மனமாற்றம். நிலைத்தன்மை. மேன்மை.

அருள்திரு யேசு கருணாநிதி

இன்றைய முதல் வாசகம் இரு வகையான மனிதர்களை நம் கண்முன் கொண்டுவருகிறது: (அ) பொல்லார், (ஆ) நேர்மையாளர். இவர்கள் மீட்புப் பெறுவதற்கான வழிகள் வேறு வேறாக இருக்கின்றன. பொல்லார் தன் தீய வழியை விட்டு மனம் மாற வேண்டும். நேர்மையாளர் தன் நேரிய வழியில் நிலைத்திருக்க வேண்டும். தீய வழியிலிருந்து மனம் மாறுவதை விட நேரிய வழியில் நிலைத்திருப்பது மிகவும் கடினமானது. நற்செய்தி வாசகத்தில், மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களின் நெறியைவிடத் தம் சீடர்களின் நெறி சிறந்ததாக இருக்க வேண்டும் எனக் கற்பிக்கிறார் இயேசு. தம் சீடர்களிடமிருந்து கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்க்கிறார் இயேசு. பரிசேயர்களுடைய நெறி செயல்பாடு சார்ந்தது, மேன்மையான நெறி உளப்பாங்கு சார்ந்தது. முந்தைய நெறி வெளிப்புறச் சடங்குகளை முன்னிறுத்துகிறது. மேன்மையான நெறி உள்புற மாற்றத்தை வலியுறுத்துகிறது. முந்தைய நெறி எளிதானது. மேன்மையான நெறி கடினமானது.

இன்றைய வாசகங்கள் நாம் எந்நிலையில் இருந்தாலும் நமக்குப் பாடங்களைக் கற்பிக்கின்றன. பொல்லாதவராக இருந்தால் மனமாற்றம் பெற வேண்டும். நேர்மையாளராக இருந்தால் நிலைத்தன்மை கொள்ள வேண்டும். என் நேர்மையாளர் நிலையில் நான் மேன்மையை விரும்ப வேண்டும்.

இவற்றிலுள்ள சிக்கல்கள் எவை?

பொல்லார் பல நேரங்களில் மனம் மாறுவதில்லை. ஏனெனில், தான் நல்லவராக இருப்பதாகவே அவர் நினைத்துக்கொள்கிறார். தனக்கு மனமாற்றம் தேவையில்லை என நினைக்கிறார்.

நேர்மையாளர் தான் நேர்மையாளராகவே நிலைத்திருக்க வேண்டுமா என அச்சம் கொள்கிறார். ஏனெனில், அவர் வாழ்கிற உலகம் பொல்லாத உலகம். அவர் நேர்மையாளராக இருந்தாலும் பொல்லார் அவரை அவ்வாறு இருக்குமாறு அனுமதிக்க மாட்டார். ஒருநாள் நேர்மையாளராக இருக்கலாம். ஒவ்வொரு நாளும் அப்படி இருக்க வேண்டுமா என்று நம் மனம் திகைப்பு அடைகிறது. குடிநோயாளர் மறுவாழ்வு நிகழ்விலும் ஒவ்வொரு நாள் முயற்சியே கற்றுக்கொடுக்கப்படுகிறது. நான் ஒவ்வொரு நாளாக நேர்மைத்தன்மையால் நிலைத்தால் நிலைத்தன்மையைக் கைக்கொள்ள முடியும்.

தம் சீடர்களின் நெறி மற்றவர்களின் நெறியைவிட மேன்மையாக இருக்க வேண்டும் என்னும் இயேசுவின் எதிர்பார்ப்பு நமக்குக் கடினமாக இருக்கிறது. ஏனெனில், பல நேரங்களில் நாம் நம்மையே மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, அவர்களைவிட நாம் நல்லவர்களாக இருப்பது கண்டு மகிழ்ந்து நிறைவடைகிறோம். இயேசு சில எடுத்துக்காட்டுகள் தருகிறார். எதிர்வினை ஆற்றுதல் குறைத்து நேர்முக ஆற்றுதலுக்கு நம்மை அழைக்கிறார். கொலை செய்பவர், கோபம் கொள்பவர், மற்றவர்களைக் கடிந்துரைப்பவர் எதிர்வினை ஆற்றுகிறார். அவருக்கு வெளியிலிருந்து வரும் காரணிக்கு ஏற்பச் செயலாற்றுகிறார். ஆனால், மன்னிப்பவர், சமரசம் செய்துகொள்பவர், மற்றவரோடு அமைதியுடன் வழிநடப்பவர் நேர்முகமாகச் செயலாற்றுகிறார்.

நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று கண்டறிந்து, அந்த நிலையிலிலுள்ள சிக்கலைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்வோமாக!

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  ஈஸ்டர் பெருவிழா