என் அன்பே, என்னோடு பயணிப்பாயா?

திருமதி அருள்சீலி அந்தோணி

இயேசுநாதர்...
கூறுகிறார் கொஞ்சம் கேளுங்கள். இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் நிறைந்தவர் நான் என்பதை என்னுடன் பயணிக்கையில் சற்று உணர்ந்து கொள்வாயா!

தாழ்ச்சி என்பது என் தெய்வீகப் போதனை. அது என் தூய்மையின் பரிசுத்த முத்திரை. தந்தையின் பரிவிரக்கத்தை பெற்றுக் கொள்வதற்கான நிபந்தனைதான் தாழ்ச்சி! ஓர் ஆன்மா சாத்தான் மீது கொள்ளும் மிகப் பெரிய வெற்றிதான் தாழ்ச்சி எனும் புண்ணியம்!

சாத்தானின் முதல் தாக்குதலிலேயே அவன் மண்ணைக் கவ்வச் செய்யும் ஆற்றல் மிக்கதுதான் தாழ்ச்சி. இதுவே நமது அரணும், கேடயமாகும். அன்னை மரியின் தாழ்ச்சியினால் மீட்பராகிய நான் மனுவுருவானேன். பரிசுத்த ஆவியார் மரியின் மீது நிழலிட்டதால் இந்த வையகத்தை நான் முத்தமிட வைத்தது தாழ்ச்சியே என்பதை உன்மனதில் பதிவு செய்திடு.

தாழ்ச்சியை ஆடையாக கொண்ட ஆன்மா பொறுமை மிகுந்தது. துன்பங்களைத் தொடர்ந்து தாங்கக் கூடியது. மென்மையானது. அன்பு நிறைந்தது. தாழ்ச்சியால் வரும் இனிமை உள்ளத்தில் சாந்தத்தையும், அமைதியையும் வழங்கி சமுதாயத்தை வெற்றிக் கொள்ளச் செய்கிறது. முடியாது என்பவற்றை வெற்றிக் கொள்ளச் செய்யும் நிலை இறைவனில் தொடுதல் ஆகும்.

மனஉறுதி தேவை:
'கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக் கொள்ள உங்களுக்கு மன உறுதி தேவை' (எபி 10:30). என் பொருட்டும் உங்கள் பொருட்டும் எழுந்த வாக்கு இதுவே, மானிடரின் மீட்புக்காக நான் வாழ்ந்த காலத்திலும், உங்களின் ஒன்றிணைப்பில் வாழும் இவ்வேளையிலும், என் பொறுமையால் உங்கள் ஆன்மாவை, எனக்கு சொந்தமாக்கிக் கொள்ள சொல்லொண்ணாத் துயரங்களையும், வேதனைகளையும் தாங்கிக் கொண்டேன். அன்று என் தம் அன்னையின் தாழ்ச்சியே! யூதர்களின் தாக்குதலைத் தாங்கும் கேடயமாக விளங்கியது. தந்தையின் திருவுளப்படி என் தாய் போற எல்லாரும் இன்புற்று இருக்க பல தலங்களில் ஆரோக்கியத்தைத் தரும் ஆரோக்கிய அன்னையாகவும் என் துன்பத்தைத் தாங்கிய வியாகுல அன்னையாகவும், துயறுரு வோருக்குத் துயர் துடைக்கும் அன்னையாகவும், ஆதரவு கேட்டு கரம் நீட்டுவோருக்கு இடைவிடா சகாய அன்னையாகவும், பல தரப்பட்ட மக்களின் தேவைகளுக்கேற்ப. கருணை புரிந்திடும் அமல் உற்பவியாகவும் இருந்து வருகின்றார். எனவே தான் இன்றைய நாட்களில் நான் உங்களோடு சற்று என் துன்ப துயரங்களில் பங்கேற்றிட உரையாட வந்துள்ளேன். சற்று உன்னிப்பாக கவனிப்பீர்களாக!

பொறுமை என்றால் என்ன?
" கடவுளின் அன்பிற்காக நாம் மேற்கொள்ளும் சவால்களை, சோதனைகளை விருப்பத்துடன் சகித்து கொள்வதே பொறுமையாகும். தவிர்க்க முடியாத ஒவ்வொரு சோதனைகளையும் பொறுமை வெகு இலகுவாக்கி விடும். அதாவது உடல் வேதனைகள், வறுமை, அவதூறுகள், கண்டனங்கள், ஓரங் கட்டப்படுதல், தனிமை ஆகியவற்றைத் தாங்குகின்ற பொறுமைதான் மெய்ஞானமாகும்.

