அன்பார்ந்தவர்களே! தவக்காலம் நமக்கு ஓர் அருள்தரும் காலமாக அமைகின்றது. பம்பரம்போல் சுழன்று வாழும் வாழ்க்கையில் நமக்கு நிம்மதி இல்லை. இத்தவக்காலத்தில் ஒரு நிமிடம் அமைதியாக இருந்து, சுயசோதனை செய்து நமது வாழ்க்கையை மாற்றி அமைத்து சீராக்கும் காலம் இது. பழையபாவ வாழ்வை அழித்து, புதிய வாழ்வுக்கு இட்டுச் செல்லும் காலம் இது!
ஓர் ஊரில் குடும்பத் தலைவர் ஒருவர் கிறிஸ்தவ மறையில் புதிதாகச் சேர்ந்தார். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இயேசுவைப் பற்றியே பேசுவார். ஒரு நாள் பொது உடைமைக் காரன் ஒருவன் இவருடன் விவாதிக்க வந்தான். இவரைப் பார்த்து "இயேசுவைப் பற்றி உமக்கு ஏதாவது தெரியுமா?" என்று கேட்டான். அதற்கு அப்புதிய கிறிஸ்தவரோ, "ஆமாம், எனக்கு இயேசுவைப் பற்றித் தெரியும்" என்றார்.
பொதுவுடமைக்காரனோ மீண்டும் அப்புதிய கிறிஸ்தவரைப் பார்த்து, "இயேசு எப்பொழுது பிறந்தார்? இயேசு மரிக்கும்போது அவருக்கு வந்து என்ன?" என்று பலவாறு கேள்விக்கணைகளைத் தொடுத்தான். பாவம்! புதிதாக வேதத்தில் சேர்ந்த அந்தப் புதிய கிறிஸ்தவர்க்கு பதில் எதுவும் சொல்லத் தெரியவில்லை. எனினும், இறுதியாக அப்பொதுவுடமைக்காரனைப் பார்த்து "எனக்குக் கிறிஸ்துவைப் பற்றி அதிகமாக ஒன்றும் தெரியாது என்பது உண்மைதான். ஆனால் ஒன்று மட்டும் எனக்கு உறுதியாகத் தெரியும். நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவநம்பிக்கையின் படுபாதாளத்தில் விழுந்து கிடந்தேன். குடிப்பழக்கத்தில் மூழ்கிக் கிடந்தேன். மீளவே முடியாதபடி கடன் தொல்லையில் சிக்குண்டுத் தவித்துக் கொண்டிருந்தேன். எனது மனைவியின் முகத்திலே சிரிப்பைக் காணவே முடியாதிருந்தது. நான் வீட்டிற்குள் கால் வைக்கும் சப்தம் கேட்டாலே, என்னுடைய குழந்தைகள் அஞ்சி நடுங்குவார்கள்.
ஆனால், நான் கிறிஸ்தவன் ஆன பிறகு கட்டுப்பாட்டோடு இருக்கிறேன். மதுவைக் கையிலே தொடுவதுகூட கிடையாது. இப்பொழுது எனக்குக் கடன் தொல்லை என்பதே கிடையாது. எனக்கென்று சொந்தமாக வீடு ஒன்று வாங்குவதற்காகத் தவணை முறையில் பணம் கட்டி வருகிறேன். என் மனைவி இப்பொழுதெல்லாம் அடிக்கடி சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறாள்.நான் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பே என்னுடைய குழந்தைகள் ஓடோடி வந்து என்னை வரவேற்கின்றனர். இவற்றை எல்லாம் இயேசு தாம் எனக்குச் செய்தார் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்" என்று அப்புதிய கிறிஸ்தவர் சொன்னார். இப்பொழுது அவர் எங்கு சென்றாலும், யாரைப் பார்த்தாலும் தனது வாழ்க்கை எவ்வாறு மாறினது என்று மகிழ்ச்சியோடு சாட்சியம் சொல்லி வருகின்றார்.
ஆம், அன்பார்ந்தவர்களே, இயேசுவைப் பற்றி ஆழமாக அறிந்து, அனுபவரீதியாக அவரது தொடுதலை உணர இத்தவக்காலத்தில் தினமும் வாழ்வு தரும் வார்த்தைகளைப் படிப்போம்.
மனம் மாறுவோம். புதிய வாழ்வைப் பெற்று அதைப் பிறரோடுபகிர்ந்து கொண்டு இயேசுவின் சாட்சியாய் ஒளிர்வோம்.