மண்ணை தொடாத மழைத்துளி.
அ.அல்போன்ஸ்-திருச்சி
கடவுளே மனிதனாக வந்து மனிதனாக வாழ்ந்து மற்ற மனிதர்களை போலவே துன்புற வேண்டியுள்ளது. மனிதவழியிலேயே தானும் வாழ்ந்து விண்ணரசு அடைவதைக் காட்டவேண்டியுள்ளது. நாம் வாழ்வின் உயர்வு நிலையை அடைய வேண்டுமாயின் இயேசு மனிதனாகத்தான் வரவேண்டும் அப்பொழுதுதான் மானிடவாழ்வின் திறத்தை உணர்ந்து மனிதனும் தெய்வமாகலாம் என்று நம்பமுடியும். இயேசுவை ஒரு விதமான இரட்டை குவிமையத்தில் (DoubleFocus) வைத்து காட்டுகின்றனர் நற்செய்தியாளர்கள் கடவுளின் மகனாக ஒரு குவிமையத்திலும் மனிதனாக ஒரு குவிமையத்திலும், இரு வேறு கோணங்களிலும் வெகுதிறமையாக பகுத்து காட்டப்படுகின்றதை நற்செய்தியில் அறிகின்றோம்.
கடவுள் மகனாக:இயேசுவிடமிருந்து வந்த ஒரு வார்த்தையில் நோய் நீங்கியது, பேய் ஓடியது, இறந்தவர் எழுந்தார், நீர் இரசமானது, அப்பம் பலுகிபெருகியது, மலையில் மறு உருவமானார், கடலில் நடந்தார், புயலை அடக்கினார், இந்தநிகழ்சிகளில் கடவுள் மகனாகப் பார்கிறோம்,
மனிதனாக: துணிகளில் பொதிந்து வைக்கப்பட்ட குழந்தை, இயேசு பயணத்தால் களைத்து யாக்கோப்பின் கிணற்றருகில் அமர்ந்தார். (அரு 4:2) நாற்பது நாள் தவம் செய்தபின் பசியுற்றார்.(மத் 4:2) புடகில் தூங்கிக்கொண்டிருந்தார்(மாற்கு 4:38) சொந்தஊரில் விசுவாசம் இல்லாததைக் கண்டு வியப்புற்றார்,(மாற்கு 6:6) தனிமையில் சென்று செபித்தார்(மாற்கு 1:35) பரிசுத்த ஆவியினால் மகிழ்ந்தார்(லூக்கா 10:21) யூதர்கள் அழுவதைப் பார்த்து இயேசு மனம் குமறி கலங்கினார்(அரு 11:33) சிலுவையில் தாகமாயிருக்கிறது என்றார். (அரு 19:28)
மனித உணர்வுகளின் மையமாக விளங்கிதன் மானுட இயல்புகளை மீண்டும் மீண்டும் நிறுவுகிறார். சீடர்களிடம் தன்னை குருவாக கொள்ளாமல் நண்பனாக சகோதரத்துவமாக காணுங்கள் என்ற இயேசு தன்னை காட்டி கொடுக்கவந்த யுதாஸையும் ‘நண்பனே’' என்றழைத்து மனித நேயத்துக்கு புதுப்பொருள் காண்கிறார்
இயேசுவின் மனிததன்மையும் தெய்வதன்மையும் தொட்டுகாட்டும் சில இடங்களில் கல்வாரியும் ஒன்று. இங்கு இயேசு கூறிய வார்த்தைகளை கவனமாக சிந்தனை செய்வோம் பிதாவே இவர்களை மன்னியும் என்ற பொழுதும் பாவியான கள்ளனுக்கு இன்றே என்னுடன் விண்ணரசில் இருப்பாய் என்ற பொழுதும் இயேசு தந்தையின் ஒரே மகனாக - கடவுளின் மகனாக - தந்தையோடு ஒன்றித்து ஒப்பரவாகி இருந்ததால் பிதாவே பிதாவே என்றழைக்கிறார். விண்ணரசிலும் கள்ளனுக்கு இடம் தருகின்றார் ‘நானும் தந்தையும் ஒன்று’ என்ற நிலையை வெகு தெளிவாக மேற் சொன்ன வார்த்தைகளால் காண்கின்றோம்.
ஆனால் இயேசு வந்த காரணமே நம் பாவங்களுக்காக பலியாகவும் அதன் பயனாக இறையரசு அனைவருக்கும் கிடைக்கவேண்டியே தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற பலியாக வேண்டும் பாவநிழல் சூழ்ந்த மனிதனாக பலியாக வேண்டும் .