அதே வேளையில் மற்றவர்களின் புண்படுத்தும் சொற்களை நாம் ஏற்கும்போது அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தேவை மகனே! மகளே! என் பாடுகள் - துன்பங்கள் - வேதனைகள், அவச் சொற்கள் உங்களுக்கு முன் உதாரணமாய் இருக்கட்டும் என்பதை மறவாதே மனிதராகப் பிறத்தாலே நம் வாழ்வு ஓர் கண்ணீர் பள்ளத் தாக்குத்தான்! என்பதே என் 33 வருட அனுபவம்.

மனிதராகப் பிறந்தவர்கள் அனைவருக்கும் உலக கவலைகள், ஆன்மீக கவலைகள், வீட்டுப் பிரச்சனைகள் என்று பலவற்றை சந்திக்க நேரிடும். அதுவும் என்னைப் போன்று பிறரை அன்பு செய்து வாழும் போது நேரிடும் பேரிடர்கள் சொல்ல முடியாதது என்பதை என் அனுபவத்திலிருந்து பதிவு செய்கிறேன்.

நமது வானக வீட்டிற்குச் செல்லும் பாதையில் பல இடரல்கள் தோன்றுவது நமது வானகத் தந்தையின் இரக்கத்தினால்தான். ஒவ்வொரு துயரமும் வருகிறது. அவை ஒவ்வொன்றும் நாம் எவ்வாறு இறையரசில் சேர அதை மனத்திடத்தோடு ஏற்றுக் கொள்கிறோமா என்பதற்கு இறைவன் நமக்குக் கொடுத்த பல பரீட்சைதான் உணர்ந்திடுங்கள். அவ்வாறே நான் என் வாழ்நாளிலும் அனுபவித்துதான் உங்களை மீட்டேன் என்பதே இக்கட்டுரையின் வேட்கை!

தந்தையே! இவ்வுலக வாழ்வு கொஞ்ச காலம்தான், முடிவில்லா வாழ்வு என்பது நீண்ட நெடிய பயணம் என்பதனை மனதிற் தாங்கி, இந்த இலக்கை அடைய என் இதயத்தில் தாழ்ச்சியும், சாந்தமும் வேண்டும் என்பதற்கு என் மண்ணக வாழ்வே உங்களுக்கு சான்று என்பதனை மனதில் பதிவு செய்து என்னோடு தொடர்ந்திட விழைகின்றேன் மனுக்குலமே!

நாம் அறச் செயல்கள் செய்யும் ஒவ்வொரு முறையும் பல தடைகள் தோன்றி நம்மை நொறுக்கிடும். நமது பொறுமையும் சோதிக்கப்படுகிறது. அதே வேளையில் நம் பாவங்களின் தன்மையையும், மறுவுலக வாழ்விற்கு நம்மைத் தகுதிப்படுத்தும் தகுதிதான் காலம் என்பதையும் மறவாதீர். மரணத்திற்குப்பின் நமக்கு காத்திருக்கும் பரிசு மற்றும் தண்டனைகளையும் சிந்தித்துப் பார்க்காத போது, உலகத் துன்பங்களைக் கண்டு திகைத்து நிற்பார்கள். எனவே உலகம் நம்மை தகுதியுள்ளவர்களாக மாற்றும் கண்ணாடி. நாம் எந்த அளவையால் அளக்கிறோமோ, அதே அளவையால் பெற்றுக் கொள்வோம் என்பதை மனதில் பதிந்து வாழுங்கள்!

ஏன் இந்த துன்பக்களம்?
அளவில்லா இரக்கம் நிறைந்த வானகத் தந்தை என்னையும், இரக்கமுள்ளவராக இரும் என்று பணித்தப்படியால் தான் அவரது மீட்புத் திட்டத்தில் நான் மேற்கொண்டத் துன்பங்களை நான் சுயசரிதையாக புதிய ஏற்பாடு எனும் நூலில் பதிவிறக்கம் செய்தது. தூய ஆவியாரின் பணிப் பொழிதலால் தான் அரங்கேறியது என்பதை மறவாதே. சோதனைகளைக் கண்டு துவண்டுப் போகாதே!

