சிலுவையில்(ன்) உறவு
அருள்தந்தை ஜேம்ஸ் தெயோபிலஸ் ச.ச
நம்பிக்கையின் மக்களாகிய நமக்கு, இயேசுவின் பிறப்பு, அவருடைய போதனைகள், அவர் செய்த பணிகள், அவருடைய பாடுகள், அவருடைய சிலுவை மரணம் ஆகிய அனைத்தும் இறைதிட்டத்தின் ஒரு பகுதியே. சிலுவை மரணத்தால் இயேசு நம்மை (படைப்பு அனைத்தையும்) பாவத்தின் விலையாக இருந்த சாவிலிருந்து மீட்டெடுத்தார்.
இயேசு கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை இல்லாத மக்களுக்கு இவை அனைத்தும் எதார்த்த நிகழ்வுகள். உரோமை அரசை எதிர்த்த குற்றத்திற்காக கிடைத்த தண்டனையே சிலுவை மரணம். சிலுவை ஒரு அவமானத்தின் அடையாளம். இதைத்தான் பவுல் அடிகளார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் பின்வருமாறு கூறுகிறார்: “ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து (சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து) கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்” (1 கொரி 1:23-24).
சிலுவையில் அறையப்பட்ட இயேசுதான் தன் வாழ்வு என்றும் அவரைத்தவிர தனக்கு எதுவும் முக்கியமல்ல என்றும் உலகிலுள்ள மற்றனைத்தும் குப்பை என கருதும் அளவுக்கு பவுல் அடிகளார் துணிந்து விடுகிறார். அவர் சொல்லுகிறார்: “நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை.” (1 கொரி 2:2). மேலும், “நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.” (கலாத் 6:14) மேலும், “உண்மையில், என்னைப் பொறுத்த மட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருகிறேன்.” (பிலிப் 3:8).
ஆம் அன்புக்குறியவர்களே! இயேசுவின் மரணம் அதுவும் சிலுவை மரணம் பவுலடிகளாருக்கு வாழ்வாகவும் வழியாகவும் மாறிவிடுகின்றது. அப்படியெனறால் இயேசு சிலுவையில் என்னதான் செய்தார்? சிலுவை மரணத்தின் பயன் என்ன என்று கேட்போமென்றால் அதற்கும் பவுல் அடிகளார் கூறும் பதில் நமது நம்பிக்கையை ஆழப்படுத்துகின்றது. அவர் கூறுகிறார்: “நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்து விட்டார்.” (கொலோ 2:14) அவர் சிலுவையில் தொங்கிய அந்த நேரத்தில் நம் பாவ கடன்பத்திரத்தை ஒவ்வொன்றாக அழிக்கிறார். அதுமட்டுமல்ல மேலும் மக்களிடையே இருந்த பிரிவினையை தகர்த்தெரிந்து ஒற்றுமையை உண்டுபண்ணுகிறார்: “அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார்.” (எபே 2:14). இதுதான் பவுலடிகளார் கண்ட சிலுவை மரணம்.
சிலுவையில் தொங்கிய இயேசு துன்பவேதனையை அனுபவித்தார். அந்த துன்ப வேளையிலும் அவர் கடவுளோடும் மற்றவரோடும் உறவாடினார். மேலும் சிலுவையில் அவர் கூறிய கூற்றுகளை நான்கு நற்செய்தியாளர்களும் நமக்கு எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அவை:
1. ஏலி, ஏலி லெமா சபக்தானி? (மத் 27:46) எலோயி, எலோயி லெமா
சபக்தானி (மாற் 15:34) 2. தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது
என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை. (லூக்கா 23:34) 3. நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக
உமக்குச் சொல்கிறேன் (லூக் 23:43) 4. தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் (லூக் 23:46) 5. தம் தாயிடம், 'அம்மா, இவரே உம் மகன்" என்றார். பின்னர் தம் சீடரிடம்,
'இவரே உம் தாய்" என்றார். (யோவா 19:26-27) 6. தாகமாய் இருக்கிறது என்றார் (யோவா 19:28) 7. இயேசு, 'எல்லாம் நிறைவேறிற்று" என்று கூறித் தலை சாய்த்து
ஆவியை ஒப்படைத்தார் (யோவா 19:30)
சிலுவையில் இயேசு கூறிய இந்த ஏழு கூற்றுகள் அவரைப்பற்றியும், அவர் தந்தையோடு கொண்டிருந்த உறவைப் பற்றியும், மக்களோடு கொண்ட உறவைப் பற்றியும், அவரின் பணியின் நிறைவைப்பற்றியும் பேசுகின்றன என்று கூறினால் அதுவும் மிகையாகாது. இயேசு தன் இயலாமையை பற்றி பேசவில்லை. அவர் தனது தோல்வியைப்பற்றி பேசிப் புலம்பவில்லை. தனது வெறுப்பையோ, கோபத்தையோ அவர் வெளிப்படுத்தவில்லை. அவ்வாறு செய்திருந்தால் அது சரியாகத்தான் இருந்திருக்கும். அது அவரின் நீதியின் குறலாக இருந்திருக்கும். ஆனால் அவரின் தனது பொதுப்பணி காலத்தின் போது சொன்ன போதனைகள் அனைத்தும் இறைவனைப்பற்றியும் இறையாட்சியைப்பற்றியம் தான் இருந்தது. அவர் செய்த நல்ல செயல்கள் அனைத்தும் குணமளித்தன, உயிர் கொடுத்தன, உறவை வளர்த்தன. அதேபோல சிலுவையில் இயேசு கூறிய அந்த ஏழு கூற்றுகளும் கடவுளோடு அவர் கொண்டிருந்த உறவை வெளிப்படுத்தின, மக்களோடு அவர் கொண்டிருந்த உறவை வெளிப்படுத்தின, மக்களில் அவர் உருவாக்க இருந்த உறவை வெளிப்படுத்தின.
