தொடர்ந்து கூறினார்: "ஆனால், தன் உயிர் பிரிவதற்கு முன்பாக தனக்கு கொடுமை செய்தவர்களை எல்லாம் மன்னிக்கும்படி இறைத்தந்தையை வேண்டிக்கொண்டார்.. அம்மா! மறைநூலில் முப்பத்து ஒன்றாம் சங்கீதம் நமது மாலைநேர வேண்டுதலின் ஒரு பகுதி என்பது தெரியுமல்லவா? அதைத்தான் தனது கடைசி வேண்டுதலாக அவர் சிலுவையில் தொங்கும்போது சொல்லியிருக்கவேண்டும்... அந்த சங்கீதத்தின் ஐந்தாம் வசனம் "உமது கையில் என் உயிரை ஒப்படைகின்றேன்' என்பது.. அதை அவர் சொல்லி முடித்த பிறகுதான்…. அவருடைய இறுதி மூச்சு பிரிந்தது... "
சற்று நேரம் மூவரும் அமைதியாக இருந்தார்கள். அந்த மௌனத்தைக் கலைக்கும் விதமாக லியோரா கேட்டாள்: "தம்பி, ஒய்வு நாள் தொடங்கிவிட்டதே.. ரபியின் உடலை அடக்கம் செய்துவிட்டீர்களா?" அவளை நிமிர்ந்து பார்த்த நிக்கேதேம் தலையசைத்தார். "ஆம், அக்கா! கொல்கொதாவுக்கு அருகில் இருந்த தனது சொந்த கல்லறையில் ரபியின் உடலை அடக்கம் செய்ய அரிமத்தியா யோசேப்பு ஒத்துக்கொண்டார். ரபியின் தாயாரும் வேறு சில பெண்களும் கூடவே இருந்தார்கள். தாவீதின் குலத்தில் பிறந்து, இத்தனை நன்மைகளைச் செய்த அந்த போதகருக்கு ஒரு அரசருக்குத் தகுந்த மரியாதை செய்ய வேண்டுமென்று எனக்குத் தோன்றியது... எனவே, நான் வெள்ளைப்போளமும், அகிற்தூளும் கலந்து நூறு ராத்தல் எடுத்துச் சென்றேன். நமது முறைப்படி ரபியின் உடலை நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டி, யோசேப்பின் கல்லறையில் அடக்கம் செய்துவிட்டுத்தான் வந்தோம்... அக்கா! எனக்கென்னவோ அவர் இறந்துவிட்டதாகத் தோன்றவில்லை.. அவர் நம்மோடுதான் இருக்கிறார்.." என்று கூறி நிறுத்திய நிக்கதேம், சட்டென வெரோனிக்காவைப் பார்த்து, "மகளே, நீ வைத்திருந்த பரிசை என்ன செய்தாய்?" என்று கேட்டார்.
இயேசுவைப் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்திருந்த வெரோனிகா அந்தத் வெண்துகிலை முற்றிலும் மறந்துவிட்டிருந்தாள். வீட்டின் உள்ளே சென்ற வெரோனிகா திரும்பி வரும்போது அந்தத் துணியுடன் வந்தாள். அதை விரித்துப் பார்த்த வெரோனிக்காவின் கண்கள் வியப்பால் விரிந்தன. நடுங்கும் கைகளில் அவள் ஏந்தியிருந்த அந்தத் துணியில் இரத்தத்தில் தோய்ந்த இயேசுவின் முகச்சாயல் ஒரு ஓவியம் போல பதிவாகியிருந்தது. லியோராவும் நிக்கதேமும் அந்தத் துணியை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். நிக்கதேம் சொன்னார்: "வெரோனிகா, நீ அந்த போதகருக்கு பரிசு கொடுக்க விரும்பினாய்... ஆனால், அவர் உனக்கு காலமெல்லாம் அழியாத பரிசு ஒன்றை கொடுத்துவிட்டார்... மகளே! இந்த ரபியின் போதனைகளையும், துயரமான மரணத்தையும் வரலாறு ஒருநாளும் மறக்காது... வருங்காலத்தில் மக்கள் அவருடைய பாடுகளை நினைவுகூரும் போதெல்லாம், உன்னையும் நினைத்துக்கொள்வார்கள்"