செயல் புதிது! பொருள் புதிது!!

அ.அல்போன்ஸ்-திருச்சி

யோவான் நற்செய்தி.

விண்ணரசின் நுழைவாயிலில் நின்று வரவேற்கும் வார்த்தைகள். ஆன்மீக தேடலின் எழிலார்ந்த கோலங்கள். முதல் பாதியில் கடவுளை ஒளியாக காண்பித்த யோவான் மறு பாதியில் கடவுளை – கடவுளின் மகனாக காட்டுகின்றார். எப்போதும் எல்லாவற்றிலும் உச்சகட்டங்களை நோக்கி செல்வது காவியங்களின் இயல்பு அந்த வகையில் நற்செய்தியில் இயேசுவின் வாழ்வும் உச்சகட்டத்தை நோக்கி நகருகின்றன.

எல்லையென்றின்மை என்ற பொருளதனை நற்செய்தியில் காணமுடிகிறது. அன்பிற்கு எல்லை உண்டா? - பக்தி எல்லை உண்டா? - ஆசைக்கு எல்லையுண்டா? துரோகத்திற்குத்தான் எல்லையுண்டா?

இயேசு - மரியாள் - பேதுரு - யூதாஸ் - பிலாத்து - கைப்பாஸ் போன்றவர்கள் வாழ்க்கையின் சில பரிமாணங்களின் ஆழ்ந்த படிமங்களாகவே நற்செய்தியில் பதிந்து உள்ளனர்.

இங்கே அன்பு அன்பு என்று கூறிய இயேசு அன்பின் எல்லையை நாம் உணரும் வண்ணம் உணர்த்தும் வண்ணம் யோவான் ஒரு காட்சியைக் காட்டுகின்றார். கடைசி இரவு திருவிருந்து - இயேசு சீடாகளின் பாதங்களை கழுவும் காட்சி. இது வித்தியாசமான காட்சி வாழ்வியலில் அன்பும் அதன் ஆழமும் நேயமிக நெருக்கமும் காட்டும் காட்சி. இயேசு கழுதைக்குட்டியின் மேல் அமர்ந்து ஜெருசலேமுக்கு வரும் பொழுது ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி - இஸ்ராயல் அரசர் வாழி - தாவீதின் மகனுக்கு ஓசன்னா என்று ஆர்ப்பரித்து வரவேற்றனர்.

washing the feet திருவிருந்தில் சீடர்களுடன் கலந்து கொண்டு இயேசு சீடரின் பாதங்களை கழுவினார் என்று ஒரு வரியில் கூறக்கூடிய ஒரு செயலை - அன்பின் எல்லையை - செயலால் அனைவரும் புரியும் வண்ணம் இயேசு என்னசெய்தார் என்பதை யோவான் மிக தெளிவாக எழுதுகின்றார்.

 இயேசு 
 பந்தியிலிருந்து எழுந்து 
 மேலாடையை களைந்துவிட்டு
 ஒரு துண்டை எடுத்து 
 இடுப்பில் கட்டிக்கொண்டார்
 ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 
 சீடரின் பாதங்களை கழுவி
 இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்க தொடங்கினார்  (யோவான் 13: 4-5)

ஒரு வரியில் கூறக்கூடிய ஒரு செயலை அழுத்ததிருத்தமாக ஏழு செயல்களில் நிறைவு செய்கின்றார் - இது போல இயேசுவின் செயல்களை இவ்வளவு விரிவாக, தெளிவாக, அடுத்தடுத்து செய்யும் சிறிய செயல்களையும் எந்த நற்செய்தியிலும் யாரும் கூறவில்லை. இப்படி கூறுவதற்கு காரணம் இயேசு தன் பணியை – சேவையை விழிப்புணர்வுடன் செய்வதை நாம் உணரும் வண்ணம் யோவான் கூறுகின்றார்.

இயேசு தன் முடிவை – மரணத்தை தெரிந்து கொண்ட பின் தன்னை பேதுரு மறுதலிப்பார் என்று தெரிந்தும் யூதசங்கத்துடன் யூதாஸ் காட்டிகொடுக்க திட்டமிட்டுள்ளான் என்பதை அறிந்தும் கைது ஆகும் நேரத்தில் சீடர்கள் ஓடிவிடுவார்கள் என்று தெரிந்தும் அன்பை வெளிக்காட்டுவதற்கு அவர்களின் பாதங்களை கழுவுகின்றார்.

woman at feetபெத்தானியாவில் மரியாள் விலையுயர்ந்த நல்ல பரிமளதைலம் கொண்டு வந்து இயேசுவின் பாதங்களில் பூசி அவற்றை கூந்தலால் துடைத்த ஈரம் கூட காயவில்லை தாவீதின் மகன் - இஸ்ராயலின் அரசர் தன் சீடர்களின் பாதங்களை கழுவுகின்றார்.

