"தர்மம் தலைகாக்கும்" என்பது முதுமொழி. பிறர் கேட்டு நாம் கொடுப்பது பிச்சை, பிறர் கேளாமலே , நாமாக குறிப்பரிந்து கொடுப்பது தர்மம். இயேசுவின் மலைப்பொழிவில் அவர்கூறிய வார்த்தைகள் காலத்தால் அழியாதவை. " The History of the Civilisation" என்னும் வரலாற்று நூலை எழுதிய ஆசிரியர் உலகப்புகழ் பெற்ற அர்னால்ட் டாயின் பீ(Arnold Toynbee) அவர் கூறுகிறார் "உலக வரலாற்றில் எத்தனையோ மனிதர்கள் தத்துவஞானிகள் அரசர்கள், சர்வாதிகாரிகள், விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள் தோன்றினாலும் அவர்களின் வரலாறு, கருத்துக்கள் ஒரு சிலஆண்டுகள் அல்லது நூற்றாண்டுகள் நிலைத்திருந்திருக்கலாம். ஆகான் ஒரு மனிதன் வரலாற்றில் நுழைந்து துவக்கிவைத்த சிந்தனைகள், அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை,உலகின் இறுதிப்பயணம் வரை நிலைத்திருக்கக் கூடிய கருத்துக்களுக்குச் சொந்தமானவர் ஒருவர் உண்டு என்றால் அவர் தான் இயேசு கிறிஸ்து. அவரின் வரலாற்றுப் பதிவுகளுக்கு முடிவே இல்லை" என்கிறார்.
ஆம், அது உண்மை. தவக்காலத்தில் மனிதன் செய்திட வேண்டிய காரியங்கள் மூன்று 1.தர்மம் 2.நோன்பு 3. செபம். தர்மம் கொடுப்பது மற்றக் கைக்குக் தெரியக்கூடாது. மீண்டும் தந்துவிட முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஒன்று.
தர்மங்களில் பல வகைகள் உண்டு . 1.புகழ் பெறுவதற்காக 2. தர்மசங்கடமான நிலையில் தர்மம் கொடுத்தல் 3.லஞ்சம், ஊழல், ஏமாற்றுதல் போன்ற அநீதி வழியில் சம்பாதித்த தொகையில் ஒரு பங்கு தர்மமாகக் கொடுத்தல் 4. தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக கடவுளுக்கே லஞ்சம் கொடுத்தல் 5.சொத்துகள் ஏராளமாகச் சேர்த்தபின் கடைசிக் காலத்தில் அதை எப்படிச் செலவழிப்பது என்று முழிக்கும் போது ஏதோ கொஞ்சம் தர்மம் கொடுப்போம் என்றெண்ணிக் கொடுப்பது 6.வாரிசு இல்லாதவர்கள் அறக்கட்டளையாக அதைச் செய்வது எனப் பல தர்மங்கள் உண்டு
தவக்ககாலத்தில் கிறிஸ்துவர்கள் நோன்பு இருப்பார்கள். இயேசு பெருமான் 3 காரியங்களை வரிசைப்படுத்துகின்றார். 1.தர்மம் 2.நோன்பு -உபவாசம் 3.செபம். வலக்கை இடும் தர்மம் இடக்கைக்குத் தெரியக்கூடாது என்பார் இயேசு. கோவிலில் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுவதைப் பார்த்த இயேசு, பணக்காரர்கள் தங்களிடமிருந்த பணத்திலிருந்து ஒரு பகுதியை காணிக்கை போட்டார்கள். ஆனால் ஏழைக்கைம்பெண் தன்னிடமிருந்த 2செப்புக்காசுகளைப் போட்டாள். ஏழையின் காணிக்கையை கடவுள் ஏற்றுக் கொண்டார் என இயேசு கூறுகிறார். கர்ணன் கவசகுண்டலங்களைத் தானமாக தந்தான். சிபி தன் உடலின் ஒருபகுதியை புறாவுக்காகக் கொடுக்கத் துணிந்தான். நம் காலத்தில் மகாகவி பாரதியும் நடிகர் என்.எஸ். கிருட்டிணனும் இப்படிக் கொடுத்து மகிழ்ந்தனர் என அறிகிறோம்.
உபவாசம், நோன்பு, ஒருசந்தி, விரதம் போன்ற நாட்களில் நாம் ஒரு வேளை அல்லது இரு வேளை சாப்பிடாமல் இருக்கிறோம். அது நல்லது. ஆனால் அதனினும் நன்று நாம் சாப்பிடக் கூடிய உணவை சமைத்து, ஏழை எளியவர்களுக்கு தானமாகக் கொடுப்பது. நாம் சாப்பிடாமல் இருந்தால், அந்தச் சமையலுக்கு உரிய பொருட்கள் நம் வீட்டில் தானே உள்ளது. அந்தப்பங்கினை நாம் சாப்பிடுவது கடவுளுக்குப் பிடிக்காத செயல். அதைத் தீட்டுப் பொருள் என்றே சொல்லலாம்.
பரிட்சையில் பாஸாக வேண்டுமா? உட்கார்ந்து படி. வேறு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஒரு முறை கடவுளைக் கூப்பிடு அல்லது நினை. உன் முன்னால் வந்து நிற்பார். பின்னர் 999 முறை நன்றி கூறு. 99 முறை "ஆண்டவரே இறங்கிவரும். வாரும்" எனக்கூவி விட்டு ஒரு முறையாவது நன்றி சொல்ல மறக்காதே. கடவுள் செவிடர் அல்ல. நினைத்தாலே உன்னிலிருந்து வெளிவருவார்.
தமிழ்க் கத்தோலிக்க இணையத்தளம்-அன்பின்மடல்
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
https://anbinmadal.org | 2002-2025 | Email ID: anbinmadal at gmail.com