"ஒளியைத் தேடி" கவிதை
அ.அல்போன்ஸ்-திருச்சி
கதரோன் சிற்றோடை சலசலவென ஒடியது
இரவு உணவுக்கு பின் ஓடையைத்தாண்டி ஓலிவமலை ஏறி கெத்சமேனி வனம் வந்தார் ஏசு
ஏசு சுதந்திரமானவர் எவர் வீட்டு மாடியிலும் அவருக்கு இடம் உண்டு
தனிமையில் தவம் தந்தையுடன் ஜெபம் சீடர்கள் விண்ணரசின் வண்ணக் கனவுகளுடன் ஆழ்ந்து உறங்கினார்கள்
கண்ணீராய் வியர்வையாய் இரத்தமாய் சொற்களில் சொல்லமுடியாத ஒர் தெய்வீகமாய் பாத்திரம் விலக பரமனிடம் வேண்டினார்
தந்தையின் விருப்பம் நிகழ்ந்தாக வேண்டும் தந்த பாத்திரம் குடித்தாக வேண்டும்
லாசர் உயிர்த்ததில் குருடர் பார்ததில் ஆலயத்தில் அதிரடியாய் சவுக்கை எடுத்ததில்
எரிமலையாய் சதுசேயர் எரிநட்சத்திரமாய் பரிசேயர் எரிஈட்டிகளாய் தலைமை குருமார்கள்
அன்னாஸ் கைப்பாஸ் நெற்றி புருவங்கள் நெளிந்து போகிற அளவுக்கு தாவீதின் மகனை சிந்தித்து சிந்தித்து சீறிக் கெண்டிருந்தனர்
அன்னாஸ் இவன் ஓரு மகாபாரத சகுனி தாயம் போடாமலே காயை நகர்த்துபவன்
கைப்பாஸ் இவன் அன்னாஸின் மருமகன் கொல்ல துடிப்பது இயேசு பெருமான்
விவிலிய மொழியில் இருவரும் விரியன் பாம்பின் குட்டிகள்
யூதாஸ் இவர்களின் துரோக வலையில் வீழ்ந்திருந்தான் பகலில் பிடித்தால் மக்கள் புரட்சி இரவுக்காக விழித்திருந்தனர் யூதாசும் வீரர்களும் ரகசியமாய் அந்த அதிசயத்தை பிடிக்க
ஆக சகிதமாய் அறநூறு வீரர்களோடு ஒரு குறும் படை கூடவர வழி நடத்தி வந்தான் வஞ்சக யூதாஸ்
ஆயனைப் பிடிக்க ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள் - கைகளில் விளக்கேந்தி இரவோடு இரவாக உலகின் ஒளியை பிடிக்க வந்தனர்
கிதரோன் ஓடை அலறியது காட்டு குயில்கள் கத்தின மரச் சருகுகள் எச்சரித்தன முயல் குட்டிகள் பதைபதைத்தன
காலடி ஒசைகள் அருகில் வரவர
ஒருபுல்லின் மீது பனித்துளி இறங்குவது போல் மலைக்குன்றின் மீதிருந்து இயேசு இறங்கிவந்தார்
முத்தமிட்டான் யூதாஸ் மௌனமாய் எதிரொலித்தது ஓலிவமலை எங்கும்
இயேசுவின் முகத்தில் இரக்கம் யூதாஸின் முகத்தில் இறுக்கம் ஆச்சிரியந்தான் ஒளியை முத்தமிட்டது இருள்
இயேசுவின் இதயத்தில் முதல் முள்கிரிடம் - இந்த முத்தம் தான் முத்தத்தின் விலை முப்பது வெள்ளிகாசுகள்
யாரைத் தேடுகிறீர்கள் நாசரேத்தூர் இயேசுவை
வாழ்வு தரும் வார்த்தைக் கேட்டு பூகம்பம் வந்ததது போல் பூமியில் விழுந்தனர் வீரர்கள்
தாவீதை காட்டி கொடுக்க நினைத்த அகத்தேப் என்று சாமுவேல் ஆகமம் வாசித்தது
தாவீதின் மகனுக்கு யூதாஸ் என்பதை நான்கு நற்செய்திகளும் எட்டு திசைகளில் ஏதிரொலித்து
சீடர்கள் சிதறி ஓடினர் ஓடின ஆடுகள் எங்கே என்பதை விவிலிய பக்கங்கள் எங்கும் காணவில்லை
ஞாயிறு காலை கோவேறு கழுதை மீது யூதர்கள் ராஜாவாக வழியெங்கும் வாழ்க்தொலிக்க கோலாகல ஊர்வலம்
வியாழன் இரவு கைதிபோல் கைகளை இறுக கட்டி ராஜ துரோகியாக இழுத்து சென்றனர்
இரவோடு இரவாக இரக்கம் இல்லாமல்
இதயமே வலிக்கிறதே
இந்த பாடுகளுக்கு காரணம் உண்மையில் நம் பாவங்கள்தான் என்பது பொய்யின் நிழல்படாத நிஜம்
கிதரோன் ஓடை மென்மையாக தண்மையாக கண்ணீரோடு ஓடிக்கொண்டிருக்கிறது....