மௌனமாக நிற்கின்றார்
அ.அல்போன்ஸ்-திருச்சி
பிலாத்து ….
உரோமை ஆளுனன்
நெஞ்சை அடகு வைத்த நீதிபதி
சூரைக்காற்றில் அகப்பட்ட பஞ்சுபோல்
யூதசங்கத்தின் பொறாமை புயலில்
அகப்பட்டவன்
ஒருகுற்றமும் இயேசுவிடம் காணவில்லையென்று ….
ஒரு செம்மறியை ஒநாயென்று எண்ணி
மரணதண்டனை கொடுத்தவன்
எடைகற்களையே எடைபோட எத்தனித்தவன் ஒருபுறம்
நிலைத்த கோபம், கொதிக்கின்ற உள்ளம், நெருப்பு கக்கும் விழிகள்,
படபடக்கும் சொல் ஆகியவை எல்லாம் சேர்ந்த யூதசங்கம் மறுபுறம்….
இவர்களின் நடுவே குற்றவாளியாக இயேசு
தர்மம் தலைகுனிந்து நிற்க
அதட்டலாக அதர்மம்…
யூதசங்கம் இயேசுவை கொல்லுவதற்கு பலகாய்களை நகர்த்தியது
அவருடைய சீடரை கைக்கூலியாக்கி சட்டத்திற்மாறக வழக்குகொன்றும்
யாரும் தொடுக்காமலே நடு இரவில் பிடித்து
தலைமைகுரு அல்லாத அன்னாஸின் வீட்டில் முதல் விசாரணை
பின் கைப்பாஸிடம் ஒரு விசாரணை
விடியற்காலையில்
யூத சங்கம் ஒன்று கூடி மரணதண்டனை தீர்ப்பு .
அதை செயல் படுத்தவேண்டி
பிலாத்துவிடம் உத்தரவு தேவைபட்டதால்
குற்றப்பத்திரிகையை மாற்றி கொடுத்து
சாவுக்கு ஏதுவான மரணதண்டனை
கொடுப்பகற்கு இயேசுவை கட்டி இழுத்து வந்தனர்
பிலாத்து உனக்கு எதிராக இத்தனை சான்றுகள் கூறுகின்றார்களே
உன் காதில் விழ வில்லையா? என்ற பொழுதும்
‘உண்மையா அது என்ன?’ என்ற பொழுதும்
இயேசு மௌனமாக நின்றார்.
அவரோ ஒன்றுக்கும் பதில் செல்லவில்லை(மத் 27:14)
ஏன் இந்த மௌனம்… ?
இயேசுவுக்காக வாதிட யாரையும் வைத்து கொள்ளவில்லை
அவர் எதிர்வாதமும் செய்யவில்லை
மௌனம் - சட்டத்தின் முன்பு சம்மதத்திற்கல்லவா அறிகுறி.
இயேசுவின் வாழ்வில் ஒரு நிகழ்வை பார்ப்போம்.
பரிசேயர்கள் வம்பு சண்டை ஒன்று இழுப்பதற்காகவே
விபசாரபெண்ணை அவர் முன் நிறுத்துகிறார்கள்
இயேசுவை பிடிப்பதற்கு அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார்கள்
மோயீசன் சட்டத்தின் படி கல்லால் எறிந்து கொல்லலாமா?
அல்லது உமது வழியின் படி மன்னிப்பா?, என்று
கற்களை கையில் வைத்துக் கொண்டு கேட்டார்கள்.
இயேசுவின் பதில் அவர்களை திகைக்கவைத்தது.
உங்களில் பாவம் செய்யாதவர் முதல் கல்லை எறியுங்கள் என்று கூறியதால்….
பரிசேயர் செசாருக்கு வரி கொடுப்பது முறையா? என்ற கேள்விக்கும்
செசாருடையதை செசாருக்கும் கடவுளுடையதை கடவுளுக்கும் செலுத்த சொன்னார்
இவ்வாறு ஒவ்வொரு முறையும் தெளிவாக பதில் கூறியவர்
இம்முறை ஏன் பதில்கூற வில்லை…..
இயேசு தந்தையுடன் ஒன்றியதாக கூறுவார்
நானும் தந்தையும் ஒன்று என்று தந்தையுடன் உறவை கூறியவர்
நம் மோடும் ஒன்றாக உறவை கண்டவர்
எனக்குள் கிறிஸ்துவும் கிறிஸ்துவுக்குள் நானும்
என்ற ஒன்றிப்பை காண்கின்றோம் .
இயேசு மௌனமாக நிற்பதற்கு விடை காண்போம் .
இந்த விசாரணை கேள்விகள் வழக்குகள் இயேசுவுக்கல்ல நமக்கு.
நம் ஒவ்வொருவருக்கும்.
இயேசு நிற்பது நமது பாதணிகளில் - நமக்கு பிரதிநிதியாக
நம் பாவங்களை அணிந்து கொண்டு
மௌனமாக நிற்கின்றார்
பாவம் செய்த நாம் பதில் கூற வழி ஏது?
நாம் செய்த பாவங்களுக்கும் இந்த தண்டனை
பரிகாரம் இயேசு ஏற்று கொண்டபொழுது மௌனமாக நிற்கின்றார்
பலியானார் காணிக்கையானார்.
இயேசுவின் மரணம்
கடவுளின் பார்வையில் பரிகாரச்சாதனமாக இரத்த பலியாக்கினார். (ரோம. 3:25-26)
இயேசுவின் பார்வையில் தன்னை தந்தையின் விருப்பத்திற்கு கீழ்படிந்து பலியாக -
காணிக்கையாக - பரிகாரமாக (பிலி2:8)
யூதர்களுக்கு இது திட்டமிட்ட கொலையாக..
சாத்தனுக்கு ஏதோன் தோட்டத்தில் வெற்றியாக (ஆதி 3:15)
கல்வாரியில் தோலிவியில் முடிந்தது..
விசுவாசிகளுக்கு அநியாயத்திற்கு ஒரு பதிலாக இறந்தார்
பாவங்களின் பொருட்டு ஒரேமுறையாக இறந்தார் (1பேதுரு 3:18)
விவிலியம் ஒவ்வொரு பக்கத்திலும்
ஞானம் ரத்தின கம்பளம் போல் விரித்து வைக்கப்பட்டிருக்கின்றது.
மனிதர்கள் இழக்ககூடாத செல்வமான விண்ணரசை இழந்து
தோட்டத்தை விட்டு வெளியேறி
வெறும் சூனியமாகி போன மனித சழுதாயத்தை மீட்பதற்கு
தெய்வமே மனிதனாக வந்த வரலாறுதானே இது.
இதில் விசனங்கள் இருந்தன
வியாக்கியானங்கள் இருந்தன
விசயங்கள் இருந்தன
வாழ்வு தெரிந்தது
வழி புரிந்தது
உயிர் வந்தது
உயிர்ப்பு வந்தது
தினமும் விவிலியம் வாசிப்போம் ...