ash

மறையுரை சிந்தனைகள்

இன்றைய வாசகங்கள்:-
யோவேல் 2 : 12-18 - 2 கொரிந்தியர் 5:20-6:2 - மத்தேயு 6:1-6, 16-18

sermen

வளர வேண்டிய செடிக்குத் தண்ணீர் அறவே ஊற்றவில்லையென்றால் அது பட்டுப்போகும். அளவுக்கு மீறி தண்ணீர் தேங்கி நின்றாலும் அதுவும் ஆபத்து. ஏனெனில் செடி அழுகிவிடும். இசைக் கருவிகள் வீணை அல்லது வயலின் நரம்புகளை அதிகம் முறுக்கினாலும் இசையில் இன்பம் கிடைக்காது. அதிகம் தளர்த்தினாலும் இன்பம் தராது. நரம்புகளின் விரைப்பு இருக்க வேண்டிய நிலையில் இருந்தால்தான் இசையின் இன்பத்தை நுகர முடியும். இயல்பாக இருக்கும். எல்லாம் இனிமையாக இருக்கும். இயல்பு மாறும்போது எல்லாம் கசந்துவிடும். இயல்பாக நாம் வாழாத நேரத்தில், பிறரை இயல்பாக நோக்காத நேரத்தில் நாம் பல்வேறு மன அழுத்தத்திற்கும், வியாதிகளுக்கும் ஆளாக்கப்படுகிறோம் என்பது உளவியலார் கருத்து.

இன்று நாம் இயல்பாக இருக்க, வாழ அழைப்பு விடுக்கிறார் நம் ஆண்டவர் இயேசு. இயல்பு மாறி செயல்படும்போது தான் அதற்கு வெளிவேடம் என்று பெயரிட்டு அழைக்கின்றார் (மூன்றாம் வாசகம்). வெளிவேடம் என்பது மோசமான குணம், அது மனிதனைக் கீழான நிலைக்கு இட்டுச் செல்லும் நஞ்சு போன்றது. இயல்பாகச் செயல்படாத யூதர்களை, பரிசேர்களை, சதுசேயர்களை வெளிவேடக்காரர் என்றும் அழைக்கிறார். நீங்கள் தர்மம் செய்யும்போது, இறைவேண்டல் செய்யும்போது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம் (மத். 6:2, 5) என்கிறார் இயேசு. இன்றைய நற்செய்தியிலே, அறச்செயல்களாக தர்மம், இறைவேண்டல், நோன்பு ஆகிய மூன்றையும் குறிப்பிட்டு, இவை மூன்றும் இயல்பாக செயலில் காட்டும்போது நிறைவாழ்வை நோக்கி இட்டுச் செல்லும் கொடைகள் என்றும், இதில் வெளிவேடம் புகுந்தால் அனைத்தையும் தலைகீழாக்கிவிடும் எனவும் எச்சரிக்கிறார் இயேசு. இது எப்படியெனில் ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் என்ற நிலைக்கு வந்துவிடும்.

இதை முன் வைத்துத்தான் இறைவாக்கினர் யோவேல் மூலமாக, "நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம். உங்கள் இதயத்தைக் கிழித்துக்கொண்டு, (யோவே. 2:13) உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்'' என்றும் அழைப்பு விடுக்கின்றார் (முதல் வாசகம்).

ஞானத்தோடு வாழ்ந்த ஒரு லட்சாதிபதியைப் பார்த்து ஒரு ஞானி கேட்டார்: "உன்னிடம் உள்ள சொத்துக்கள் எவ்வளவு" என்று. "10 லட்சம்" என்றான் அந்தப் பணக்காரன். "உனக்கு வயது என்ன என்று ஞானத்தோடு கேட்டபோது, எனக்கு வயது இரண்டு மட்டும்தான்" என்றான் அந்தப் பணக்காரன். ஞானியோ, " நீ பொய் சொல்லுகிறாய்” என்று சொன்னவுடன் அந்தப் பணக்காரன் சொன்னான், "அய்யா, எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் என்னோடு வரப்போவது நான் செய்யும் தர்மம். இது ஒரு வயது. எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் நான் இறைவேண்டுதலுக்குச் செலவிடும் நேரம் மட்டும்தான். இது இரண்டாவது வயது. இவை இரண்டுமே என் வயது" என்றான். ஆம், சிந்திக்க வேண்டிய நிகழ்வு!

இறுதியாக, சபை உரையாளர் (சஉ 3:1-8) சொல்வதுபோல், ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு. பிறப்பதற்கு ஒரு காலம், இறப்பதற்கு ஒரு காலம் உண்டு என்று. அதேபோல நமது உறவையும், தொடர்பையும் சரி செய்து நம்மைப் புதுப்பிக்கும் காலம் தான் இந்தத் தவக்காலம். இந்தப் புனித காலத்தில் இயல்பாக, தாழ்ச்சியோடு, தர்மம், இறைவேண்டல், நோன்பு என்ற அறச் செயல்களால் நம்மையே புதுப்பித்து அலங்கரித்துக் கொள்வோம்.


sermen

இடி முழக்கமாய் இன்று எதிரொலிக்கும், அதிரச் செய்யும் இறைவாக்கு “மனிதனே, நீ மண்ணாக இருக்கிறாய்” என்பது.

செப வணிகர்கள் தங்கள் செப வியாபாரத்தில் பெரிதும் முதலீடு செய்யும் இறைவார்த்தை : "உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்”. (யோவான் 16:20) ஆனால் இன்றைய வழிபாட்டின் அழைப்பு : "பாவிகளே உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள் இருமனத்தோரே, உங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துங்கள். உங்கள் நிலையை அறிந்து துயருற்றுப் புலம்பி அழுங்கள். உங்கள் சிரிப்புப் புலம்பலாகவும், மகிழ்ச்சி ஆழ்துயரமாகவும் மாறட்டும்”. (யாக்கோபு 4:8,9).