கடவுளோடு கொண்டிருந்த உறவு
கடவுள் தன்னோடு உடனிருக்கிறார் என்பதை போதித்து வந்தார் இயேசு. இயேசுவின் வாழ்வும் போதனையும் கடவுளின் உடனிருப்பின் அடையாளம், வெளிப்பாடு என்பது நமது நம்பிக்கை. ஆகவேதான் இயேசு உரிமையோடு கேட்கின்றார்: “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” கடவுள் தன்னோடு இருக்கின்றார் என்ற கருத்தை இந்த கூற்று வழியாக அறிவிக்கின்றார். இந்த கூற்று திருப்பாடல் 22 உள்ளது. இயேசு இந்த திருப்பாடலை 22 (நம்பிக்கையின் திருப்பாடல்) முழுமையாக சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது வேண்டியிருக்க வேண்டும். இதுதான் இயேசு கடவுளோடு கொண்டிருந்த நம்பிக்கை உறவு.
அதேபோல “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை” என்ற கூற்றின் வழியாக மீண்டும் தந்தையோடு கொண்டிருந்த உறவை வெளிப்படுத்துகிறார். பிறர் குற்றங்களை மன்னிப்பது தந்தை இயேசுவுக்கு கொடுத்த பணிகளில் ஒன்று. மன்னித்தல் வழியாக இயேசு இறை-மனித உறவை மீண்டும் சரிசெய்கிறார். எவ்வாறு மோசே பாலை நிலத்தில் வணங்கா கழுத்தைக் கொண்ட இஸ்ராயேல் மக்களுக்களை இறைவன் மன்னிக்கவேண்டும் என்று மன்றாடினாரோ அதேபோல இங்கு இயேசு மக்களின் மன்னிப்புக்காக மனறாடுகிறார்.
தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் என்று கூறுவதன் வழியாக தன்னை கடவுள்தான் இவ்வுலகிற்கு அனுப்பினார் என்றும், அதுவும் ஒரு பணிக்காக அனுப்பினார் என்றும், அந்த பணியின் நிறைவாக தனது உயிரையே மீண்டும் கடவுளிடம் ஒப்படைக்கின்றார் என்றும் இயேசு கூறுகிறார். மேலும் ஒப்படைத்தல் என்பது கடவுள் இயேசுவின் மேல் கொண்டுள்ள உரிமையை வெளிப்படுத்துகிறது. ஆகவே கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே இருந்த உறவு கடவுளின் உடனிருப்பை வெளிப்படுத்தியது, கடவுள் இயேசுவின் மேல் கொண்ட உரிமையை வெளிப்படுத்தியது, அவர்களிடையே இருந்த உறவு தந்தை-மகன் உறவு என்பதையும் வெளிப்படுத்தியது.
பாவிகளோடு கொண்ட உறவு
“தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை”. இயேசு இவ்வுலகிற்கு வந்தது மக்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத்தர. சிலுவை மரத்தில் இதையே மன்றாட்டாக வைக்கிறார் இயேசு. தனது மரணத்தின் வழியாக மக்களுக்கு மன்னிப்பை பெற்றுத்தந்து இறை-மனித உறவை புதுப்பிப்பது மட்டுமன்றி மக்களுக்காக பரிந்துபேசுபவராக மக்களோடு தன்னை இனைத்து மக்களோடு தனக்குள்ள உறவை ஆழப்படுத்துகிறார். மக்களோடு மக்களாக, மக்களோடு தானும் ஒன்றான (பாவம் தவிற) உறவு.
“நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்று கூறி தான் இவ்வுலகிற்கு வந்தது மீட்புப்பணிக்காக என்பதை வெளிப்படுத்துகிறார். குற்றவாளிகளோடு ஒன்றாக சிலுவையில் துன்பப்பட்டாலும் தான் குற்றவாளி அல்ல என்பதையும் அதேநேரத்தில் குற்றவாளிகளை இறைவனோடு ஒன்றினைப்பதுவே தனது தலையான பணி என்பதை நிருபித்துவிடுகிறார். எனவே பாவிகளோடு கொண்டுள்ள உறவு மீட்பர்-மக்கள் உறவு என்பதை வெளிப்படுத்துகிறார்.
சீடர்களோடு கொண்ட உறவு
தம் தாயிடம், 'அம்மா, இவரே உம் மகன்" என்றார். பின்னர் தம் சீடரிடம், 'இவரே உம் தாய்" என்றார்
.
மரியாள்தான் இயேசுவின் முதல் சீடத்தி என்ற உண்மை திருச்சபையின் துவக்க காலத்திலிருந்து பேசப்பட்டு வருகிறது. இயேசு கருவாக உருவாகியதிலிருந்து கல்லரையில் அடக்கம் செய்யப்படும் வரை இயேசுவை பின்தொடர்ந்தவர் மரியா ஒருவர்தான். இயேசுவின் அன்புச்சீடர் சிலுவை அடியில் நின்றுகொண்டிருந்தார் அவரும் இயேசுவை பின்தொடர்ந்த காலம்தொட்டு கல்லரைவரை அவருக்கு சீடராக இருந்தவர். இயேசு தனது மரணத்திற்கு முன்பாக இந்த சீடர்களிடையே ஒரு குடும்ப உறவை (தாய்-மகன்) வளர்க்கிறார். சீடர்களிடையே ஒரு குடும்ப உறவு இருக்கவேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றார். இந்த உறவை பினைக்கும் பாலம் இயேசுதான்.
தான் தன்னில் கொண்ட உறவு
“தாகமாய் இருக்கிறது” என்றார் மேலும் 'எல்லாம் நிறைவேறிற்று" என்று கூறுவதன் வழியாக தான் யார் என்பதையும் எதற்காக இவ்வுலகிற்கு வந்தார் என்பதையும் அழாகாக சித்தரித்துக் காட்டுகிறார். இறைவனின் திட்டத்தை நிறைவேற்றுவதுதான் தனது உணவெனக்கூறியிருக்கிறார் (யோவான் 4:34) இந்த இறைதிட்டத்தை நிறைவேற்றுவதுதான் தனது குறிக்கோள் என்றும் அதுவே தனது தாகம் என்றும் கூறுகிறார். தான் இவ்வுலகிற்கு வந்தது இறைதிட்டத்தை நிறைவேற்ற மேலும் அது நிறைவேற்றுவதுதான் தன் வாழ்வின் நோக்கம் என்றிருந்தவர் அது நிறைவேறியபோது எல்லாம் நிறைவேறிற்று என்று கூறி தனது வாழ்வை நிறைவு செய்கிறார்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இயேசுவின் சிலுவை மரணம் உறவில் நிறைவு காண்பதற்காவே என்று கூறலாம். இறைமனித உறவு, பாவிகளிடையே உள்;ள உறவு, சீடர்களிடையே உள்ள உறவு, தனக்குள்ளே உள்ள உறவு போன்ற எல்லா உறவுகளும் சிலுவையில் முழுமை அடைகின்றன. இன்னும் சற்று ஆழ்ந்து சிந்திப்போமென்றால் இயேசு தன்னையே மையமாக வைத்து தனக்கு மேல் உள்ள கடவுளின் உறவு, தன்னைச் சுற்றிஉள்ள மக்கள் (பாவிகள்) உறவு, மேலும் தனக்கு கீழ் உள்ள (பின் வருகின்ற) சீடர்கள் உறவு ஆகிய அனைத்தையும் ஒன்று சேர்க்கிறார், ஒன்று படுத்துகிறார், ஒன்றாக்குகிறார். இயேசுவில் எல்லா உறவுகளும் ஒன்றாகுகிறது. சிலுவையில் தொங்கும் இயேசு சிலுவை மரணம் வழியாக உறவை (ஒரே உறவு) ஒன்றாக்குகிறார்.