திருநீற்றுப் புதன்

முதல் வாசகம் : யோவேல் 2 : 12 - 18
தவக்காலம் ஒரு தனிக் காலம், இறைவன் நம் அருகில் உள்ள காலம்; இறைவனிடம் நாம் திரும்பி வருவதற்கு ஏற்ற காலம். மனமாற்றத்தின் காலம். மறுவாழ்வை மனதிற்குக் கொணர வேண்டிய காலம், தவக்காலத்தின் துவக்க நாளாகிய இன்று இறைவனே நம்மை மனம்மாறிய ஒரு புதுவாழ்வுக்கு அழைப்பதாக வாசகம் அமைந்துள்ளது.

இறைவனின் அளப்பரிய கருணை
நம்மைப் புனித வாழ்வுக்கு அழைக்கும் கடவுள் அருளும் இரக்கமும் உள்ளவர். "பொறுமையும் அளவில்லாத இரக்கமும் பொருந்திய இறைவா, ஆயிரம் தலைமுறைக்கும் இரக்கம் காட்டுபவரே. கொடுமையையும், குற்றத்தையும், பாவங்களையும் போக்குபவரே... எங்கள் கொடுமைகளையும் பாவங்களையும் போக்கியருளும்" (விப 34:6-9) என்ற மோசேயின் சொற்களில் எத்தகைய ஆழ்ந்த நம்பிக்கை வெளிப்படுகிறது? ஆம், “நாயிற் கடையாய்க் கிடந்த அடியோற்குத் தாயிற் சிறந்த தயாவான் தத்துவன்” நம் கடவுள்; “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும்” பரமன் நம் கடவுள் (திருவா). "பாசவேரறுக்கும் பழம்பொருளாகிய” அவ்இறைவனின் அருளை நாடுவோம். இத்தவக்காலம் முழுவதும் இக்கருணைக் கடவுளை, காணாமற்போன நூறாவது ஆட்டைத் தேடியலையும் ஆயனை, காலியாய் வாழ்ந்து காலத்தைக் கழித்த மகனுக்காக ஏங்கித் தவிக்கும் தந்தையை நம் கண்முன் நிறுத்தி வைப்போம். “கருணைத் தெய்வமே கண் பாராய், எம் பாவங்களை நீ பொறுத்தருள்வாய்” என்று கதறியழுவோம். “அப்பா கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்'' (லூக் 15 : 21) என்று கூறி அவர் பாதங்களில் விழுவோம்.

பாவிகள் மனமாற்றம்
பல வழிகளிலே நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறது இன்றைய வாசகம். "திரும்பி வாருங்கள், திரும்பி வாருங்கள்" (2 : 12-13) என்கிறது ஆண்டவரின் குரல். ஆம், நம்முடைய பாவங்களிலிருந்து தீய வழிகளிலிருந்து திரும்ப வேண்டும். மனம் மட்டும் திரும்புவதில் அடங்காது மனமாற்றம். நம் வாழ்வு, நம் நடைமுறைகள் மாறியமைய வேண்டும்.

"நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள் " (மத் 3:8) என்பார் திருமுழுக்கு யோவான். தவக்காலம் நமக்கு ஒரு சவால் காலம். நமது பாவ வாழ்வை, அநீத வாழ்வை, சுயநல வாழ்வை, அகங்கார வாழ்வை, ஆணவ வாழ்வை விட்டுவிட்டு இறைவனின் அழைப்புக்குச் செவிமடுப்போமா?

தவக்காலம் நம் பாவங்களுக்காக வருந்த வேண்டிய காலம்""உங்கள் இதயங்களைக் கிழித்துக்கொள்ளுங்கள்” (13) என்பார் யோவேல். உள்ளங்களைக் கிழித்துக்கொள்வது என்பது பாவத்திற்காக அழுது புலம்புதல் (12), நோன்பிருத்தல் (12,15) ஆகிய வழிகளில் செயல்படுதல். “தவக்காலம்” என்பதே இதைத்தானே சுட்டுகிறது? பல வழிகளில் நாம் தவமிருக்கலாம் : உடலை வருத்திக்கொள்வது, உள்ளத்தை, உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது, தேவைகளைக் குறைப்பது, பிறருக்கு இல்லையென்னாது ஈவது இவையன்ன தவச் செயல்களால் நாம் தவக்காலத்தை நிரப்புவோமா?

