மருத்துவ சோதனை - ஆன்மீக சோதனை


பேராசிரியர் அ.குழந்தை ராஜ்

doctor&childதிருவருட்சாதனங்களில் முதன்மையாக இருக்கக் கூடிய ஒன்று திருமணம். இருமனம் நிறைந்த திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறக்கிறது. குழந்தை கருவுற்ற நாட்களிலிருந்து மருத்துவ சோதனைகள் பல.. பின்னர் குழந்தை பிறந்தவுடன் ஊசி, பிற்ப்பாடு வாரந்தோறும் மாதந்தோறும் ஆண்டுதோறும் போடவேண்டிய ஊசிகள், சாப்பிட வேண்டிய மருந்துகள் இவைகளை தவறமால் போட்டு விடுகிறோம். 5ஆண்டு வரை குழந்தையைக் கண் காணிப்பது வெகுஜோர்.

ஆனால் குழந்தையின் ஆன்மீக வாழ்க்கைக்கு நாம் என்னென்ன ஏற்பாடுகளைச் செய்கிறேம். திருமுழுக்குக் கொடுத்து விட்டால் போதும் விண்ணரசில் இடம் பிடித்தது மாதிரி. ஒரு மனிதன் ஆவிக்குரிய மனிதனாகப் பிறப்பெடுக்க அவனுக்கு சரியான வழிகாட்டுதல்கள் தேவை. ஆனால் தற்போதைய புற்றீசல் சபைகள் ஆவிக்குரிய வாழ்வை இன்சன்ட் காபி போலத் தருகின்றன. அவர்களின் ஞானஸ்தானம் (திருமுழுக்கு) தண்ணீரின் அளவை மட்டும் பொறுத்துள்ளது. முழுக்கு ஞானஸ்தானம் எடுத்தால் பரலோகத்தின் சாவியைப் பெற்றுக்கொண்டதைப் போல...

ஒரு மனிதன் மற்றவரை மன்னிக்க பல ஆண்டுகள் ஆகின்றன. தன்னிடம் உள்ளதை பகிர்ந்து கொடுக்க அதிக ஆண்டுகள் பிடிக்கின்றன. பணத்தைச் சேர்த்துக் கொண்டே இருக்க விரும்புகிறானே தவிர, அது ஒரு இடைக்கருவி. அது செலவழிக்கப்படவேண்டியது என எண்ண மறுக்கிறான். பழிவாங்கும் எண்ணம், உழைப்பின்றி ஊதியம், லஞ்சம், புரணி, குணக்கொலை, ஊழல் இவைளெல்லாம் ஒரு நாளில் போக்க கூடியவைகளா? இம் மாபாதகச் செயல்களைக் குறைக்க அல்லது நிறுத்த பல காலம் பயிற்சி தேவைப்படுகிறது. "கொடுத்தால் செல்வம் குறையுமே" என்ற கவலை. கொடுத்துப்பார் செல்வம் குவியும். இந்தப் பயிற்சிகளைப் பெற ஒரே ஒரு பணியிடம் உண்டு. அது தான் நம் இல்லம். நம் இல்லத்தாரரை அன்பு செய்து பார். அவர்களை மன்னித்து விடு. ஏழை லாசர்களை சற்றுக் கண்ணோக்கிப்பார். மன்னிக்கும் எண்ணம் வந்தாலும், மனம் மன்னிக்க மறுக்கிறது. கௌரவம் தடுக்கிறது. "20 வருடத்திற்கு முன் என் தம்பியை மன்னித்து விட்டேன்" என்று அடிக்கடி கூறுபவன் மனதில் அவனை மன்னிக்க வில்லை என்று தான் பொருள். முழுமையாக மன்னித்தவன் அதைப்பற்றிப் பேசமாட்டான்.

food_sharingநமக்கும் சில அனுபவங்கள் ஏற்படுகின்றன. அதை நாம் ஊனியல்பில் தீர்க்கப் பாடுபடுகிறோம். அதை ஆவிக்குவிய அனுபவமாக உணர்ந்து, எதனால் இக்கேடு எனக்கு வந்தது என வினவினால் நாம் ஆவிக்குரிய விடையைக் காணலாம். இதற்குச் சரியான காலம் "தவக்காலம்" அந்தக் காலத்தில் நம்மவர்கள் செய்யும் கூத்துக்கள் ஏராளம். சிலுவைப்பாதைகளைச் பலச் செய்வார்கள். ஆனால் இயேசுவின் பாடுகள் நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்பதை எண்ணிப்பார்க்கமாட்டார்கள். இந்த ஏழு வாரங்களில் எத்துணை பேர்கள் அடுத்தவரை மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள்? இந்தத் தவக் காலத்தில் எத்துணை மாமியர், மருமகள் இணைந்து கோவிலுக்கு வந்திருந்தார்கள்? அல்லது ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக் கொண்டார்கள்.

இதற்கான பயிற்சிகள் சில...

  1. தினமும் விவிலியம் வாசி. கடவுள் உனக்கு என்ன கூறுகிறார் என அறிய முற்படு.
  2. தினமும் யாருக்காவது, ஏதாவது கொடு. உணவு, உடை, பேனா, நோட்டு, புன்சிரிப்பு, கனிவான பார்வை போன்றவற்றை செய்து பார் - முதியவர்களைக் கண்காணித்தல் போன்ற மனநிறைவான ஏதாவதொரு காரியம் செய்.
  3. சகமனிதர்களை மதித்து நட - இயற்கையை - கடவுளின் மாட்சியை ஏறும்பு முதல் - யானை வரை பார்.
  4. சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவன் : சாவான பாவத்திற்கு உள்ளாகிறான் என்கிறார் இன்றைய திருத்தந்தை பிரான்சிஸ்.
  5. ஆலயப் பணிகளில் ஈடுபடு - ஏதாவதொரு பணிக்குழுவில் இணைந்து பணியாற்று.
  6. விவிலிய விளக்க உரைகளைப்படி - மறைக்கல்வி பாடம் நடத்து.
  7. நோய் மருத்துவர் மருந்து கொடுத்தல் மறக்காமல் சாக்கிடும் நீ, ஆன்ம உணவான விவிலியத்தை தினசரி வாசி.
  8. குதர்க்கமான கேள்விகள் கேட்கதே - எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்.
  9. ஆன்மீக நண்பர்கள் குழாம் ஏற்படுத்தி அதன் மூலம் நீ பயன் பெறு.
  10. மூடப்பழக்கங்களை விட்டுவிடு. சாதிய உணர்வைத் தாண்டிச் செல் சரியான ஆன்ம உணவை உட்கொள் - நோய், பயம், விரத்தி, பேய் எதுவும் அணுகாது.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்