புனித வெள்ளி

Good friday

திருச்சிலுவை ஆராதனைக்கு தேவையானவை


கோவில் முன்புறம்: திருவுடைகள் (சிகப்பு) மூடப்பட்ட சிறிய சிலுவை, மெழுகுதிரிகள், மரமணி.
பீடத்தின் முன் பகுதியில்: பாய், தலையணை விரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
பீடம்; திருப்பலி புத்தகம் வைக்கப்பட்டிருக்கும் வாசக மேடை துணியின்றி இருக்கும்.
சிறிய மேசையில்: திருமேனித்துகில், நற்கருணைத் தட்டு, சிலுவைகள், உண்டியல், துடைக்கத்துணி, திருப்பாடுகள் வாசிக்க மூன்று புத்தகங்கள், பாத்திரம்துடைக்க சிறிய துணி, குவளையில் தண்ணீர்.
குறிப்பு: திருச்சிலுவையை முத்தி செய்த பிறகு பீடத்தின் மீது துணி விரிக்கப்படும்.
இறுதியில் பீடத்தின் துணியும், சிலுவையை மூடியிருக்கும் துணியும் அகற்றப்படும்.

முன்னுரை:

தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு யாரிடமும் இல்லை என்று அன்புக்கு இலக்கணம் வகுத்த இயேசு, இதோ இன்று தன்னுயிரை நமது பாவங்களுக்கு கழுவாயாகக் கொடுத்து நாம் மீட்புப் பெற அழைப்பு விடுக்கின்றார். அன்பின் உச்சகட்டமே தன் உயிரைக் கொடுப்பதுதான் என்று வார்த்தைகளால் மட்டுமல்ல மாறாக வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி அவமானத்தின் சின்னமாக கருதப்பட்ட சிலுவையை, தம்முடைய தியாகப் பலியாக, மீட்பின் சின்னமாக மாற்றுகிறார். ஆம் இன்று திருபாடுகளின் புனித வெள்ளி.

பழைய ஏற்பாட்டில் பாலைவனத்தில் யாவே இறைவனுக்கு எதிராகப் பாவம் செய்து பாம்பின் கடியினால் இறந்தவர்கள், உயர்த்தப்பட்ட வெண்கலப் பாம்பை பார்த்து உயிர்பிழைத்தார்கள். அந்த முன் அடையாளத்தன்படி விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையில் சிலுவையில் பலியான செம்மறியாக உயர்த்தப்ட்டிருக்கிற இயேசுவைப் பார்த்து நாமும் மீட்பு பெற வரம் வேண்டி இன்றைய நாளிலே மன்றாடுவோம். இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் ஆழமாக சிந்தித்தவர்களாக வழிபாட்டிலே பக்தியோடு பங்கேற்போம்.

இன்றைய வழிபாடானது நான்கு பிரிவுகளை உடையதாக அமைந்துள்ளது
1. இறைவார்த்தை வழிபாடு
2. பொது மன்றாட்டுக்கள்
3. திருச்சிலுவை ஆராதனை
4. நற்கருணை விருந்து

குருவானவர் முகம் குப்புற விழுந்து செபிக்கும்போது:

இதோ குருவானவர் இயேசுவின் பாடுகளை நினைவுபடுத்தி செந்நிற உடை அணிந்து முகம் குப்புற விழுந்து நம் அனைவரோடும் சேர்ந்து செபிக்கிறார். இந்த நிகழ்வு கிறிஸ்துவின் மரணத்தால் வந்த துயரத்தையும், அவருக்கு முன்னால் நமது தகுதியில்லாத தன்மையையும் காட்டுகிறது. அதோடு நாம் அனைவரும் அவரைச் சார்ந்து வாழுகிறோம் என்பதையும் காட்டுகிறது. நாமும் மன்டியிட்டு அமைதியாக குருவோடு செபிப்போம்.

எழுந்தவுடன்:

இப்போது குரு இயேசுவின் பாடுகளால் கிடைத்த மீட்பின் பலனை நமக்கு கொடையாக கொடுத்தருளுமாறு தந்தையாம் இறைவனிடம் செபிப்பார். அனைவரும் எழுந்து நின்று செபிப்போம்.

1. இறைவாக்கு வழிபாடு

முதல்வாசக முன்னுரை (எசா 52: 13 - 53: 12)

இயேசு கிறிஸ்து துன்புறும் ஊழியர் என்பதையும், அவர் வரும்போது எவ்வாறு பாடுபடப் போகிறார், துன்பங்களை ஏறகப்போகிறார், இவ்வுலகத்தை மீட்க கையளிக்கப் போகிறார் என்பதை இறைஏவுதலால் முன்னறிவிக்கிறார் எசாயா இறைவாக்கினர். எனவே வாசகத்தை கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 116: 12-13. 15-16. 17-18 (பல்லவி: 1 கொரி 10: 16)

பல்லவி: கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்வதே.