ஐரோப்பாவில் பெரும் பணக்காரன் ஒருவன் தன் பணச் செருக்கால், நலமற்ற அரசியல் செல்வாக்கால் இழைத்த தீமைகள், செய்த அட்டூழியங்கள் கணக்கில் அடங்கா. திமிரான செயல்பாடுகள் அவனைத் தீயவன் என ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக்கின. காலப் போக்கில் அவன் வாழ்வில் ஒரு மாறுதல். திருந்தி வாழ விரும்பினான். திருத்தந்தையை நாடி ரோமை சென்றான். அப்போது திருத்தந்தை 6ஆம் பத்திநாதர் அவனை வரவேற்றார். கட்டி அணைத்து ஆறுதல் சொன்னார். அவன் பாவ அறிக்கை செய்த போது என்ன பரிகாரத் தண்டனை கொடுப்பது என்று தெரியாமல் திணறினார். உடல் நலிவு, உள்ளச் சோர்வு, அலுவல் தொல்லை என்று எந்தக் கடினத்துவத்துக்கும் தடையாய் இருந்தது. நெடுநேரம் யோசித்து முடிவில் ஒரு மோதிரத்தை அவனிடம் கொடுத்து அணிந்து கொள்ளச் சொன்னார். அதில் “நீ சாவாய் என்பதை மறவாதே” என்று பொருள்பட “மேமந்தோ மோரி" என்ற இரு இலத்தீன் வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. அதனை ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லும்போதும் விழித்தெழும் போதும் மூன்றுமுறை படிக்க வேண்டும் என்பதே திருத்தந்தை கொடுத்த பரிகாரம். தொடக்கத்தில் இது எளிதாகத் தோன்றினாலும் விரைவில் வாழ்வின் நிலையாமை பற்றிய உணர்வு அவனை ஆட்கொள்ள கடைசியில் செய்யத் தயங்கிய பரிகாரத்தையெல்லாம் செய்து நல்லவனாக இறந்தானாம்.

திருநீற்றுத் திருநாள் இன்று தாய்த்திருச்சபை அந்தத் திருத்தந்தையைப் போல நமக்கெல்லாம் மோதிரத்தைத் தருவதில்லை. பதிலாகச் சாம்பலைத் தருகிறது. எந்தக் கருத்தைப் புலப்படுத்தத் திருத்தந்தை மோதிரத்தைத் தந்தாரோ, அதே கருத்தை இன்னும் ஆழமாக வலியுறுத்தச் சாம்பலை நெற்றியில் பூசி உணர்த்துகிறது "நீ மண்ணாக இருக்கிறாய். மீண்டும் மண்ணுக்குத் திரும்புவாய்".

இந்தத் திருநீறுதான் எத்துணை அர்த்தமுள்ளது!

இதோ நான் பூசியிருக்கிறேனே சாம்பல். இதுதான் நம் கடைசிக் கதி! இறுதியில் நாமெல்லாம் மண்ணாகப் போகிறவர்கள் தாம். பின் இதற்கு இந்த அர்த்தமற்ற டாம்பீகம்? வாழ்வின் பொருள் உணர்ந்து வாழ்வோம் - இப்படி ஓர் அர்த்தம்.

சாம்பல் அணிந்த நெற்றி பார்ப்பவரையெல்லாம் தெய்வத்தை நினைக்கச் சொல்கிறது - இப்படி ஓர் அர்த்தம்.

காலையும் மாலையும் கடவுள் இவன்/ள் என்னுடையவன்/ள் கான்கிற பொருளில் நம் நெற்றியில் போடும் கையெழுத்து - இப்படி ஓர் அர்த்தம்

.

குருத்தோலை ஞாயிறன்று நாம் பிடித்த அதே மந்திரித்த ஒலைகளை சுட்டெரித்து அதன் சாம்பலை நெற்றியில் இடுகிறபோது வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான். கிறிஸ்தவனுக்கு வாழ்வதும் சாவதும் ஒன்றுதான். கிறிஸ்து மட்டும் போதும் - இப்படியும் ஓர் அர்த்தம்.

அதுசரி, நெற்றியில் திருநீற்றை இட்டுக் கொள்வது ஒருநாள்தான். ஆனால் அது ஊட்டும் உணர்வுகள் ஒவ்வொரு கணமும் நம் உள்ளத்தில் நிரம்ப வேண்டாமோ?

திருநீறு - திருச்சபையின் அருள் கருவிகளுள் ஒன்று. சுவை - யான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. மனவருத்தத்துக்கும் மனத் தாழ்ச்சிக்கும், ஒறுத்தலுக்கும், ஒப்புரவுக்கும் உரிய நினைவுப் பொருளாகத் திகழ்வது. அதற்குப் பழைய ஏற்பாட்டில் எத்தனை சான்றுகள்!

- இறை வல்லமையை உணர்த்தும் சாம்பல். (வி.ப. 9:8-9)- இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தும் சாம்பல்.(2 சாமு. 13:19)- தவறினை உணர்ந்து செயல்படத் தூண்டும் சாம்பல். (யோனா 3:6)- உலகப் பற்றினை ஒழித்திடத் தூண்டும் சாம்பல். (எசாயா 44:20)- பாவ மன்னிப்புக்கு வழிகாட்டும் சாம்பல். (எரே.6:26)

தவக்காலம் நமது மீட்பின் காலம். நம் ஆன்மாவின் வசந்த காலம். பாவத்தால் நாம் மூவித உறவுகளை முறித்துள்ளோம். இவ்வுறவுகளை மீண்டும் புதுப்பித்து ஆழப்படுத்த, ஏன் முன்னிலும் வலிமையுடையதாக்க மிக எளிய மூன்று வழிகளை நமக்குத் திருச்சபை சுட்டிக் காட்டுகிறது. செபம், தவம், பிறரன்புச் செயல்கள்.

செபத்தால் இறைவனோடும் தவத்தால் (தன்னல மறுப்புச் செயலால்) நம்மோடும் பிறரன்புச் செயல்களால் நம் சகோதரரோடும் உறவைப் புதுப்பிக்க இந்தவக்காலம் நம்மை அழைக்கிறது. அதற்குக் கூட உண்மையான, நேர்மையான முழுமையான மனமாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட மனநிலை வேண்டும்.

அடிப்படை மனமாற்றம் என்பது தன்னலத்திலிருந்து விடுபட்டு கிறிஸ்துவுடன் இணைந்து இறைத்தந்தைக்காகத் தூய ஆவியானவரில் வாழ்வதாகும்.தூய ஆவியானவரில் வாழ்வதாகும்.

.
sermen3

மறையுரைச் சிந்தனை - சாம்பல் புதன் - கடவுளோடு ஒப்புறவாவோம்.

