தம்மையே வெறுமையாக்கி..
அ.அல்போன்ஸ்-திருச்சி
திருவிவிலியம் அன்பைப் பொழிவதில் இலக்கணம் அமைத்துக் கொண்டு எழுந்து நடக்கிற மரபுக்கவிதையல்ல; மனம் திறக்கும் போதெல்லாம் மலராய்ச் சிரிக்கிற புது கவிதை.
கிறிஸ்துவின் தாழ்ச்சியை, அதன் மேன்மையை வெகு அழகாகச் சொல்லுகின்றார் திருத்தூதர் பவுல், தான் பிலிப்பியருக்கு தான் எழுதிய கடிதத்தில் கடவுள் தன்மையில் விளங்கிய அவர் கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை விடாமல் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய ஒன்றாகச் கருதவில்லை . ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார். (பிலி2:6-8)
இதைச் சற்று சிந்திப்போம். பவுலடியார் வெகுநயமாக கூறுகிறார் ‘தம்மையே வெறுமையாக்கி.. என்று.
ஒரு அறை இருக்கிறது. அதில் எந்தப் பொருளும் இல்லை: காலியாக இருக்கிறது. அந்த அறையின் வெறுமை, அறை முழுவதும் வியாபித்திருக்கிறது. அறையில் மேஜை முதலியவைகளும் அலங்காரப் பொருள்களும் அமைத்து நாம் அமருகிறோம். இரண்டுவிதப் பொருட்கள் இருக்கின்றன. ஒன்று எப்பொழுதும் இருக்கும் வெற்றிடம் மற்றொன்று. எப்பொழுதும் இல்லாத, இப்போது நிரம்பிய பொருட்கள். ஆனால் வெற்றிடம் நம் கண்களுக்குத் தெரியாமலிருப்பது தான் அதிசயமான விஷயம்.
இயேசு கடைசி இரவு உணவு உண்ண ஆசைமேல் ஆசையாய் இருந்தார். லாசருக்காக அழுதார். பாவிகளை மீட்க பல வழிகளைக் கையாண்டார். எனினும் அவர் தம்மிலே எதையும் இணைத்துக் கொள்ளவில்லை. வெறுமையாகத்தான் இருந்தார். அறையில் நிரப்பியுள்ள மேஜை, நாற்காலிகளே நம் கண்ணுக்குத் தெரிகின்றன. நிரம்பியுள்ளவையே தெரிகின்றன. வெறுமை தெரிவதில்லை. இயேசுவிடமும் உள்ள வெறுமையை நாம் அறிவதில்லை. ஆலயத்தின் உள்ளே சென்று சாட்டையால் அவர்களை விரட்டியபொழுது உள்ள கோபமோ, அத்திமரம் கனிகொடுக்கவில்லை என்று சாபமிடும் குணமோ, ஆடையைத் தொடும் பெண்ணிடம் காட்டும் கருணையோ -அத்தனையும் இயேசுவைப் பற்றிச் சொல்லவில்லை.
இயேசுவின் வெறுமை காண இயலாத ஒன்று. அறையில் நிரம்பிய சாமான்கள் மூலமே வெறுமையைக் காண முடிகிறது. நாற்காலியைச் சுற்றியுள்ள வெறுமையான இடம் என்று தெரிகிறதே தவிர வெற்றிடத்தில் நாற்காலியைக் கண்பதில்லை. உண்மையில் வெற்றிடத்தில் தான் நாற்காலி வைக்கப்பட்டிருக்கிறது. நாற்காலியை அறையைவிட்டு வெளியேற்ற முடியும். ஆனால் அறையைவிட்டு வெற்றுத்தன்மையை அகற்ற முடியாது. வெற்றிடத்தைப் பற்றி நமக்கு உணர்வு கிடையாது.
இயேசுவைப் போல நாமும் நம்மை வெறுமையாக்க முடியும். ஆனால் நாம் ஆயிரம் வகையான எண்ணங்களை வைத்துக் கொண்டிருப்பதால் நம் உள்ளே உள்ள வெறுமையை, எளிமையை உணரவில்லை.
மரம் வளர்ந்தால் வெறுமை சிலகாலம் பசுமையாயிருக்கும். மலர் மலர்த்தால் வெறுமை சில நாட்கள் மணத்தோடு இருக்கும். மரம் வளர்ந்த போதோ, மலர் மலர்ந்த போதோ வெறுமையில் எந்தவித மாறுதலும் இல்லை; அது அப்படியேதான் இருக்கிறது. அவ்வாறே கிறிஸ்துவைப் போல் அவர் கொண்ட வெறுமையைப் போல நாமும் வெறுமையாக்கி வாழவேண்டும். நாம் உண்டாக்கியுள்ள சொற்களெல்லாம் விசித்திரமானவை. எதிரிடையான சொல்லை உபயோகித்தால் கூட எந்தவித மாறுபாடும் ஏற்படுவதில்லை.
எல்லையற்றது என்று கூறினாலும் கூட எல்லையை உபயோகித்தே அந்த சொல்லை உண்டாக்க வேண்டியிருக்கிறது. எல்லையில் எல்லையற்ற தன்மை பற்றிய பாவனை இருப்பதில்லை. ஆனால் எல்லையற்ற தன்மையால் எல்லையின் பாவனையை உணரமுடிகிறது. எல்லையற்ற தன்மையை எவ்வளவு சிரமப்பட்டு சுற்பனை செய்தாலும் மிகப் பெரிய எல்லையையே கற்பனை செய்கிறோம். எவ்வளவு யோசித்தாலும் எல்லையை மேலே மேலே தள்ளிப்போட்டு விரிப்பது மட்டுமே முடிகிறது. அதைப்போல வெறுமையைக் கூட பொருளைப் போல உபயோகித்து, அறையில் வெறுமை நிரம்பியிருக்கிறது என்கிறோம். வெறுமை என்பதன் பொருளே, நிரம்பாத நிலைதான்.
வெறுமையாக்கிக் கொள்வது என்பது எளிமையாக்கிக் கொள்வதாகும். ஒரு மனிதன் வாழ்க்கையின் எல்லா சுபபோகங்களையும் அனுபவிப்பதற்கு முன் எப்படி இருந்தானோ அதைப்போலவே அனுபவித்த பின்னும் இருக்கிறான் அனுபவிக்கவில்லை என்ற நிலையில், அதாவது அனுபவித்துக் கொண்டே அனுபவியாமல் இருக்கிறானோ, அத்தகைய மனிதனே கிறிஸ்துவைப் போல வெறுமையாக வாழ்கிறான். அவனே கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டு கிறிஸ்துவாக வாழமுடியும்.
இன்மை, வெறுமை இவற்றால்தான் நாம் பயனடைகிறோம். எப்படி? களிமண்ணால் பாத்திரம் வனைகிறோம். பாத்திரத்தின் பயன் அதன் வெற்றிடத்தால் கிடைக்கிறது. வீட்டில் வாசலும் சாளரமும் அமைக்கிறோம். சுவற்றின் பயன் இவற்றின் வெற்றிடத்தால் கிடைக்கிறது. எவ்வளவு பெரிய உண்மை! காற்றுத்துருத்தி காலியாக இருப்பதால் தானே வற்றாமல் காற்றை வழங்க முடிகிறது. அது கண்ட கண்ட பொருள்களால் நிரம்பி இருந்தால் பயனற்றல்லவா போய்விடும்.
கிறிஸ்துவைப் போல் வெறுமையாக்கிக் கொள்வோம்; இறையரசு அங்கே காத்திருக்கும்.