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். - பல்லவி

ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். - பல்லவி

நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (எபிரே 4: 14-16, 5: 7-9)

இயேசு கிறிஸ்து குருக்களிலெல்லாம் சிறந்த நித்திய தலைமைக்குரு. இயேசு கிறிஸ்து மற்ற குருக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். அதோடு பழைய ஏற்பாட்டின் பலிப்பொருளுக்கும், புதிய ஏற்பாட்டின் செம்மறி பலியாகிய கிறிஸ்துவுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை இப்போது வாசிக்க கேட்போம்.

நற்செய்தி வாசகம் (யோவான் 18:1 - 19:42)

(மறையுரை)

2. பொதுமன்றாட்டுக்கள்:

அன்பார்ந்தவர்களே உலகின் தேவைகளுக்காகவும் திருச்சபையின் தேவைகளுக்காகவும், இயேசு தன்னை பலியாக்கிய இந்த நாளில் உருக்கத்தோடு மன்றாடுவோம். இப்போது குருவானவர் மன்றாட்டை வாசிக்கும்போது நின்றுகொண்டே ஒவ்வொரு மன்றாட்டுக்குப் பிறகும் ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் என்று சொல்லவும், பிறகு குருவானவர் செபிப்பார். அப்போது அனைவரும் மண்டியிட வேண்டும் செபித்து முடித்தவுடன் ஆமென் என்று பதில் கூறவும்.

3. திருச்சிலுவை ஆராதனை

இப்போது திருச்சிலுவை ஆராதனை ஆரம்பமாகிறது. இயேசு கிறிஸ்துவின் தியாக பலியால் சிலுவை வெற்றியின் சின்னமாக, மீட்பின் சின்னமாக, தியாகத்தின் சின்னமாக மாறியது.

சுமார் 4ம் நூற்றாண்டில் இயேசுவின் பாடுபட்ட சிலுவைக் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து திருச்சிலுவைக்கு ஆராதனை செய்து, முத்தி செய்யும் பழக்கம் உருவானது. அதன் அடிப்படையில் குருவானவர் மூடப்பட்டிருக்கும் திருச்சிலுவையை பீடத்தை நோக்கி பவனியாக கொண்டுவருவார். திருச்சிலுவை , பீடத்தை அடைந்தவுடன் குருவானவர் மூடப்பட்டிருக்கும் சிலுவையை சிறிது சிறிதாக அகற்றி திருச்சிலுவை மரமிதோ என்ற வரிகளை பாட நாம் அனைவரும் வருவீர் ஆராதிப்போம் என பாடுவோம். (இவ்வாறு மூன்று முறை பாடப்படும்). பிறகு முதலில் குருவானவர் முத்தி செய்வார் பிறகு அனைவரும் பக்தியோடு, வரிசையாக அமைதியாக வந்து முத்தி செய்வோம்.

4. நற்கருணை விருந்து

இப்போது பீடத்தின் மீது துணி விரிக்கப்படும், திருமேனித்துகிலும் திருப்பலிப் புத்தகமும் வைக்கப்படும், பின் குருவானவர் புனிதமிகு நற்கருணையை புது பீடத்திலிருந்து தலைமை பீடத்திற்கு கொண்டு வருவார். நாம் பக்தியோடு நமது வணக்கத்தைச் செலுத்தவோம். பின் இயேசு கற்றுக் கொடுத்த செபத்தை சொல்லிய பிறகு, நற்கருணை விருந்தில் பங்கெடுப்போம். நற்கருணை விருந்து முடிந்தபின் பீடத்தின் மீது விரிக்கப்பட்ட துணி மற்றப்பொருட்களும் அகற்றப்பட்டு வெறுமையாகப்படும்.

Good friday

இறுதியில்

கல்வாரிப் பலியும், சிலுவையும், இறை வல்லமையான அருளும், ஆசீரும் பொங்கி வருகின்ற சக்தியின் இருப்பிடம். எனவே ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் தியானித்து அருள் வாழ்விற்காய் உயிர்க்க வேண்டும். மேலும் நமக்கு மீட்பைக் கொணர்ந்த வெற்றியின் சின்னமாகிய சிலுவையையும், அதில் பலியான நம் மீட்பர் இயேசுவையும் தியானித்த வண்ணம் அமைதியாக வீடு செல்வோம்.


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்