இன்று அன்னையாம் திரு அவை சாம்பல் புதனை/விபூதிப் புதனை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றது. கடவுளோடு ஒப்புறவாகவும், அதன்வழியாக நம்மோடு வாழக்கூடிய உடன் சகோதர, சகோதரிகளோடு ஒப்புறவாகவும் இறைவனால்/ திருச்சபையால் தரப்பட்ட அருளின் காலம்தான் இந்த தவக்காலம். இத்தவக்காலத்தில் நாம் இறைவனோடும், நம் அயலாரோடும் எப்படியெல்லாம் ஒப்புறவாகலாம் என்பதை இன்றைய வாசகங்களின் வழியாகச் சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவாக்கினர் யோவேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் கூறுகிறார், “இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்.. நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்” என்று. இங்கே ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள் என்ற வார்த்தையானது திரும்பத் திரும்ப வருவதை நாம் நமது கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதேபோன்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அதாவது கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 5:20 ல் பவுலடியார் கூறுவார், “ஆகவே, கடவுளோடு ஒப்புரவாகுங்கள்” என்று. எனவே நாம் ஆண்டவராகிய கடவுளிடம் திரும்பி வந்து, அவரோடு ஒப்புறவாகவேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுளமாக இருக்கின்றது.

கடவுளோடு எப்படி ஒப்புறவாகலாம் என்பதற்கு ஆண்டவர் இயேசு நற்செய்தியில் மூன்று முக்கியமான காரியங்களை கூறுவார். அவையாவன 1.தர்மம் 2.நோன்பு 3.இறைவேண்டல். இதில் தர்மம் என்பதை மட்டும் குறித்துச் சிந்தித்துப் பார்த்து இறைவனோடு ஒப்புறவாக முயல்வோம்.

எலியாஸ் என்ற ஓர் ஆன்மீக எழுத்தாளர் கூறுவார், “தபால் பெட்டியில் போடப்படும் கடிதம் உரிய இடத்தில் போய் சேர்வதுபோல, ஏழை ஒருவருக்கு நாம் செய்யும் தர்மம் இறைவனுக்கு நேரடியாகச் சென்று சேர்ந்துவிடுகிறது” என்று. ஆம், ஏழைக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்கே கடன் கொடுக்கிறவர் என்று நீதிமொழிகள் புத்தகம் 19:17 ல் வாசிக்கின்றோம். ஆகவே ஏழைகளுக்கு/ எல்லா மக்களுக்கு தர்மம் செய்வதன் வழியாக எப்படி இறைவனோடு ஒப்புறவாகலாம் என்பது பற்றி சிந்தித்துப் பார்ப்போம்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக சிகாகோ நகரிலே காவல்துறையினர் மத்தியில் வித்தியாசமான போட்டி நடைபெற்றது. அது என்னவென்றால் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டு மக்கள் கூட்டம் கூடுகிறது என்றால், அவர்களை எப்படி அங்கிருந்து கலைப்பது என்பதுதான் அக்கேள்வி.

காவல்துறையினர் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பதிலைச் சொன்னார்கள். ‘கண்ணீர் புகைகுண்டு வீசுவேன், துப்பாக்கியைப் பயன்படுத்துவேன், லத்தியை வைத்து அடித்து விரட்டுவேன்’ என்று சொல்லிக்கொண்டே போனார்கள். இறுதியாக ஒரு காவல்துறை அதிகாரி எழுந்து நின்று, “கலவரக் கூட்டத்தை விரட்ட, நான் என்னிடம் இருக்கும் தொப்பியைக் கழற்றி, மக்களிடம் யாசிப்பேன் (பிச்சை கேட்பேன்), உடனே எல்லாரும் தெறித்து ஓடி விடுவார்கள்” என்றார்.

அங்கே இருந்தவர்கள் இதைக் கேட்டு குபீர் என்று சிரித்தார்கள். இறுதியில் அவருக்கே பரிசையும் தந்தார்கள்.

நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்ற மனநிலையானது படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது என்பதை இந்த நிகழ்வானது நமக்கு மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது.

தவக்காலத்தைத் தொடங்கி இருக்கும் நாம், கிறிஸ்தவர்களின் மூன்று முக்கியக் கடமைகளில் ஒன்றான தர்மம் செய்வதில்/ அறச்செயல் புரிவதில் சிறந்து விளங்கவேண்டும் என்று திருச்சபையானது நமக்கு அழைப்புத் தருகிறது. ஆண்டவர் இயேசு, நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்ற இக்கருத்தை நற்செய்தியின் பல பகுதியில் விளக்கிக் கூறுவார். குறிப்பாக தன்னைப் பின்பற்ற நினைத்த செல்வந்தனாகிய இளைஞனிடம், “உன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும், பின்னர் வந்து என்னைப் பின்பற்றும்” என்கிறார். (மத் 19:21)

ஆகவே, இயேசு தன்னுடைய போதனைகளில் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்திக்கூறுகிறார் என்பது தெளிவு.

மேலும் நாம் கொடுக்கின்றபோது, தர்மம் செய்கிறபோது எப்படிப்பட்ட மனநிலையோடு செய்யவேண்டும் என்பதையும் மிகத் தெளிவாகக் கூறுகிறார்: “நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழவேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்” என்பார்.

எனவே தர்மம் செய்கிறபோது ஏதோ விளம்பரதிற்காகச் செய்யாமல், மறைவாக யாருக்கும் தெரியாமல் செய்யவேண்டும் என்பது இயேசுவின் போதனையாக இருக்கின்றது.

ஆனால் இன்றைக்கு விளம்பர உலகத்தில் இருக்கும் நம்மால் விளம்பரமே இல்லாமல் ஒரு நல்ல காரியத்தை, அறச்செயலை செய்ய முடிகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இயேசு “உங்கள் வலக்கை செய்வது இடக்கைத் தெரியாதிருக்கட்டும்” என்கிறார். அப்படியென்றால் நாம் ஒன்று கொடுக்கிறபோது அதை கொடுக்கிறோம் என்ற மனநிலையே இல்லாமல் கொடுக்கவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் பிரதிபலன் எதிர்பாராமல் கொடுக்கவேண்டும்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் “Natinal Morrow Donor Programme” என்ற ஓர் அமைப்பு இருக்கிறது. இதன் முக்கியமான நோக்கம் இலவசமாக எலும்புக் குறுத்துத் தசை அறுவைச் சிகிச்சை செய்து தருவதுதான்.