நல்ல ஆன்மீக வாழ்வு வாழ்கின்ற மனிதர்கள் ஏன் நமக்கு முன்னே, எனக்குப் பின்னே தோன்றிய புனிதர்கள், புனிதைகள் ஏன் கசப்பு மிகுந்த கரலங்களைச் சந்தித்தனர் ? சந்திக்கின்றனர்?

தந்தையோடு இருக்கும் போது துன்பங்கள் வரத்தான் செய்யும். கடவுளின் திருவுளத் திட்டத்தில் குறை காணும் அளவு நான் தரம் தாழ்ந்து விட்டேனா? இது எவ்வளவு முட்டாள் தனமானது! என் தந்தை எனது மக்கள் பிளவுப்பட்டு துன்புறுகிறார்கள் என்பதால் ஆபிரகாம் முதல் இறைவாக்கினர்கள் வரை அனுப்பியும் அவர்கள் காணாத கடவுளை நம்ப மறுத்து சிலை வழிபாடு க ைள த ன தாக்கி தங்கள் வழி முறைகளையே சிதைத்து சின்னா பின்னமாகும் நிலையில் தான் முதிர்ந்த சக்கரியாவுக்கும் - கன்னிப் பெண் மரியாவுக்கும் கபிரியேல் வானதூதரால் மங்களச் செய்தியை பெற்றுத் தாழ்ந்து என் அன்னை ஏற்றதினால்தான் மானிடர் அனைவரின் பாவங்களுக்குக் கழுவாயாக நான் களமிரங்கினேன். எனவேதான் இத்துன்ப காலத்தில் என்னோடு உரையாட உங்களை என் இரு கரம் விரித்து அழைக்கின்றேன்! என் இதயத்தில் தாழ்ச்சியும், சாந்தமும் நிறைந்துள்ளது. வாரீர் வந்து பருகிடுவீர்.

துன்பம் என்பது இனிமையானது அல்ல, மாறாக அதன் விளைவுகள் அற்புதமானவை. அறச் செயல்களுக்காக இறை இரக்கத்திலிருப்பவருக்காக துன்புறுவது கடவுள் தரும் அருளாற்றலின் கொடையாகும்.

ஆதியில் துன்பங்கள் இருக்கவில்லை. மாறாக வானதூதர்களும், பின் மனிதர்களும் கடவுளை எதிர்த்து எழுந்தபோதுதான் துன்பம் தோன்றியது. கடவுளின் மாட்சிமைக்கு எதிராக அவரது படைப்புக்களால் ஏற்படும் அனாச்சாரங்களுக்கு பரிகாரம் செய்யவே துன்புறுவது தேவைப்படுகிறது. பாவத்தின் சம்பளம் ஆன்மாவின் மரணம்! பாவம் செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும் மனம் மாறாவிடில் ஐயோ கேடு! மனம் மாறிட தான் என் வருகை!

மேலும் வியாதிகளால் ஏற்படும் துன்பம் அது. ஒரு பரிகாரச் செயலைக் கொண்டுள்ளது. (உ.ம்) கத்தி சதையை வெட்டும் போது வலியைத் கொடுத்தாலும் அறுவை சிகிச்சையினால் குணம் பெறும் போது , கத்தி ஓர் கருணையின் கருவியாகின்றது. துன்பங்கள் பெருமை நிறைந்தவர்களைத் தாழ்ச்சியுள்ளவர்களாகவும், கடவுளின் திட்டத்தை நிறைவு செய்பவர்களாகவும் காட்டுகின்றது. துன்பம் - ஆன்மாவை தூய்மையாக்குவதுமல்லாமல் முடிவில்லா வாழ்வு உண்டு என்பதற்குச் சான்றாகின்றது. மறைநூலின் மீது கொள்ளும் பற்றுதல் நமது தவ முயற்சிகளை விட, துன்பங்களை சகித்துக் கொள்ளும் ஆற்றலைத் தருகிறது. கடவுள் நமக்குத் தருகின்ற கொடைகளில் துன்பங்களைத் தாங்கும் கொடையே விலையேறப் பெற்ற கொடையாகும்.

