பேரழிவை உண்டாக்கும் பேராசை
அருட்பணி.மரிய அந்தோனிராஜ், பாளை மறைமாவட்டம்.
பாளையம் என்னும் ஊரில் அருகருகே இரு நகைக்கடை வியாபாரிகள் வாழ்ந்து வந்தனர், இதில் ஒருவரின் பெயர் பாபு, மற்றொருவரின் பெயர் ராஜன். பாபு மிகவும் அன்பானவர் யாவருடனும் எளிதாக பழகக்கூடியவர், ராஜனும் அதே போல்தான். என்ன ராஜன் கொஞ்சம் சிடு மூஞ்சி. இருவரும் எப்பொழுதுமே கடுக்கன் அணிந்திருப்பர். இருவருக்கும் இடையே எப்பொழுதும் வியாபார போட்டி இருந்து கொண்டே இருக்கும்.
ஒருநாள் பாபு தனது இரு கடுக்கனும் காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்தார், பிறகு ராஜனும் தனது இரு கடுக்கனும் காணவில்லை என்று தேட ஆரம்பித்தார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம்கொண்டு சண்டை போட்டுக்கொண்டனர்.
பிறகு இருவரும் அவ்வூரில் இருந்த மரியாதை ராமனிடம் சென்று நடந்ததைக் கூறி முறையிட்டனர். மரியாதை ராமன் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரணை செய்தார் மேலும் வழக்கை மறுதினம் ஒத்திவைத்தார்.
இரவு கழிந்தது சூரியன் உதித்தது. அனைவரும் மரியாதை ராமனின் அவையில் கூடினர். “காணாமல் போன உங்கள் இருவரில் ஒருவரின் கடுக்கன் கிடைத்து விட்டது” என்று கூறி உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த இரு கடுக்கனை மரியாதை ராமன் இருவர்முன் நீட்டி, இது உங்களில் யாருடையது என்று கேட்டார். பாபு அமைதியாக இருந்தார், பேராசை கொண்ட ராஜனோ அந்த கடுக்கன் என்னுடையதே, என்னுடையதே என்று பல முறை கூறினார்.
உடனே மரியாதை ராமன், “ராஜன் தான் கடுக்கன் திருடன், ராஜன் தான் பாபுவின் கடுக்கனை திருடிவிட்டு, தன்மீது சந்தேகம் வராமல் இருக்க ராஜனே ராஜனின் கடுக்கனையும் மறைத்து வைத்துள்ளார். ராஜன் பாபுவின் கடுக்கனை திருப்பி தருமாறும் மேலும் 500 சவுக்கடி வழங்குமாறும் கூறி தீர்ப்பை முடித்து வைத்தார், ராஜனும் வலி தாங்காமல் உண்மையை ஒப்புக்கொண்டார்.
பணம்/பொருள் சம்பாதிக்கவேண்டும் என்னும் பேராசை ஒரு மனிதனை எந்தளவுக்கு வேண்டுமாலும் இழிவாக இட்டுச் செல்லும். அதுதான் கதையில் வரும் ராஜனுக்கும் நடந்தது. நற்செய்தி வாசகத்தில் வரும் யூதாஸ் இஸ்காரியோத்தும் பணத்தின் மீது கொண்ட பேராசையினால் ஆண்டவர் இயேசுவைக் காட்டிக் கொடுப்பதைக் குறித்து படிக்கின்றோம்.
பன்னிரு சீடர்களில் ஒருவராகிய யூதாஸ் இஸ்காரியோத்து எதற்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்தார் என்பதற்கு விவிலிய அறிஞர்கள் பல்வேறு விளக்கங்களைக் கூறுவார்கள். அதில் முதலாவது யூதாஸ் இயேசுவை ஒரு அரசியல் மெசியாவாகப் பார்த்தார் என்பது. இயேசு வந்து தங்களை அடிமைப் படுத்திக்கொண்டிருக்கும் உரோமையரின் ஆட்சியைத் தகர்த்தெறிந்து, யூதர்களின் ஆட்சியை நிறுவுவார் என்று எதிர்பார்த்தார். ஆனால் இயேசுவோ இந்த உலகத்திற்கு அரசியல் விடுதலைக் கொண்டுவரவில்லை, மாறாக, ஆன்மீக விடுதலையைக் கொண்டு வந்தார். அதனால்தான் யூதாஸ், இயேசு தான் எதிர்பார்த்தது போன்று நடக்கவில்லை என்று இயேசுவைக் காட்டிக்கொடுக்கின்றார்.
யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுத்ததற்கு விவிலிய அறிஞர்கள் சொல்லுகின்ற இரண்டாவது விளக்கம்; இயேசு விரைந்து யூதர்களை, யூத மக்களை உரோமையர்களிடமிருந்து விடுவிக்கவேண்டும் என்பது ஆகும். இயேசு தான் எதிர்பார்த்தது போன்று இல்லாமல், வேறொரு விதமாக இருந்ததால், அவரைக் காட்டிக்கொடுப்பதன் வழியாக இயேசுவை விரைந்து செயல்படச் செய்யலாம் என்று யூதாஸ் நினைத்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போன்று இயேசு நடக்கவில்லை, அதனால்தான் மன விரகத்தில் யூதாஸ் தற்கொலை செய்து கொள்கிறார். இறைவனின் திருவுளத்திற்கு ஏற்ப நாம் நடக்கவேண்டுமே ஒழிய, தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்க இயேசுவை நடக்க வைக்க யூதாஸ் நினைத்தது மிகவும் வியப்பாக இருக்கின்றது.
மூன்றாவதாக யூதாஸ் எதற்கு இயேசுவைக் காட்டிக்கொடுத்தார் என்பதற்கு விவிலிய அறிஞர்கள் சொல்லக்கூடிய விளக்கம்: யூதாஸ் பேராசைக்காரராய் இருந்தார் என்பது. யூதாஸ் எப்படிப்பட்டவர் என்பதை யோவான் நற்செய்தியாளர் மிக அருமையாக எடுத்துச் சொல்கிறார் (யோவா 12:6), அவரிடம் பணப்பை இருந்தது அதிலிருந்து அவர் அவ்வப்போது பணத்தை எடுப்பவராக, திருடராக விளங்கினார். இப்படி அவர் பணத்தின் மீது பேராசை கொண்டவராய் இருந்ததால் இயேசுவைக் காட்டிக்கொடுக்கின்றார். இயேசுவைக் காட்டிகொடுக்க யூதாஸ் பெற்ற தொகை முப்பது வெள்ளிக்காசுகள் அதாவது ஆறு மாத சம்பளம். முப்பது வெள்ளிக்காசுகளைப் பெற்றுக்கொண்ட யூதாஸ் நிம்மதியாக இல்லை என்பது கசப்பான உண்மை.
ஆகையால் இயேசுவில் சீடர்களாக வாழும் நாம் யூதாசைப் போன்று அல்லாமல், நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நேர்மையாகவும், உண்மையாகவும், விசுவாசமுள்ளவர்களாகவும் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.