நீதியின் குரல்
அ.அல்போன்ஸ்-திருச்சி
விவிலியத்தில் உள்ள ஒவ்வொரு சிறுசிறு சம்பவமும் மனதில் பதிந்து அறநெறிகளை உணர்த்துவதோடு உள்ளத்தையும் உருக்குவதாக அமைகிறது. இயேசுவின் வழக்கில் நாம் சந்தித்திட்ட சந்தர்ப்பவாதங்கள், சறுக்கிவிழுந்த சாட்சியங்கள் முண்டாசுகட்டிக் கொண்டு திரியும் யூதசங்கத்தின் முரண்பாடுகள், முதுமை தட்டிப்போன அன்னாசின் முரட்டு குணம் கொண்ட வெறியாட்டம் இன்று பிலாத்துவின் முன்பு வந்துசேர்ந்தது இயேசுவின் இரத்த வழக்கு.
இயேசுவை நீங்களே தீர்ப்பளியுங்கள் என்று யூதர்களிடம் சொன்னான். ஏற்கவில்லை அவர்கள். ஏரோதிடம் அனுப்பினான். அவனோ எள்ளி நகையாடி திருப்பிவிட்டான். வேறுவழியில்லை. குற்றம் ஒன்றும் காணவில்லை என்று பலமுறை கூறியும் கேட்காததால் கடைசியாக பிலாத்து நீதியின் இருக்கையில் அமாந்தான்.
அப்பொழுது... ஒரு தூது,
பிலாத்துவின் மனைவி கிளாடியாவிடமிருந்து ஒரு சேதி. அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். அவர் பொருட்டு கனவில் துன்புற்றேன். கிளாடியா வரையப்படாமலே வாயால் மட்டும் பேசப்பட்ட வடிவோவியம். நீதி என்று நெஞ்சில் பட்டதை கூறி கணவனை எச்சரிக்கின்றாள்.
வழக்காடு மன்றங்களில், வாதங்களில், தீர்ப்பில் கலந்து கொள்ள எந்த ஒரு பெண்ணுக்கும் உரிமையில்லை. இதுபோல நீதிமன்றத்தில் சேதி அனுப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும். அதுவும் முக்கியமான தீர்ப்பு கூறுவதற்கு முன் கூறுவது அதைவிட குற்றம்.
கிளாடியா! அகஸ்டஸ் சீசரின் தவப்புதல்வி. ஜூலியாவின் இளையமகள். பிலாத்துவின் மனைவியானாள். அதனால் தான் பிலாத்து ஆளுனரானான்.
ஜெருசலேம் திருவிழாவுக்காக வந்தவள் இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டிருப்பாள். அவர் வார்த்தையை கேட்டிருக்ககூடும். கனவிலே துன்ப பட்டிருப்பாள்.
பிலாத்துவின் அரண்மனையில் சோகம் வந்தது. சோதனை வந்தது. பாசமும் அதன்பின் எழுந்த ஆசாபாசமும் பிலாத்துவை மோசம் செய்துவிட்டன. தன் மனைவி அனுப்பிய தூதை நிராகரித்தான். அநியாயம் செய்து நியாயத்தை கொன்றுவிட்டான். குற்றம் ஒன்றும் காணேன் என்று மரணதீர்ப்பிட்ட இவன்தான் வரலாற்றில் முதல் நீதிபதி, நீதி தராசின் முள்ளே நெஞ்சில் குத்திய கதை.
எதிர்வாதம் இல்லாத வழக்கு இது. ஏனெனில் வாதிட்டு கொண்டிருப்பது வாய்மை மட்டுமே. இயேசு மீது வழக்கு போட்டவர்கள் தீர்ப்பு வந்ததும் தெரிந்து கொண்டார்கள் இயேசுதான் நீதிபதி என்று. இதை முன்னரே அறிந்தவள். அறிவித்தவள் கிளாடியா.
-விவிலியத்தில் பெண்களே ஒவ்வொரு திருப்பத்தையும் உருவாக்குகின்றார்கள், ஏவாளின் செய்கையால் விண்ணரசு மறுக்கப்பட்டது. இதோ உம் அடிமை என்ற மரியாளின் செயலால்தான் நாம் அடிமைதனத்திலிருந்து விடுதலையை கண்டோம்.
இயேசு “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்களுக்குப் போடுவது முறையல்ல” என்று முதலில் தன் இஸ்ராயல் இனத்திற்காகத்தான் வந்ததாகக் கூறினார்.
ஆனால் வாழ்நாள் முழுமையிலும் அவரை மெசியாவாக, நீதிமானாக, - குற்றமற்றவராக எந்தவித நிர்பந்தமோ, வேத விளக்கங்களோ இன்றி விசுவசித்தது மட்டுமல்லாமல் அதை அறிவிக்கவும் செய்தார்கள் புறவினத்தார்.
இஸ்ராயல் இனம் மௌனமாக இருந்த பொழுது இயேசுவுக்குச் சாட்சியாக மாறிய காட்சி வரலாற்றின் அதிசயம். புறவினத்தாரில் சமாரிய பெண்ணைப் பார்த்தோம். அவள் இயேசுவுடன் உரையாடினாள். ஊருக்கு மெசியாவென அறிவித்தாள். கிளாடியா கனவில் தான் கண்டாள். மனைவி கூறியதை மதிகெட்ட பிலாத்து ஏற்கவில்லை.
கிளாடியாவின் உருவம் தெரியவில்லை . அவள் குரலே ஒரு வீரனால் உரைக்கப்பட்டது. பிலாத்துவின் மனது கரைக்கப்பட்டது. ஆனாலும் தீர்ப்பின் நியாயம் மறைக்கப்பட்டது.
அவளின் அறிமுகமே வழக்காடு மன்றத்தில்தான். அந்த நியாயமலரின் நேர்மை இதழ் கசக்கப்பட்டுவிட்டது. அவள் பாசத்தின் இலக்கணம். பயமறியா பேரிலக்கியம். இயேசுவின் வல்லாண்மையின் எல்லையை தொட்டு காட்டுகின்றாள். முடிந்த முடிவாக ஒரு முடிவும் செய்கிறாள். நீதிபதியை எச்சரிக்கை செய்கிறாள். - அச்சம் இல்லாத அவள், புறவினத்தாரின் புதிய கீதம் மானிடர்க்கு உரைகல் - ஒரு உதாரணம்.