மெய்வண்ணம் காண்போம்.
அ.அல்போன்ஸ்-திருச்சி
கடவுள் மனிதனாக வந்து, மனிதனாக வாழ்ந்து மற்ற மனிதர்கள் போலவே துன்புற வேண்டியுள்ளது பிறர்க்கெல்லாம் தான் வகுத்த வழியிலேயே தானும் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டி செம்மை நிலை அடைவதை கல்வாரியில் காண்கிறோம்.
கல்வாரியில் சிறிது தூரத்தில் இருந்தபடியே கண் சிமிட்டும் நட்சத்திரம் போல் ஒரு நிகழ்ச்சி. மனித மீட்சிக்கும் மனித வெற்றிக்கும் ஒங்கி குரல் கொடுக்கும் ஒப்பற்ற நிகழ்வு இது.
இயேசுவை சிலுவையில் தரிசிக்கின்றோம் இடது பக்கம் உள்ள கள்ளன் தெளிந்து வரமுடியவில்லை இவன் தன் கழுத்தில் எந்திரக்கல்லை கட்டி தொங்கவிட்டு நடுக்கடலில் விழுந்தவன்.
வலதுபக்கம் நல்ல கள்ளன் முதலில் வருபவனுக்கு மட்டுமே விண்ணரசு என்னும் முன்னுதாரணம் எதையும் விவிலியம் கூறவில்லை. மாறாக முதலானோர் பலர் கடைசியாவர் கடைசியானவர் பலர் முதலாவர் என்பதற்கு விளக்கமானான். இவன் ஊசியின் காதில் நுழைந்த ஒட்டகம்.
தூரத்தில் ஒருவன் செந்தூரியன் நுற்றுவர் தலைவன் கல்வாரியில் இயேசு இறக்கும் பொழுது அவனை சற்றி எண்ணற்ற மகத்தான மாறுதல்கள் நிகழ்ந்து கெண்டிருந்தன ஆலயத்தின் திரை கிழிந்து பூமி நடுங்கியது பாறைகள் வெடித்தன கல்லறைகள் திறந்தன. செந்தூரியன் “இவர் உண்மையில் கடவுளின் மகன்” என்று கூறுகின்றான்.
அவனுடைய வார்த்தை விவிலியத்தில் ஒரு புதுப் பதிவு. ஒரு புதிய பார்வை.
மாற்கு நற்செய்தி தொடக்கத்தில் ‘கடவுளின் மகன்’ என்றே தொடங்குகிறது. இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமான இடங்களில் கடவுளின் மகன் என்றே கூறப்படுகிறது. ஞானஸ்தானம் பெறும் பொழுது மேகம் வந்து நிழலிட இவரே என் மகன் என்று குரலொலி கேட்கின்றது.
அவர் மறுஉறு பெறும் பொழுதும் வானம் பிளவுபட்டு ஆவியானவர் இறங்கி இவர் அன்பார்ந்தமகன் பூரிப்படைகின்றார் தந்தையாகிய கடவுள். இரட்சணிய வேலையின் தெடக்கத்தில் சாத்தான்“நீர் கடவுளின் மகனானால் கல்லை அப்பமாக்கு, கீழே குதியும் என்று சோதனைகளை நடத்துகின்றது. இயேசுவே தன்னை கடவுளின் மகன் என்றும் தந்தையும் நானும் ஒன்று என்று கூறுகின்றார்
இயேசு கடலில் நடந்தபொழுது படகிலிருந்தவர்கள் நீர் கடவுளின் மகன் என்றனர் இவர்கள் கூறுவது அவர்கள் காணும் அதிசயத்தின் வார்த்தைகள்.
பேதுரு உயிருள்ள கடவுளின் மகன் என்றபொழுது இயேசு அவரைநோக்கி நீ பேறு பெற்றவர் இதை வெளிப்படுத்தியது தந்தை என்றார்.
இங்கே பேதுரு இயேசுவுடன் இரவும் பகலும் அதிசயம் அற்புதங்களை கண்டவர் அதனால் உயிருள்ள கடவுளின் மகன் என்கிறார் அயினும் அதில் உறுதிப்பாடு இல்;லை அடுத்த ஐந்து வசனங்கள் தள்ளி இயேசு பேதுருவை நோக்கி " சாத்தனே அப்பாலே போ" என்றார். (மத். 16:18-23) மேலும் அவரை மறுதலிப்பதையும் காண்கின்றோம்.
இயேசு முழுமையாக தந்தையை உணர்ந்தவர் சிறுவயதில் ‘என் தந்தையின் இல்லத்தில் இருப்பேன் என்கிறார் மீண்டும் அதே ஆலயத்தில் வியாபாரிகளை விரட்டி விட்டவர்.