இந்த அமைப்பில் சேர்ந்து எலும்புக் குறுத்துத் தசையை யார் வேண்டுமானாலும் இலவசமாகப் பெறலாம், கொடுக்கலாம். ஆனால் இதில் முக்கியமான அம்சம் என்ன வென்றால் எலும்புக் குறுத்துத் தசை அறுவைச் சிகிச்சை செய்துகொள்வோர், தனக்கு யார் அதைத் தானமாகத் தந்தார் என்பதை அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. அதைப் போன்று எலும்புக் குறுத்துத் தசையை தானமாகத் தந்தவர், அது யாருக்குப் பொறுத்தப்பட்டிருக்கிறது என்றுகூட தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை.

பிரதிபலன் பாராமல் முகம் தெரியாத மனிதருக்கு உதவி செய்யவேண்டும் என்பதுதான் இவ்வமைப்பின் நோக்கம். ஆண்டவர் இயேசுவும் நமக்கு அதைத்தான் எடுத்துச் சொல்கிறார்.

ஆதலால் தொடங்கியிருக்கும் இந்த தவக்காலத்தில் இறைவனோடு நாம் செய்யும் தர்மத்தின் வழியாக (நோன்பின் வழியாக, இறைவேண்டலின் வழியாக) ஒப்புறவாகுவோம். “உடல் நலத்திற்கு இரத்த ஓட்டம் எந்தளவுக்கு முக்கியமோ, அதைபோன்று உலக நலனிற்கு தர்மம் முக்கியம்” என்பான் ஓர் அறிஞர்.

ஆகவே நம்மிடம் இருப்பதை பிறருக்குத் தர்மமாகக் கொடுப்போம். அதன் வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம்.


sermen4

தவக்காலம் - ஒரு அருளின் காலம்

இறைவனின் அருளையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் ஆசீரையும் மீட்பையும் பெற்றுக்கொள்ள நமக்கு கொடுக்கப்பட்ட காலம் தான் இந்த தவக்காலம். இந்த தவக்காலத்தில் நாம் நம்மோடும் பிறரோடும் இறைவனோடும் நல்லுறவு கொண்டு உடல் உள்ளம் ஆன்மா நலம் பெற நம்மையே அர்ப்பணிக்க கூடிய காலம். இந்த தவக்காலம் ஒரு விடுதலையின் காலம். இந்த தவக்காலம் இறைவனோடும் சக மனிதர்களோடும் நம்மோடும் நல்லுறவு கொள்ள கிடைக்கப்பட்ட கொடையாக இருக்கின்றது. மனம் மற்றும் உடலின் ஆசைகளையும் விருப்பங்களையும் தாண்டி பிறருக்கு உதவி செய்வதன் வழியாக நிறைவு காணும் காலமாக இத்தவக்காலம் இருக்கின்றது. இப்படிப்பட்ட தவக்காலம் திருநீற்றுப் புதன் அன்று தொடங்குகின்றது. தவக்காலம் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 40 நாட்களை உள்ளடக்கிள்ளது.

தவக்காலத்தில் ஏன் 40 நாட்கள் நினைவு கூறப்படுகின்றது? என்ற கேள்வி நமக்கு எழலாம். விவிலியத்தில் 40 என்ற எண் அதிக முக்கியத்துவம் வாய்ந்த எண்ணாக இருக்கின்றது. இயேசு தன்னுடைய இறையாட்சி பணியை செய்வதற்கு முன்பாக 40 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தன்னை ஆயத்தப்படுத்தினார். பழைய ஏற்பாட்டில் மோசேயும் எலியாவும் 40 நாட்கள் நோன்பிருந்தார்கள் என்று விவிலியத்தில் வாசிக்கிறோம். நோவாவின் காலத்தில் 40 இரவும் பகலும் பேழையில் நோவாவும் அவரின் குடும்பத்தாரும் இருந்தார்கள் என்று வாசிக்கிறோம். மோசே பத்து கட்டளையை பெறுவதற்கு முன்பாக 40 நாட்கள் மலையில் இருந்ததாக வாசிக்கிறோம். இஸ்ராயேல் மக்கள் 40 ஆண்டுகள் பாலை நிலத்தில் பயணமானார்கள். எலியா நாற்பது நாட்கள் அலைந்து திரிந்த பின் ஓரேபு மலையில் இறைபிரசன்னத்தை உணர்ந்தார் எனவும் நாம் காண்கிறோம்.

நமக்கு வருடா வருடம் கொடுக்கப்படும் இந்த நாற்பது நாட்கள் எதற்காக? நம் உள்ளங்களை கிழித்துக்கொண்டு மனம் மாறுவதற்காக. நினவே நகரம் நாற்பது நாட்களில் அழிக்கப்படும் என்ற செய்தி கேட்கப்பட்ட போது அரசன் தொடங்கி மக்கள் கால்நடைகள் என அனைவரும் நோன்பிருந்து பாவம் நிறைந்த தங்கள் இதயங்களைக் கிழித்துக்கொண்டு இறைவனின் இரக்கத்தால் புதுவாழ்வு பெற்றார்கள். அதேபோல நாமும் நம்முடைய இதயங்களைக் கிழித்துக் கொள்ள வேண்டும்.

எத்தகைய இதயங்கள்?
பகை நிறைந்த
இச்சை நிறைந்த
கர்வம் நிறைந்த
பேராசை நிறைந்த
உலக போதைகள் நிறைந்த
அலட்சியம் நிறைந்த
இறையச்சம் இல்லாத நம்முடைய இதயங்களை கிழித்துக் கொள்ள வேண்டும். அப்போது நம்முடைய இறைவேண்டல் அர்த்தமுள்ளதாகும். நம்முடைய தர்மம் பயனுள்ளதாகும். நம்முடைய நோன்பு பொருளுள்ளதாகும். நம்முடைய வாழ்வில் இறையருள் நிறைந்து வழியும். எனவே தான் தவக்காலம் இறையருளின் காலமாகிறது.

மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டோம். மண்ணிற்கு தான் போகப்போகிறோம். இதை உணர்ந்து வாழுகின்ற வாழ்க்கையை இறையருளால் நிரப்ப வேண்டியது நமது கடமையல்லவா? எனவே இந்த தவக்காலத்தில் ஜெபம் தவம் தானம் போன்ற புண்ணியங்கள் வழியாக இறைவனை இன்னும் ஆழமாக அனுபவிக்கவும் அவர் தருகின்ற இரக்கத்தையும் மன்னிப்பையும் நிறைவாக சுவைக்கவும் தேவையான அருளை வேண்டுவோம். ஜெபத்தின் வழியாக இறைவனோடு நல்லுறவு கொண்டு இந்த நாற்பது நாட்களும் பயணமாவோம். அதன் வழியாக கடவுள் தருகின்ற அன்பையும் அருளையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் சுவைப்போம். தானத்தின் வழியாக பிறருக்கு உதவி செய்வோம். பிறருக்கு நம்முடைய சொல் செயல் பொருள் போன்றவற்றின் வழியாக உதவி செய்து பிறரோடு நல்லுறவு கொள்வோம். அப்பொழுது நிச்சயமாக மனித சேவையில் புனிதம் காண முடியும். தவத்தின் வழியாக உண்ணா நோன்பு இருந்து நம்மையே நாம் பக்குவப்படுத்துவோம். நம்முடைய இதயத்தைக் கிழித்து பாவ வாழ்வையும் இச்சை நிறைந்த வாழ்வையும் கடவுளுக்கு எதிரான வாழ்வையும் விட்டுவிட்டு புதிய ஆற்றலான ஆசீர்வாதமான தூய்மையான இதயத்தை அணிந்து கொள்வோம். அப்பொழுது நிச்சயமாக நம்முடைய உடல் உள்ள ஆன்மாவோடு நல்லுறவு கொண்டு அதிகமான ஆசீர்வாதங்களை நாம் பெற முடியும். இவ்வாறாக இந்த 40 நாட்களும் முடிந்தவரை இறைவனோடும் பிறரோடும் நம் ஆன்மாவோடு நல்லுறவு கொள்வோம். அதன் வழியாக சிறந்த கிறிஸ்தவர்களாக வாழ்ந்திட முன் வருவோம். மனம் மாறி நற்செய்தியை நம்பி புது மாற்றத்தையும் புது வாழ்வையும் பெற்றுக் கொள்வோம். இந்த தவக்காலத்தை அருளின் காலமாக மாற்ற முயலுவோமா! உணர்ந்து செயல்பட இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! தவக்காலத்தை தொடங்கியுள்ள இன்றைய நாளில் நாங்கள் எங்களுடைய மனமாற்ற வாழ்விற்காக ஜெபிக்கிறோம். நீர் தாமே தொடர்ந்து உமது வல்லமையும் ஆற்றலையும் பொழிந்து எங்கள் தீய வாழ்வையும் பாவ வாழ்வையும் விட்டுவிட்டு தூய வாழ்வு வாழ்ந்திட அருளைத் தாரும். ஆமென்.


sermen4

திருநீற்றுப் புதன்

தவக்காலம் இறையருளின் காலம், மன்னிப்பின் காலம். மகிழ்வின் காலம், மனம் வருந்தி, மனம் மாறிப் புதிய வாழ்வு வாழ நம்மை அழைக்கும் காலம். "அப்பா வானகத்திற்கு எதிராகவும உமக்கு முன்பாகவும் குற்றம் செய்தேன்" (லூக்கா 15:21) என்று கூறிய ஊதாரி மகனைப் போல் இறைவனிடம் நாம் திரும்பிவர வேண்டிய காலம். இறைவனின் அளவில் முடியாத அன்பை சுவைத்துப் பார்க்க நம்மை அழைக்கிறது இந்தத் தவக்காலம். இனி வரும் இந்த நாற்பது நாட்களும் நம்மையே நாம் ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழாவிற்கு ஆயத்தம் செய்து கொள்ள, தாய்த் திருச்சபை ஏற்படுத்திய தயாரிப்பின் காலம். நோன்பிருந்து, செபம் செய்து, தர்மம் செய்து இறைவனின் இரக்கத்தைப் பெற கொடுக்கப்பட்டுள்ள சிறப்பான காலம்.

ஏன் திருநீற்றுப் புதன்? எதற்காகச் சாம்பல்? சாம்பல் வெறுமையின், ஒன்றுமில்லாமையின் அடையாளம். பொறுப்பில்லாமல் சுற்றித்திரியும் மனிதனுக்கு அவனது நிலையையைச் சுட்டிக்காட்டி அவனில் அடக்கத்தையும், தாழ்ச்சியையும் கொண்டு வருகின்றது இந்த நாள். சாம்பல் துக்கத்தின் அடையாளமாகவும், மனமாற்றத்தின் அடையாளமாகவும் இருக்கிறது. தாமார், மார்த்தொதொக்காய் ஆகிய இருவரும் துக்கத்தை வெளிப்படுத்தத் தங்கள் மீது சாம்பல் தூவிக்கொள்கின்றனர் (சாமு. 13:19; எஸ்தர் 4:1). நினவே நகர மக்கள் மனம் திரும்பி வருவதன் அடையாளமாகச் சாம்பலில் அமர்கின்றனர் (யோனா 3:6).

ஆறாவது நூற்றாண்டு முதல் தவக்காலத்தைத் திருநீற்றுப் புதனிலிருந்து தொடங்கும் வழக்கம் உருவாகுவது. பழங்காலத்தில் இருந்தே சாக்கு உடை அணிந்து சாம்பல் பூசித் தங்கள் பாவத்திற்கு பரிகாரம் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. அதனோடு பாவங்கள் வழிபாட்டிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு வழிபாடுகளிலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் பழக்கம் குறைந்து போனது. ஆனால் சாம்பல் பரிகாரம் செய்யும் பழக்கம் தொடர்ந்து வழக்கத்தில் இருந்தது. 1092-ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் உர்பன் அவர்களின் பரிந்துரையின் காரணமாக அனைத்து ஆலயங்களிலும் இந்தப் பழக்கம் பின்பற்றப் பட்டது. இந்தப் பின்னணியில்தான் நம் மனமாற்றத்தைக் குறிக்கும் விதமாகக் குழுவானவர் நம் மீது திருநீறு பூசுகின்றார். திருநீறு பூசும்பொழுது இவ்வாறு சொல்கிறார்: "மனிதனே நீ மண்ணாய் இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் என்பதை நினைத்துக் கொள்" (தொ.நூ. 3:19) அல்லது "மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள்" (மாற்கு 1:15).

