அறிந்தும் அறியாமலும்
அ.அல்போன்ஸ்-திருச்சி
தவம் என்பது ஆன்ம முன்னேற்றத்திற்குரிய ஒரு வழியாகும். தவத்தை விவிலியம் விரிவாக பேசுகிறது. அவற்றையெல்லாம் சுருக்கி ஒரே வரியில் கூறுவதாயின் ‘தன்னை வெல்லுலதே தவம்’ எனலாம்
ஒருவன் தன்னை வெல்லும் முயற்சிகளில் ஈடுபட்டால் அது தவமாய் மலர்கிறது. இயேசு சிலுவையில் கூறும் முதல் வாசகமே அதற்கு உதாரணம். இதில் மாறுபட்டால் அது அவமானமாய் முடிகிறது. இது பிலாத்துவுக்கு பொருந்தும். அவன் தன்னை வெல்ல முடியாமல் தவிக்கின்றான்.
தவசீலருக்கு இரண்டு அடிப்படை பண்புகள் தேவை என்கிறது திருக்குறள். அவற்றுள் ஒன்று தனக்கு வந்த துன்பத்தைப் பற்றி பொறுத்துக் கொள்வது. மற்றொன்று பிறருக்குத் துன்பம் செய்யாதிருப்பது.
சிலுவையில் இயேசு தனக்கு வந்த துன்பங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்த துன்பத்தை, பலிஆவதை நம் பாவங்களுக்காக ஏற்றுகொள்கிற பக்குவம். அதுமட்டுமல்ல பகைவனுக்கும் மன்னிப்பு வேண்டுவது வேறெங்கும் காணமுடியாத அதிசயம்.
அதைத்தான் சிலுவையில் முதலாக இயேசு கூறுவார் “பிதாவே இவர்களை மன்னியும் இவர்கள் தாங்கள் செய்வதென்பதை அறியாமல் செய்கிறார்கள்” இயேசுவின் இந்த ஜெபத்தை சிறிது சிந்திப்போம்.
இயேசு தன் இரட்சணிய வேலையைத் தொடங்கும் பொழுது ஜெபித்து கொண்டிருப்பதாக (லூக் 3:21) லூக்காஸ் நற்செய்தி பதிவுசெய்கிறது. அதே நற்செய்தியில் தன் வாழ்வின் முடிவிலும் “தந்தையே அவர்களை மன்னியும் ஏனெனில் தங்கள் செய்கிறது இன்னதென்று அவர்களுக்கு தெரியவில்லை “(லூக் 23:34) ஜெபித்து கொண்டிருப்பதை காண்கின்றோம்.
நோயாளிகளை குணப்படுத்திய கைகள் -யூதேயா நாடெங்கும் மறையுரைகளை போதித்து நடந்த கால்கள் ஆகியவற்றை சிலுவையில் அறையப்பட்டு, விசுவாசத்தில் உறுதியாக வளர்த்து வந்த சீடர்கள் இறுதியாக தோட்டத்தில் விட்டு ஓடிய பிறகு இயேசு என்ன செய்வார்? ஜெபத்தோடு தான் வாழவேண்டும் தந்தையுடம் தான் ஜெபிக்கவேண்டும்
இந்த ஜெபம் போல் இயேசு தந்தையிடம் வேறங்கும் மற்றவர்களுக்காக மன்னிப்பு கேட்கவில்லை
திமிர் வாதக்காரனிடம் 'மகனே தைரியமாயிரு உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' (மத் 9:2) இயேசுவின் பாதங்களுக்கு பரிமளதைலம் பூசியவளுக்கு அவள் செய்த பாவங்கள் பல மன்னிக்கப்பட்டன (லூக் 7:48;)
இயேசு மற்றவர்களின் பாவங்களை மன்னித்ததுபோல் 'பிதாவே இவர்களை மன்னியும்' என்று பிதாவிடம் மன்றாடுவதற்கு பதிலாக இயேசு இவர்களை மன்னித்திருக்கலாமே? ஏன் பிதாவிடம் மன்னிக்கச் சொல்லி வேண்டுகிறார்?
மறைநூல் அறிஞர்கள் ‘கடவுள் ஒருவரேயன்றி பாவத்தை மன்னிக்க வல்லவர் யார்?' என்றும் கேட்கின்றனர் (மாற்கு 2:7)
இயேசு மனுமகனும், கடவுள் மகனுமாக வாழ்பவர் இங்கே மனுமகனாக, மனிதநிலையிலிருந்து பாவங்களுக்காக பரிகாரமாக பூமிக்கு வந்தவர்.
மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று உணருமாறுதான் திமிர்வாதக்காரனை “எழுந்து உன் கட்டிலை தூக்கிகொண்டு வீட்டுக்கு போ” என்றார் (மத் 9:7) ஆனால் இப்பொழுது அவர் சிலுவையில் உயர்த்தப்பட்ட நிலையில் இருக்கின்றார். 'நானே உலகினின்று உயர்த்தபெற்ற பின் அனைவரையும் தன் பால்ஈர்த்து கொள்வேன்' என்றார். இப்பொழுது இயேசு பூமியில் இல்லை. சிலுவையில் உயர்த்தப்பட்டு இருக்கின்றார். மன்னிக்கும் அதிகாரமும் இல்லை. ஏனெனில் சிலுவையில் நமது பாவங்களுக்காக பலியாக பிரதிநிதியாக பாவங்களை ஏற்றுக்கொண்டவராக நிற்கின்றார். எனவே தான் தந்தையிடம் விண்ணப்பிக்கின்றார்.
“அவர்கள் இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்" என்கிறார் - இது எப்படி சரியாகும்? அவர்கள் முழுமையாக அறிந்து ஆத்திரப்பட்டு திட்டமிட்டு கைது பண்ணி பொய்சாட்சிகளை தயார் செய்து மக்களை தூண்டிவிட்டு பிலாத்துவை மிரட்டி சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டு மரணதண்டனை தந்ததை எப்படி அறியாமல் செய்தார்கள் என்கின்றார்? அறியாமல் செய்தது என்பது ஏற்றுக் கொள்ளதக்கதல்ல.
அறியாமல் செய்தது எதை?
அவர்கள் வல்லமை வாய்ந்த கடவுளின் மகனை கொல்லுகின்றோம், தாங்கள் எதிர்பார்த்த மெசியாவை சிலுவையில் அறைகின்றோம் என்பதை அறியவில்லை.
நம் வாழ்க்கையில் சின்ன சின்ன தவறுகள் செய்கிறோம். இயேசுவை விட்டு விலகி செல்கிறோம் அறியாமல் தானே செய்கிறோம்.
அதற்காக நமக்கும் சேர்த்துதான் மன்றாடுகிறார்
அவரைப்போல் நாமும் ஜெபிப்போம்..