தவக்காலம், அன்பு நம் வாழ்வில் சிறப்பிடம் பெற வேண்டிய காலம். சண்டைச் சச்சரவுகள், மனத்தாங்கல்கள் பகைமை விரோதம் இவற்றை விடுத்து, அனைவரும் இறைவனின் பிள்ளைகள், சகோதரர்கள் என்ற உணர்வு நம்மில் முதலிடம் பெறவேண்டிய காலம் (15-16-17). இக்காலத்தில் இறைவனின் அன்பும் இரக்கமும் நமக்குக் கிட்ட வேண்டுமாயின் (18) நாமும் ஒருவருக்கொருவர் அன்பு செய்வோம்.

தவக்காலம் செபக் காலம் (15-17). சிறப்பாக இறை மக்களோடு இணைந்து செபிக்க வேண்டிய காலம் (15-16). ஆண்டின் ஏனைய காலத்தைவிடச் சிறப்பாக திருப்பலி, சிலுவைப் பாதை பிற பக்தி முயற்சிகளில் பங்குபெற்று, இறைவனின் இரக்கப் பெருக்கிற்காகச் செபிக்க வேண்டிய காலம். குடும்பத்தோடு, பங்கு மக்களோடு சேர்ந்து செபிக்கும் வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்வோமா? “ஆண்டவரே உம் மக்கள்மேல் இரங்கியருளும்” என்று வேண்டுவோம்.

ஆண்டவர் அருளும் இரக்கமும் உள்ளவர்.
இரண்டாம் வாசகம் 2 கொரி 5 20-6:2
உடலை வறுத்தி, உணவு, உறக்கம் துறந்து தவம் செய்வதும், மனத்தை ஒருநிலைப்படுத்தி இறைவனைத் தியானித்து, தன் வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக்கொள்வதும் அனைத்து சமயங்களின் போதனை. மோசே நாற்பது ஆண்டுகள் இஸ்ரயேல் இனத்தை வழிநடத்திச் சென்றார் (விப); நமதாண்டவர் நாற்பது நாட்கள் ஒன்றும் உண்ணாமலும் குடிக்காமலும் நோன்பிருந்தார் (மத்.4:2); தவக்காலத்தின் நாற்பது நாட்களில் நமது வாழ்வைச் சீர்படுத்திக் கொள்ள திருச்சபை நம்மை அழைக்கிறது.

உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு. குறள் - 261

ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டென்பது சபை உரையாளரின் போதனை (3:1). "மனம் மாற இதுவே ஏற்புடைய காலம்” என்பது திருச்சபையின் போதனை.


உரோமைப் பேரரசில் பணிபுரிந்த தூதுவர்கள் மன்னனின் சார்பில் வேற்று நாடுகளுக்குச் சென்று, அவற்றுடன் தொடர்பு ஏற்படுத்துவர்; அவற்றைத் தம் வல்லரசுடன் இணைப்பதும் உண்டு. இப்பின்னணியில் தான் பவுல் அடியார் தன்னையே இயேசுவின் தூதுவர் என்றழைக்கிறார். அவர் இயேசுவால் அனுப்பப்பட்டவர். இறைவனின் அன்பையும் கருணையையும் எடுத்துரைப்பதும், அனைவரையும் கடவுளோடு ஒப்புரவாக்குவதுமே தன் பணி என்கிறார். “நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்" (20). ஒவ்வொரு கிறிஸ்தவனும் திருமுழுக்கு, உறுதிபூசுதல் வழியாக இறையரசின் தூதுவன். தன் வாழ்வால் தன் நாட்டின் பெருமையை நிலைநாட்டி, ஏனைய நாடுகளைத் தன் நாட்டுடன் இணைக்க முயலும் தூதுவர் போல், ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னுடன் தொடர்பு கொள்பவர்களை மாற்றும் சக்தியாய், வேறுபட்ட சமுதாயத்தில் அமைதியை நிலைநிறுத்தும் பாலமாய்ச் செயல்பட வேண்டும்.