விவிலியப்பின்னணியில் நாற்பது நாட்கள்

விவிலியத்தில் "நாற்பது" நாட்கள் என்ற எண்ணைப் பல இடங்களில் பார்க்கிறோம். நோவாவின் காலத்தில் நாற்பது நாட்கள் இரவும், பகலும் மழை பெய்தது (தொ.நூ. 7:17). இஸ்ரவேல் மக்கள் பாலைவனத்தில் நாற்பது ஆண்டுகள் பயணம் செய்தனர் (இ.ச. 8:2; எண். 32:13). மோசே சீனாய் மலையில் நாற்பது நாட்கள் தங்கியிருந்தார் (வி.ப. 24:18). எலியா நாற்பது நாட்கள் பாலைவனத்தில் உண்ணாமல் பயணம் மேற்கொள்ளடு ஒரேபு மலையை அடைகின்றார் (1 அர. 19:8). இஸ்ரவேல் மக்கள் பாவச்சுமையை ஏசேக்கியேல் இறைவாக்கினர் நாற்பது நாட்கள் சுமக்கின்றார் (எசே. 4:6).

இயேசுவும் தூய ஆவியால் பாலை நிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நாற்பது நாட்கள் நோன்பிருந்தார் (மத்தேயு 4:1-2). எப்படி இஸ்ரவேல் மக்கள் பாலைவனத்தைக் கடந்து பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்தை அடைந்தார்களோ, அப்படியே வான் வீட்டை நோக்கிய இந்தப் பயணத்தை இனிதே நிறைவேற்ற இந்த நாற்பது நாட்களும் நமது ஆன்மாவை ஆயத்தப்படுத்த கொண்டுள்ளன. இன்றைய முதல் வாசகத்தின் வழியாக யோவேல் இறைவாக்கினர் நாம் மனந்திரும்பி இறைவனிடம் வர அழைப்பு விடுக்கின்றார். நாம் நமது உடைகளைக் கிழித்துக் கொள்ளாமல் இதயத்தைக் கிழித்துக் கொள்ளச் சொல்கின்றார். அதாவது நம் பாவத்திற்கெனப் பாவச் செய்யக் மனம் வருந்தி இறைவனின் இரக்கத்தைப் பெற நோன்பு இருந்து செபம் செய்ய பணிக்கின்றார். இந்தத் தவக்காலத்தில் நம்மையே நாம் தயார் செய்ய இன்றைய நற்செய்தி நமக்கு மூன்று வழிமுறைகளைக் கோட்டிக்காட்டுகிறது. அதாவது நோன்பு, தர்மம், மற்றும் செயல்படும்.

நோன்பு

உண்ணாமலிருத்தல் மட்டும்தான் நோன்பு என்றில்லை. நோன்பு பற்றிய மரபுப் பார்வையை மாற்றிப் புதிய பார்வையைத் தருகின்றார் இயேசு. ஐந்து புலன்களையும் நெறிப்படுத்தி அவற்றை இறைவழியில் நடத்துவது. தன்னோடு உள்ள உறவைச் சரிசெய்தல் வேண்டும். ஏனென்றால் எல்லா உறவுகளுக்கும் அடிப்படையாகவும், ஆதாரமாகவும் இருப்பது ஒரு மனிதர் தன்னோடு கொண்டுள்ள உறவுதானே. ஏனெனில் தன்னை அன்பு செய்யாத மனிதர் உலகில் யாரையும், இறைவனையும் அன்பு செய்வது கடினம். பிறர் வாழ்த்த தேவையான உணவு, உடை, உறைவிடம் இருக்கின்றனவா என்பதைக் கண்டு, இல்லாதவர்களுக்குக் கிடைக்கச் செய்து அவர் வாழ்வில் ஒளியேற்றுவரும் நோன்பு ஆகும். தீயச் செயல்களில் இருந்தும், எண்ணத்திலிருந்தும், வீணான காரியங்களிலிருந்தும் விலகியிருப்பும் நோன்பாகும்.

தர்மம்

தன்னிமிடம் உள்ள ஒரு பகுதியாவது தனக்குத் தேவையில்லாத ஒன்றை பிறருக்குத் தருவது தர்மம் என்று எண்ணும் மனநிலை நம்மிடையே உள்ளது. தர்மம் என்ற வார்த்தையை இயேசு பகிர்வு என்ற பொருளில் பயன்படுத்திகின்றார். தன் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே ஏழைக் கைம்பெண் இறைவனுக்குக் கொடுக்கின்றார் (லூக்கா 21:1-4). சிறுவனின் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களும் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளிக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றது (யோவான் 6:1-15). சக்கேயு தனது உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கின்றார் (லூக்கா 19:1-10). பகிர்வு என்பது பொருள் மற்றும் பணம் ஆகியவற்றோடு முடிந்து விடுவதில்லை. மாறாக நம்முடைய நேரம், உழைப்பு, கரிசனை, பாசம் ஆகியவற்றிலும் இருப்பது இன்றைய காலத்தின் அவசியத்தேவை. நம்மிடம் உள்ளதை மட்டும் அன்று நம்மையே இயேசுவைப் போல் பிறருக்குக் கொடுக்க முன்வர வேண்டும்.

நம்மிடம் சேகரிப்பில் உள்ள உணவுப் பொருட்கள் பசியால் தவிக்கும் மனிதனுக்கு உரியது. நமது அறையில் அடுக்கப்பட்டு இருக்கும் காலணிகள் வெறும் கால்களுடன் சுற்றத்திரியும் நம் அயலானுக்கு உரியது. இப்படிச் சேகரித்து வைத்துவிட்டு பிறருக்குக் கொடுத்து உதவ மறுக்கும்‌ நாமும்‌ ஒரு வகையில்‌ பல மனிதர்களின்‌ உரிமையைப்‌ பறித்துத்தான்‌ வாழ்கின்றோம்‌. பல வேளைகளில்‌ நமது பராமரிப்பில்‌ விடப்பட்ட பொருட்களைப்‌ பயன்படுத்தியும்‌, கொள்ளையிட்டும்‌ சுகமாக வாழ்கின்றோம்‌. தவக்காலம்‌ இப்படிப்பட்ட நம்‌ சுயநல வாழ்வை, சீர்தூக்கிப்‌ பார்க்க அழைப்பு விடுகின்றது. யாரோடு நாம்‌ பகிர்ந்து கொள்கிறோமோ, அவரும்‌ நம்மில்‌ ஒருவர்‌ என்ற மனநிலை நம்மை அறியாமலே நம்மில்‌ ஏற்படும்‌. அப்பொழுது தன்னைத்தானே நேசிப்பதுபோல பிறரையும்‌ நேசிப்பது என்பது மெய்யாகும்.

