தவக்காலம் - உறவின் காலம்

Lent2010

தனி மரம் தோப்பாக முடியாது. மனிதன் ஒரு சமூக பிராணி. உறவு அவனுக்கு மிக அவசியம். உறவின்றி வாழ்வில்லை. உறவும் உண்மையாய் இருக்கும் போதே மனிதன் வாழ்வு நலம் பெறுகின்றது. உறவு கொள்ளவே, உறவைத் தேடியே இறைமகன் மனிதர் ஆனார். அவருக்கு உறவு மிக அவசியமானது. தந்தையோடும், தூய ஆவியோடும் அவர் உறவு கொண்டார். திரித்துவத்தின் உறவு படைத்தல், காத்தல், பராமரித்தல் என்பதில் வெளிப்படையாய் தெரிகின்றது.

உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம். . .
 உலகாளும் தேவன் நெறி வாழும் இதயம் தெய்வம் தரிசனம். . .
 மறைவழியில் வளரும் இல்லங்கள் எல்லாம் தெய்வம் தரிசனம். . .
 நிறைவோடு மலரும் உலகங்கள் உயிர்த்தால் தெய்வம் தரிசனம். . .

அன்பாகி அன்பில் நிலையாகும் நெஞ்சில் தெய்வம் தரிசனம். . .  
மெய்யாகி பொய்மை பழிநீக்கும் நெறியில் தெய்வம் தரிசனம். . .
ஓளியாகி உலகில் இருள்போக்கும் பணியில் தெய்வம் தரிசனம். . .
கனலாகி நீதி நெருப்பாகும் செயலில் தெய்வம் தரிசனம். . .  

 மதம் யாவும் மனித இனபேதம் ஒழித்தால் தெய்வம் தரிசனம். . .
 சமதர்மம் ஓங்க ஓயாது உழைத்தால் தெய்வம் தரிசனம். . .
 உரிமைகள் காக்க உயிர்த் தியாகம் செய்தால் தெய்வம் தரிசனம்
 இறையரசின் கனவு நனவாகி விடிந்தால் தெய்வம் தரிசனம். . .


உறவிற்காக தன் நிலையை பற்றிப் பிடித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. பிலி 02. தியாகத்தோடு இழக்க முன் வந்தார். துறந்ததினாலேயே நாம் மீட்புப் பெற்றோம். நம்மோடு கொள்ளும் உறவிற்காக நிலையை துறந்து நம்மோடு உறவு கொண்டார். மனிதர்கள் இன்று தங்களைச் சுற்றி சுற்றுச் சுவர் எழுப்பிக் கொண்டு தனித் தனித் தீவாக வாழ்ந்து வருவதாலேயே இன்று அச்சம் அதிகரிக்கிறது. மன பாரம் வேலை பளுவினால் அதிகரிக்கிறது. உதவிட யாரும் இல்லை. இவனும் யாருக்கும் உதவி செய்ய முன் வருவதில்லை. எனவே இவனுக்கும் யாரும் முன் வருவதில்லை. தனிமை இவனை விரட்ட இவன் தடுமாறுகின்றான். நோயாளியாய் இவன் வாழ்வு பரிதாபத்திற்குரியதாக மாறுகின்றது.

ஊதாரி மைந்தன் உவமை - சுமூகமான முடிவு - எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக. உறவை விரும்பும் தகப்பனார் ஒன்றிணைக்கின்றார். மகன்களும் பிரிந்தாலும் உணர்ந்து ஒன்று சேர்கின்றார்கள். மகன் இளையவன் பிரிந்து செல்ல முற்படும் போதும், மூத்தவன் கோபப்படும் போதும் தகப்பனார் அனுமதிக்கின்றார். சில நேரங்களில் தனித்திருக்கும் போது புரிதல் நன்கு ஏற்படும். ஆனால் புரிந்து வரும் போது மூவரும் ஒருவர் ஒருவரை ஏற்று உறவுக்கு முற்படுகின்றார்கள். லூக் 15 : 11 தொ. திருப்பா 133:01 ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று. யோவா 17:21 எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக.

உறவிலே வாழும் போது, நல்ல மாதிரிகை காட்டுவது மிக அவசியமானது. மாதிரிகை சரிவர இல்லாததால் இன்று இளையவர்கள் சின்னத் திரை, வெள்ளைத் திரை, விளையாட்டு வீரர்கள் இவர்களை போன்றவர்களை தங்களது மாதிரிகையாக கொண்டு மாய உலகிலே வாழ்ந்து தங்களது வாழ்வை வீணாக்குகிறார்கள் என்பது நம்முடைய புலம்பலாக அமைந்துள்ளது. உடன் வாழ்வோரின் உறவு சரிவர இல்லாததாலும், அவர்கள் தங்களது வாழ்வின் வழி வளரும் தலைமுறையினருக்கு நல்ல மாதிரிகை காட்டாததாலும், இன்றைக்கு இளையவர்கள் திசை மாறி செல்ல நேரிடுகின்றது. இதனால் சமூகம் ஆரோக்கியம் இல்லாத நிலையிலேயே செல்லுகின்றது.

தவக்காலம் நமக்கு தரப்படும் உறவின் அற்புதமான காலம். ஒப்புரவாவது மிக அவசியமானதும் கூட. படைத்தவரோடு மட்டுமல்ல, நம்மோடு வாழ்வோரோடும் நாம் ஒப்புரவாவது காலத்தின் கட்டாயம். நல்ல ஆரோக்கியமுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவதில் அக்கரை கொள்வோம். நம்முடைய நல்ல மாதிரிகையின் வழி புதிய சமூகத்தை கட்டியெழுப்புவோம். உறவிலே இறைவனை உயிர்ப்பிக்கச் செய்து, தெய்வ தரிசனம் பெறுவோம். உயிர்ப்பின் தளிர் நம்மிலே புதிய கசாப்தத்தை தரட்டும்.

அருட்தந்தை அமிர்தசுந்தர். பாளையங்கோட்டை


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்