நாம் அனைவரும் பாவிகள்

பரம தந்தை தனது சொந்த மகனையே அனுப்பி, அவரைப் பாவத்திற்குப் பலியாக்கி, நம்மைத் தம்முடன் இணைத்துக்கொண்டார் (உரோ. 8:3); நமக்காகக் கிறிஸ்து சாபத்துக்கு உள்ளானார் (கலா 3 : 13). ஒப்புரவு செய்வதென்பது மேடு பள்ளங்களைச் சமப்படுத்தி, ஒழுங்குபடுத்தலாகும். இறைவனிடமிருந்து நம்மைப் பிரித்தது பாவம். மீண்டும் நம்மை இறைவனுடன் இணைத்த பெருமை இயேசுவையே சாரும். இறைவனே முன் வந்து, இயேசு வழியாக நம்மைத் தம்முடன் இணைத்துள்ளார். கல்வாரியில் தன் இரத்தத்தால் முத்திரையிட்டு, இந்த இணைப்பை இயேசு ஏற்படுத்தியுள்ளார். இதன் பயன் அனைத்து மக்களுக்கும் ஒப்புரவு திருவருட்சாதனத்தின் வழியாகக் கிடைக்கிறது. என் பாவங்களை மையப் பொருளாகக் கொள்வதைவிட, அவற்றை அழித்து என்னை இறைவனுடன் இணைத்த, இயேசுவையே என் வாழ்வின் மையப் பொருளாக, நன்றியின் மூலப் பொருளாகக் கொள்ள வேண்டும். ஒப்புரவு அருட்சாதனம் என்னில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன? தனக்கு அளிக்கப்பட்ட இறையருள் வீணாகவில்லை என்பதை, “நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்து விட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” என்ற (2 திமொ 4:7) பகுதியில் குறிப்பிடுகின்றார் பவுல் அடியார். நமக்குத் தடையாயிருக்கும் எந்தச் சுமையையும், நம்மை எளிதில் வயப்படுத்தும் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக என்பது பவுல் அடியாரின் அறிவுரை. இயேசுவின் முதல் வருகையாகிய பிறப்புக்கும், மாட்சிமையுடன் கூடிய இரண்டாம் வருகைக்கும் இடையே உள்ள காலமே மக்கள் மன மாற்றத்தின் காலம். அக்காலத்தில் அந்நியராய் அஞ்சி நடக்கவேண்டும் (1 பேதுரு 1: 17); இக்காலத்தை முற்றிலும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் (1 தெசலோ 5: 6)."தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன். விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்" என்று கூறிய ஆண்டவர் (எசா 49 : 8) தவக்காலத்தில் சிறப்பான வரங்களை வாரி வழங்கக் காத்திருக்கிறார். இவற்றை ஏற்க நாம் தயாரா?

நீங்கள் பெற்ற கடவுனின் அருளை வீணாக்க வேண்டாமென மன்றாடுகிறோம்.
நற்செய்தி : மத் 6:1-6. 16 - 18
ஒரு யூதனுடைய சமய வாழ்வின் அடிப்படைத் தூண்களாகக் கருதப்பட்டவை மூன்று. அவை, ஈதல் (பிச்சை இடல்), செபித்தல், நோன்பு இருத்தல் ஆகும். தவக்காலத்தைத் துவக்கும் இன்று, இக்காலத்திலே கிறிஸ்துவின் பாடுகளை நம் கண்முன் வைத்து, நம் பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டுவதற்கு, இம்மூன்று நற்செயல்களும் நமக்கும் உதவ வேண்டும் என்ற முறையில் இவை இன்றைய வாசகமாக தரப்படுகின்றன. இங்கு, இயேசு கோடிட்டுக் காட்ட விரும்புவது இந்நற்செயல்களைப் பிறர் அறிய வேண்டும், அறிந்து புகழ வேண்டும் என்பதற்காக நாம் செய்யக் கூடாது என்பதாகும்.