செபம்‌

செபம்‌ என்பது முழுக்க முழுக்க உறவு கொண்டாட்டம்‌. படைத்தவராகிய இறைவனுக்கும்‌, படைப்பாகிய நமக்கும்‌ இடையேயான உறவைப்‌ புதுப்பிக்கும்‌ ஒரு உன்னத ஆற்றல்‌ செபத்திற்கு உண்டு. இயேசுவின்‌ வாழ்வில்‌ செபம்‌ ஒரு முக்கிய பங்காற்றியது. தனது வாழ்வின்‌ அனைத்து முக்கியத்‌ தருணங்களிலும்‌ இயேசு செபித்தார்‌. தன்‌ சீடர்களை இயேசு தேர்ந்தெடுக்குமுன்பும்‌ (லூக்கா 6:12), புதுமைகளைச்‌ செய்யும்‌ முன்பும்‌ (லூக்கா 9:16), தன்‌ தந்தையிடம்‌ தன்‌ சீடர்களுக்காகவும்‌ (யோவான்‌ 17:1-26), கெத்சமனித்‌ தோட்டத்தில்‌ தனது துன்பவேளையிலும்‌ (மாற்கு 14:32-42), சிலுவையில்‌ தொங்கிய போதும்‌ (மாற்கு 15:34) செபித்தார்‌. நமது வாழ்வில்‌ முக்கிய நேரங்களில்‌ நாம்‌ இறைவனை நினைவு கூர்கின்றோமா? இறைவனிடம்‌ மனம்‌ திறந்து நமக்காகவும்‌ பிறர்‌ நலனுக்காகவும்‌, உலகின்‌ அமைதிக்காகவும்‌, ஒற்றுமைக்காகவும்‌, சமாதானத்திற்காகவும்‌ செபிக்கிறோமா? இறைவன்‌ நமக்கு இந்நாள்‌ வரை செய்து வரும்‌ அனைத்து நன்மைகளுக்காகவும்‌ நன்றி கூறுகின்றோமா? செபிக்கும்‌ பொழுது இறைவனின்‌ குரலுக்கு செவிகொடுக்கிறோமா?

நம்முடைய வாழ்வை முழுமையாக ஒரு சுய ஆய்வு செய்ய, இன்றைய வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கின்றது. நாம்‌ செய்கின்ற ஒவ்வொரு காரியத்தையும்‌, அது நோன்பாக இருந்தாலும்‌, தர்மமாக இருந்தாலும்‌ அல்லது செபமாக இருந்தாலும்‌ சரி, அதைப்‌ பொருளுணர்ந்து செய்கின்றோமா? அல்லது பிறர்‌ பாராட்டைப்‌ பெறவும்‌, கடமைக்காகவும்‌ செய்கின்றோமா? இன்று முதல்‌ நாம்‌ இவற்றை இயேசுவின்‌ அன்பிற்காய்ச்‌ செய்ய அழைக்கப்படுகின்றோம்‌.


sermen4

"திருநீற்றுப் புதன்”

தவக்காலம்‌ ஒரு தனிக்‌ காலம்‌, இறைவன்‌ நம்‌ அருகில்‌ உள்ள காலம்‌; இறைவனிடம்‌ நாம்‌ திரும்பி வருவதற்கு ஏற்ற காலம்‌. மனமாற்றத்தின்‌ காலம்‌. மறுவாழ்வை மனதிற்குக்‌ கொணர வேண்டிய காலம்‌, தவக்காலத்தின்‌ துவக்க நாளாகிய இன்று இறைவனே நம்மை மனம்மாறிய ஒரு புதுவாழ்வுக்கு அழைப்பதாக வாசகம்‌ அமைந்துள்ளது.

இறைவனின் அளப்பரிய கருணை

நம்மைப்‌ புனித வாழ்வுக்கு அழைக்கும்‌ கடவுள்‌ அருளும்‌ இரக்கமும்‌ உள்ளவர்‌. “பொறுமையும்‌ அளவில்லாத இரக்கமும்‌ பொருந்திய இறைவா, ஆயிரம்‌ தலைமுறைக்கும்‌ இரக்கம்‌ காட்டுபவரே, கொடுமைகளையும்‌ பாவங்களையும்‌ போக்கியருளும்‌” (விப 34: 6-9) என்ற யோசேமின்‌ சொற்களில்‌ எத்தகைய ஆழ்ந்த நம்பிக்கை வெளிப்படுகிறது? ஆம் ”நாயிற் கடையாய் கிடந்த அடியோற்குத் தாயிற் தயாவான் தத்துவன்‌ ” நம்‌ கடவுள்‌; “பால்‌ நினைந்தூட்டும்‌ தாயினும்‌ சாலப்பரிந்து பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும்‌” பரமன்‌ நம்‌ கடவுள்‌ (திருவா). “பாசவேரறுக்கும்‌ பழம்பொருளாகிய” அவ்‌இறைவனின்‌ அருளை நாடுவோம்‌. இத்தவக்காலம்‌ முழுவதும்‌ இக்கருணைக்‌ கடவுளை, காணாமற்போன நூறாவது ஆட்டைத்‌ தேடியலையும்‌ ஆயனை, காலியாய்‌ வாழ்ந்து காலத்தைக்‌ கழித்த மகனுக்காக ஏங்கித்‌ தவிக்கும்‌ தந்தையை நம்‌ கண்முன்‌ நிறுத்தி வைப்போம்‌. “கருணைத்‌ தெய்வமே கண்‌ பாராய்‌, எம்‌ பாவங்களை நீ பொறுத்தருள்வாய்‌” என்று கதறியழுவோம்‌. “அப்பா கடவுளுக்கும்‌ உமக்கும்‌ எதிராக நான்‌ பாவம்‌ செய்தேன்‌ " (லூக்‌ 15 :29) என்று கூறி அவர்‌ பாதங்களில்‌ விழுவோம்‌.