கலிலேயாவில் உள்ளவர்களும் ஜெருசலேமில் உள்ளவர்களும் இயேசுவோடு பழகினவர்களும் அறிந்து கொள்ள முடியாத மறைபொருளை செந்தூரியன் ஒருவன் முதன்முதலில் ‘இயேசு கடவுளின் மகன்’ என்று கூறுகின்றான். துரத்திலிருந்து பார்த்தமாத்திரத்தில் தன் கருத்தினால் ஆராய்ந்து இந்த முடிவுக்கு வருகின்றான்.
விவிலியத்தில் ஒரு நிகழ்ச்சியைப்பார்போம். ‘அருள் நிறைந்தவளே வாழ்க’ என்ற கபிரியேலின் வார்த்தைக்கு 'இதோ ஆண்டவருடைய அடிமை' என்ற பதிலைப்பார்க்கின்றோம்.
மரியாள் எலிசபெத்தை வாழ்த்தும் பொழுது வயிற்றில் குழந்தை துள்ளியது. எலிசபெத் மரியாளை வாழ்த்துகின்றாள்.
இந்த நிகழ்ச்சிகளில் முதலில் கூறுபவர்க்கு ஏற்புரையோ அல்லது பதிலுரையோ பார்க்கின்றோம்.
இயேசுவைப் பற்றி தந்தையாகிய கடவுள் இரண்டுமுறை ‘என் அன்பார்ந்த மகன்' என்று வானம் பிளவுபட மகிழ்வோடு வாழ்த்துகின்றார் அதற்கு மானிடத்தின் ஏற்புரை என்ன? பதிலுரை என்ன?
இயேசுவின் மீட்பில் முகவுரையை தெய்வம் கூறுகின்றது முடிவுரையை யார் கூறுவார்?
யோர்தான் நதியில் வானம் பிளவுபடவும் உயர்ந்த மலையில் மேகம் நிழலிடமெய்வண்ணம் காண்போம் என்று பூரிப்படைந்த கடவுளின் முகவுரைக்கு……
கல்வாரியில் பூமி நடுங்க “இவர் உண்மையில் கடவுளின் மகன்” என்று செந்தூரியன் முடிவுரை கூறுகின்றான்….
சிலுவையில் இயேசுவை பார்க்கும் எல்லோர்க்குமே இந்த பக்குவம் வந்து விடாது .
செந்தூரியன் - புறவினத்தான் - சிலுவையருகே ஒரே காட்சியில் ஒரேவார்த்தையில் கூறும்பொழுது ‘மானுடம் வென்றது’ என்று கூறலாம்.
மனித உணர்வுகளோடு மானுடத்தின் வெற்றியாக நிறைவடைகிறது.
செந்தூரியன் இவன் கிறிஸ்து என்னும் நறுமண வாசத்தை நுகர்ந்தவன்.
இயேசு தொழு நோயாளியை தொட்டபொழுது நோய் நீங்கியது கை வண்ணம் தெரிந்தது.
இறந்த லாசர் எழுந்தான் சொல்வண்ணம் தெரிந்தது.
மறுதலித்த பேதுருவை இயேசு உற்றுப்பார்த்த பொழுது மனம் கசிந்தது - கண்வண்ணம் தென்பட்டது
கடல் மீது நடந்த பொழுது – கால்வண்ணம் கண்டோம்.
குற்றுயிராய் சிலுவையில் தொங்கிய - இறந்த இயேசுவிடம் செந்தூரியன் மெய்வண்ணம் கண்டான்.>
மெய்யாலுமே கடவுளின் மகன் என்றான். கோலில் ஏந்திய பாம்பை கண்டு வாழ்வுபெற்றனர் இஸ்ராயேல்.
சிலுவையில் ஏற்றிய இயேசுவை கண்டு உண்மையை உணர்ந்து செந்தூரியன் - ஒரு ரோமவீரன் செசாரை கடவுளின் மகன் என்று கூறவில்லை மாறாக கிறிஸ்துவை கடவுளின் மகன் என்றான்.
ஆலயத்தின் கிழிந்த திரைசீலையை கடந்து புதியதும் உயிருள்ளதுமானதொரு பாதையில் நுழைந்தவனா?
ஆண்டவர் இனியவர் என்று சுவைத்தவனா? கானாவூரில் நீரை குடித்து ரசமாய் சுவைத்த பந்தி மேற் பார்வையாளானோ? ஒரே வரியில் நம் மனதில் சிகரமாக உயரும் செந்தூரியன் பேச்சை விவிலியத்தில் வேறெங்கும் காணவும் இல்லை..
என்னை யாரென்று நீங்கள் கூறுகின்றீர்கள் என்று இயேசு கேட்டதற்கு உண்மையாக உணர்வு பூர்வமாக உள்ளத்திலிருந்து செந்தூரியன் கூறுகின்றன். ஆனால் அதை கேட்க இயேசுதான் இல்லை..
செந்தூரியன் இவ்வாறு பேசாதிருந்தால்…..
பேசாதிருந்தால்..
இயேசு கழுதைமீது அமர்ந்து ஊர்வலத்தில் வரும் பொழுது கூறினாரே அதை போல் கல்வாரியில் உள்ள கற்களே பேசும்.