பிறர்க்கு ஈந்து வாழ்வோம்
தவக்காலத்தில் நாம் செய்யக்கூடிய பயனுள்ள செயல்களில் ஒன்று, பிறருடைய தேவைகளில் அவர்களுக்கு உதவுவதாகும். பிறரை மகிழ்ச்சிப்படுத்துவதற்கும், நம் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறுவதற்கும் ஏற்ற ஒரு சாதனம் இது. ஈயென்று வருபவனுக்கு இரங்கிப் பிச்சை கொடுப்பதில் மட்டும் அடங்காது இது; நாமே வலியத் தேடிச் சென்று பிறருக்கு உதவும் போதுதான் இது முழுமை பெறும். எனவே பலன் கருதாது கொடுப்போம்; கொடுத்துக் கொடுத்துக் கைகள் காய்த்துப் போகும் அளவிற்குக் கொடுப்போம். “வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; மற்ற எல்லாம் குறியெதிர்ப்பை நீரதுடைத்து” (குறள்-221) என்ற முறையிலே அளவின்றி, கணக்கு வழக்கின்றிக் கொடுப்போம். “தருமம் சாவினின்று காப்பாற்றும்; எல்லாப் பாவத்தினின்றும் தூய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை அது நிறைவுள்ளதாக்கும் ” (தோபி 12 : 9) என்ற சொற்கள் இத்தவக்காலத்தை மிகப் பயனுள்ளதாக நமக்கு மாற்றுவனவாக. “ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது ஊதியமில்லை உயிர்க்கு" (குறள்-231).

நமது செபத்தை வலுப்படுத்துவோம்
"செபம் உயர்ந்தது; மற்றெல்லா நற்செயல்களையும்விட மிக உயர்ந்தது" என்பது யூத ராபியர் கூற்று. ஒவ்வொரு யூதரும் “உற்றுக்கேள்” (Shema) என்று துவங்கும் விசுவாச அறிக்கையையும் (காண்: இச. 6 : 4-9; 11: 13-21; எண் 15: 37 – 41), பதினெட்டுப் புகழுரைச் செபத்தையும் (Shemoneh Esrch) ஒவ்வொரு நாளும் மும்முறை செபித்தல் மரபு. இயேசுவும் இம்மரபிலே வளர்ந்தவர். எனவே அவர் அடிக்கடி செபித்ததுமின்றி, நம்மையும் செபிக்க அழைக்கிறார். இத்தவக்காலம் செபக் காலம். கிறிஸ்தவ உலகமே இந்நாற்பது நாளும் அதிகமாக செபத்திலும் வழிபாட்டிலும் ஈடுபட்டு இருப்பதும் செபத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டுகிறது. “கற்பனைக்கும் அரிதான காரியங்களைக்கூட செபத்தின் வழி அடையலாம்” என்றார் பெரியவர் ஒருவர். எனவே இக்காலத்தில் நம் செபம் பன்மடங்காகப் பெருகட்டும். உலகிற்காகச் செபிப்போம். "அடுத்தவர்களுக்காகச் செபிப்போம்; நமக்காகச் செபிப்போம்".

தவங்கள் செய்வோம்
நோன்பிருத்தல் வழி இறை அருள் நாடல் எம்மதத்திலும் காணப்படுவது. தவக்காலம் நோன்புக்கு ஏற்ற காலம். உண்ணாதிருந்துதான் நோன்பு செய்யவேண்டுமென்று இல்லை. நோன்புக்கேற்ற மனநிலையை பல்வழிகளில் காட்டலாம். “அடக்கறும் புலன்கள் ஐந்தடக்கி ஆசையாமவை துடக்கறுத்தலும்” நோன்பே; "நேசபாசம் எத்திறத்தும் வையாத நிலையும்” நோன்பே. "நின்பற்று அலால் ஓர்பற்று மற்றது உற்றிலேன்” என்ற நிலையில் வாழ்வதும் நோன்பே, "மெய்வருத்திக் கூடாக்கி நிற்றலும்” நோன்பே (திருமழிசை). இத்தகைய பலதரப்பட்ட நோன்புகள் நம்முடைய தவக்காலத்தை நிறைக்கட்டும். இவற்றைக் கைம்மாறு கருதாது செய்வோம் நாம் செய்யும் நற்செயல்களைப் பிறர் காணச் செய்யும்போது, பிறரிடமிருந்தே இந்நற்செயல்களுக்குப் புகழும் பரிசும் பெற்று விடுகிறோம். மறுஉலக வாழ்வுக்கு இவை உதவா. எனவே பிறர் அறியாத முறையில் நற்செயல்கள் புரிவதே ஒரு தவம்தான் என்பதை உணர்ந்து இத்தவக்காலத்தை, ஈதல், செபம், தவம் ஆகிய நற்செயல்களில் செலவளிப்போம்.

மறைவாயுள்ளதைக் காணும் உங்கள் தந்தை கைம்மாறு அளிப்பார்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  ஈஸ்டர் பெருவிழா