மேலும் நாம் கடவுளோடு ஒன்றித்தி ருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் நிலையினரும் உண்டு. (உ.ம்) உணர்ச்சிப் பூர்வமான ஆறுதல்களினாலும் திருயாத்திரைகளினாலும், நவநாள்களாலும், கடும்ஒறுத்தல் முயற்சிகளினாலும் தாங்கள் ஆன்மீகத்தின் கொடுமுடியை அடைந்து விட்டோம் என்று எண்ணிக் கொள்பவர்கள் காற்றில் பறந்து செல்லும் சாம்பலை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை போன்றவர்கள். இது உண்மையான விசுவாசம் அல்ல, கடவுளோடு ஒன்றிப்பு என்பது மகிழ்ச்சியில், உணர்ச்சியில் அல்ல, மாறாக கடவுளுக்காக துன்புறுவதிலும், தியாகத்திலும் நொறுங்குண்ட உள்ளங்களின் பராமரிப்பில்தான் கடவுள் குடியிருக்கின்றார். தந்தையின் மீட்புத் திட்டத்தின் கருவியாகிய என் தாய் மரியாவும் அவரது வியாகுலம் நிறைந்த துன்பங்களுக்கு காரணியாகிய எனது துன்பங்களும்தான் உச்சக்கட்டம்!

எனவேதான் தந்தை அனைத்திற்கும் மேலாக உயர்த்தி தன் உரிமைப் பேரான வலது பக்கத்தில் அமரும் பேற்றை எனக்களித்தார். உன்னோடு பகிரும் எண்ணம் எனதானது. மகனே! மகளே!

மானிடனின் உரையாடல்
என் அன்பு இயேசுவே! உமது இதயத்தை திறந்து இறை இரக்கத்தின் ஆண்டில் உமது அன்பில் நான் எவ்வாறு நிலைத்திருக்க வேண்டுமென்று நீர் நல் ஆசானாய் உமது மண்ணக வருகையில் நீவீர் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற மரியின் மகனாக அவதரித்த நாள் முதல் விண்ணகம் சென்றடையும் நாள் வரையில் உமது துன்பம் - துயரங்கள் இந்த நெறிக் கெட்ட சமுதாயத்தில் நீதியை, அன்பை - பகிர்வை - சமத்துவத்தை - சகோதரத்துவத்தை - உண்மையை நிலை நாட்டிட சாதி - சமயம் - இனம் - மொழி கடந்து நிலை நாட்டிட, உமது துயரங்கள் முன்பு என் துன்பம், துயரம் ஒரு சிறு தூசு என்பதை உணர்ந்துக் கொண்டேன். இதே சிந்தனையுடன் சமுதாயத்தை நோக்கிச் செல்கிறேன்.

"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்" (லூக் 6:36) எனும் மறைவாக்கை என் இதயமதில் ஏந்தி நொறுங்குண்ட உள்ளங்களை நாடிச் செல்கிறேன் என் அன்பு இயேசுநாதரே.

இத்தவக்காலம் அருளின் காலம்! எனக்கு வரும் துன்பங்களை எவ்வாறு பொறுமையோடு நான் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் உமது இதயத்தின் தாழ்ச்சியும், சாந்தமும் என்னை உமதருகே குவித்துள்ளதையும் உணர்கிறேன் என் இயேசுவே

என் ஆண்டவரே! உமது சிலுவை எனது சிலுவையாகட்டும்! உமது கொடிய வேதனை எனது வேதனையாகட்டும்! உமது துன்பங்கள் எனது துன்பங்களாகட்டும்! உமது மரணம் என் முடிவில்லா வாழ் வாகட்டும்! உமது சிலுவையினடியில் நின்ற அன்பு தாயுடனும், உமது அன்பு சீடர் புனித யோவானும் கைக் கோர்த்து தைரியத்துடனும் வலிமையுடனும் பற்றுறுதியுடனும் உம்மைப் பின் தொடர்ந்து உறுதியுடன் இவ்வுலக வாழ்வை வென்றிடும் வரம் தாரும். மரியன்னையின் மாசற்ற இருதயத்துடனும் , உம் திரு இருதயத்துடனும் விசுவாசத்துடன் ஒன்றித்திருக்கும் அருள்தாரும்.

தூய ஆவியாரின் நல்லாளுகையில் இறை மனித - உறவில் மனுக்குலம் சிறந்திட வரம் தாரும் ஆமென். முற்றும்

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்