சீடர்களின் பாதங்களை கழுவும்பொழுது – இது கருணையின் நிலையமான இயேசுவின் பெருமித பொழுது பணிவை – சேவையை உணரும் மகத்தான அத்தியாயமாய் மனிதத்துவத்தின் ஒளிப்பேழையாய் நிலைக்கிறது இந்த காட்சி.

இப்படி ஏழு செயல்களில் நடக்கும் நிகழ்ச்சி மூன்று செய்திகளை கூறுகின்றது.

முதலாவது தெய்வம் மானுடனாக வந்த நிகழ்ச்சி

இயேசு பந்தியிலிருந்து மேலாடையை களைந்து விட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். ஆம் கடவுளின் குமாரனாகிய இயேசு தந்தையிடமிருந்து இறங்கி – தெய்வநிலையை விட்டு இறங்கி மனித நிலையை ஏற்றுக்கொண்டது. மேலாடையை களைந்து, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டதை ஒத்திருக்கின்றதா?

புனித பவுல் இதைத்தான் தன் திருமுகத்தில் எழுதுவார் "கடவுள் தன்மையில் விளங்கிய அவர் (இயேசு) தம்மையே வெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார் (பிலி: 2:6-7)" யெருசலேம் வீதிகளில் நடந்து வந்து வீட்டிற்கு திரும்பும் பொழுது செம்மண் படிந்த பாதங்களை அவ்வீட்டில் வேலை செய்யும் அடிமைதான் நீரால் கழுவுவார்கள் அதைப்போல்தான் இயேசு சீடர்களின் பாதங்களை அடிமையின் தன்மை பூண்டு கழுவுகின்றார்

இரண்டாவது இதே செயல் மீண்டும் மனிதன் தெய்வமாகும் நிகழ்ச்சியையும் கூறுகின்றது

.
இயேசு சீடர்களின்
பாதங்களை கழுவியபின்
தம் மேலாடையை அணிந்து கொண்டு
மீண்டும் பந்தியில் அமர்ந்தார் (யோவான் 13:12)

இங்கே கல்வாரியில் தந்தையின் விருப்பத்தை பலியாகி நிறைவேற்றிய பிறகு மூன்றாம் நாள் மீண்டும் தெய்வநிலையை அடைந்தார். உயிர்த்தெழுந்து தன் தந்தையுடன் வலபக்கத்தில் அமர்ந்தார். இயேசு தெய்வத்திலிருந்து மானிடனாக வந்ததையும் பின் மானிடம் தெய்வமாக தந்தையுடன் சேர்ந்ததையும் பாதங்களை கழுவும் நிகழ்ச்சிவாயிலாக மனிதநேயத்திற்கு புதுப்பொருள் காணும் நிகழ்வில் இறையியல் நெறியை காணுமாறு யோவான் எழுதுகின்றார்.

இறையியல் நிலையை - பாதங்களை கழுவும் நிகழ்வில் கண்ட நாம் வாழ்வியல் நெறியையும் மூன்றவதாக போதிக்கின்றார்.

பொதுவாக நாம் நான் எனது எனும் அகங்காரங்களுக்கு உட்பட்டு இன்ப துன்ப அனுபவங்களைப் பெறுகிறோம் மனிதனுக்கு முதலில் ‘நான்’ என்னும் அகங்காரம் பிறக்கிறது அதன் தொடர்பாய் எனது எனும் மமகாரம் பிறக்க ஆன்மா பந்தப்படுகிறது. முக்தி நிலையில் மறுதலையாய் மமகாரம் முதலில் நீங்க அகங்காரம் பின்னால் நீங்குகிறது. இப்பொழுது நிகழ்ச்சிக்கு வருவோம் எனது என்னும் மமகாரத்தின் உச்சநிலை ஆடை களைவருபோல் களைவது மமகாரத்தின் நிலையை எனதை களைவதாகும் பின்பு சீடர்களின் பாதங்களை கழுவும்பொழுது ‘நான்’ என்னும் எண்ணத்தின் குறியீடுகள் விலகுகின்றது.

நான் எனது என்பவை நீங்கி, மாசு நீங்கி ஆன்மா தூய்மைப்படுகின்றது வாழ்வியலின் ஆழமான பொருளை இயேசு செய்து காட்டிய செயல் வழியாக உணரலாம். இயேசு கூறுவார் “நான் செய்ததுபோல் நீங்களும் செய்யுங்கள்” பாதங்களை கழுவியபின் கூறுகின்றார். (யோவான் 13:15) நாமும் செய்வோம்


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்