இயேசுவோ மாசற்ற நிலையில் அல்லவா உள்ளார் ?
இயேசு பாவங்களுக்கு பலியாக பாவங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையை எங்கு காண்கின்றோம்?
இயேசு தலையில் எண்ணை ஊற்றி அபிஷகம் செய்யும் பொழுது தன்னை அடக்கம் பண்ணுவதற்கான அடையாளம் என இயேசுவின் வாய்மொழியாக காண்கிறோம்.
அதைப்போல் பாவங்களை ஏற்ற நிலையை எங்கு காண்கிறோம்.
இங்கே ஒன்றை கவனியுங்கள்
மாற்கு நற்செய்தியும் மத்தேயு நற்செய்தியும் வெகு தெளிவாக கூறுகின்றார்கள் (மத் 27:46, மா 15:35)
என் கடவுளே என் கடவுளே ஏன் என்னை கைவிட்டீர் என்று உரக்க கூவுகின்றார்.
இயேசுவை தன் ஒரே மகனை கடவுள் கைவிட்டுவிட்டாரா?
யோர்தான் நதியில் என் அன்பான மகன் என்று குரல் கொடுத்தவர் இப்பொழுது கைவிடக் காரணம் என்ன?
இயேசுவின் மீது பாவங்கள் சுமத்தப்படுகின்றது. உலகின் பாவங்கள் உலகின் ஒளியின் மீது ஏற்றப்படுகின்றது. பாவஇருள் சூழ்கின்றது. இரண்டு நற்செய்திகளும் கடவுள் கைவிட்ட அனுபவத்தைக் கூறும் பொழுதே ஒரு நற்செய்தியையும் குறிப்பிடுகின்றார்கள் “நண்பகல் தொடங்கி மூன்றுமணிவரை நாடெங்கும் இருள் உண்பாயிற்று.” (மத் 27:45, மாற்கு15:33) இயேசு மனிதநிலையில் பாவங்களை ஏற்ற நிலையில் கடவுள் கைவிட்டது ஆச்சிரியமில்லை. அவர் கைவிட்டதை வேறு யாரும் அறிவிக்கவில்லை அவரே கூறுகின்றார். அடக்கம் பண்ணவதை அபிஷகம் செய்யும் நிகழ்ச்சி அறிவுறுத்துகிறது. அவர் பாவத்தின் பலியாக மாறுவது இருள் சூழ்ந்த பொழுது அறிகின்றோம். கடவுள் மனிதகுலத்திற்கு சேதி சொல்வதற்கு இருளை அனுப்புகின்றார். ஆதியாகமத்தில் இருளை உண்டுபண்ணி ஆபிரகாமுக்கு பின் வரும் சந்ததியைப் பற்றி கூறுகின்றார் (ஆதி 15:12-28) இஸ்ராயலரை காப்பாற்ற மோயீசன் வழியாக எகிப்து தேசம் எங்கும மூன்றுநாள் இருள் உண்பாயிற்று (யாத் 11:22)
இருள் பரவியதன் மூலமாக இயேசு பாவங்களை ஏற்றுக்கொள்வதையும் தந்தையும் அதனால் கைவிட்டதையும் காண்கிறோம். கல்வாரியில் இந்த இடத்தில் உள்ள நுட்பத்தை காணவேண்டும் யூதர்களுக்கு மன்னிப்பு கேட்கும் பொழுது பிதாவே பிதாவே என்று கூறுகின்றார். கைவிடப்படும் பொழுது கடவுளே கடவுளே என்று கதறுகின்றார். மீண்டும் தன் ஆவியை சமர்ப்பிக்கும் பொழுது “தந்தையே! உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்” என்று கூறுகின்றார். இயேசு ‘ஏன் என்னை கைவிட்டீர்’ என்று தந்தையிடம் இரண்டு முறை கூறுகின்றார் ஏன் இரண்டு முறை? இயேசு கடவுளின் மகனாகவும் மனிதனாகவும் வாழ்ந்ததால் தந்தை இயேசு மனித பாவத்தை ஏற்றஉடன் கடவுளின் மகனையும் கைவிடுகின்றார் மனித நிலையில் வாழும் இயேசுவையும் கைவிடுகின்றார்.
இயேசு பாவம் தொடாத மனிதன். பாவம் அவர் மேல் சுமத்தபட்டது
இயேசு மண்ணை தொடாத மழைத்துளி.