பாவிகள்‌ மனமாற்றம்

பல வழிகளிலே நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறது. இன்றைய வாசகம். திரும்பி வாருங்கள்‌, திரும்பி வாருங்கள்‌” (2 : 12-13) என்கிறது ஆண்டவரின்‌ குரல்‌. ஆம்‌, நம்முடைய பாவங்களிலிருந்து தீய வழிகளிலிருந்து திரும்பவேண்டும். மனம் மட்டும் திரும்பவதில்அடங்காது. மனமாற்றம்‌. நம்‌ வாழ்வு, நம்‌ நடைமுறைகள்‌ மாறியமைய வேண்டும்‌.

“நீங்கள்‌ மனம்‌ மாறியவர்கள்‌ என்பதை அதற்கேற்ற செயல்களால்‌ காட்டுங்கள்‌” (மத்‌ 3:8) என்பார்‌ திருமுழுக்கு யோவான்‌. தவக்காலம்‌. நமக்கு ஒரு சவால்‌ காலம்‌. நமது பாவ வாழ்வை, அநீத வாழ்வை, சுயநல வாழ்வை, அகங்கார வாழ்வை, ஆணவ வாழ்வை விட்டுவிட்டு இறைவனின்‌ அழைப்புக்குச்‌ செவிமடுப்போமா?'

தவக்காலம்‌ நம்‌ பாவங்களுக்காக வருந்த வேண்டிய காலம்‌“ உங்கள்‌ இதயங்களைக்‌ கிழித்துக்கொள்ளுங்கள்‌ ” (13) என்பார்‌ யோவேல்‌. உள்ளங்களைக்‌ கிழித்துக்கொள்வது என்பது பாவத்திற்காக அழுது புலம்புதல்‌ (12), நோன்பிருத்தல்‌ (12,15) ஆகிய வழிகளில்‌ செயல்படுதல்‌. “தவக்காலம்‌” என்பதே இதைத்தானே சுட்டுகிறது? பல வழிகளில்‌ நாம்‌ தவமிருக்கலாம்‌ : உடலை வருத்திக்கொள்வது, உள்ளத்தை, உணர்வுகளைக்‌ கடடுப்படுத்துவது, தேவைகளைக்‌ குறைப்பது, பிறருக்கு இல்லையென்னாது ஈவது இவையன்ன தவச்‌ செயல்களால்‌ நாம்‌ தவக்காலத்தை நிரப்புவோமா?

தவக்காலம்‌, அன்பு நம்‌ வாழ்வில்‌ சிறப்பிடம்‌ பெற வேண்டிய காலம்‌. சண்டைச்‌ சச்சரவுகள்‌, மனத்தாங்கல்கள்‌ பகைமை விரோதம்‌ இவற்றை விடுத்து, அனைவரும்‌ இறைவனின்‌ பிள்ளைகள்‌, சகோதரர்கள்‌ என்ற உணர்வு நம்மில்‌ முதலிடம்‌ பெறவேண்டிய காலம்‌ (15-18-17). இக்காலத்தில்‌ இறைவனின்‌ அன்பும்‌ இரக்கமும்‌ நமக்குக்‌ கிட்ட வேண்டுமாயின்‌ (18) நாமும்‌ ஒருவருக்கொருவர்‌ அன்பு செய்வோம்‌.

தவக்காலம்‌ செபக்‌ காலம்‌ (15-17). சிறப்பாக இறை மக்களோடு இணைந்து செபிக்க வேண்டிய காலம்‌ (15-16). ஆண்டின்‌ ஏனைய காலத்தைவிடச்‌ சிறப்பாக திருப்பலி, சிலுவைப்‌ பாதை பிற பக்தி முயற்சிகளில்‌ பங்குபெற்று, இறைவனின்‌ இரக்கப்‌ பெருக்கிற்காகச்‌ செபிக்க வேண்டிய காலம்‌. குடும்பத்தோடு, பங்கு மக்களோடு சேர்ந்து செபிக்கும்‌ வாய்ப்புகளைப்‌ பெருக்கிக்கொள்வோமா? “ஆண்டவரே உம்‌ மக்கள்மேல்‌ இரங்கியருளும்‌” என்று வேண்டுவோம்‌.

ஆண்டவர் அருளும்‌ இரக்கமும்‌ உள்ளவர்.

இரண்டாம் வாசகம் : 2கொரி 5:20-6:2

உடலை வறுத்தி, உணவு, உறக்கம்‌ துறந்து தவம்‌ செய்வதும்‌, மனத்தை. ஒருநிலைப்படுத்தி இறைவனைத்‌ தியானித்து, தன்‌ வாழ்க்கையைத்‌ திருத்தி அமைத்துக்கொள்வதும்‌ அனைத்து சமயங்களின்‌ போதனை. மோசே நாற்பது ஆண்டுகள்‌ இஸ்ரயேல்‌ இனத்தை வழிநடத்திச்‌ சென்றார்‌ (விப; நமதாண்டவர்‌ நாற்பது நாட்கள்‌ ஒன்றும்‌ உண்ணாமலும் குடிக்காமலும்‌ நோன்பிருந்தார்‌ (மத்‌.4:2); தவக்காலத்தின்‌ நாற்பது நாட்களில்‌ நமது வாழ்வைச்‌ சீர்படுத்திக்‌ கொள்ள திருச்சபை நம்மை அழைக்கிறது.

உற்ற நோய்‌ நோன்றல்‌ உயிர்க்கு உறுகண்‌ செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு. குறள் - 261

ஒவ்வொன்றுக்கும்‌ ஒரு காலமுண்டென்பது சபை உரையாளரின்‌ போதனை (3:1). “மனம்‌ மாற இதுவே ஏற்புடைய காலம்‌” என்பது திருச்சபையின்‌ போதனை

நாம்‌ அனைவரும் ‌தூதுவர்

உரோமைப்‌ பேரரசில்‌ பணிபுரிந்த தூதுவர்கள்‌ மன்னனின்‌ சார்பில்‌ வேற்று நாடுகளுக்குச்‌ சென்று, அவற்றுடன்‌ தொடர்பு ஏற்படுத்துவர்‌; அவற்றைத்‌ தம்‌ வல்லரசுடன்‌ இணைப்பதும்‌ உண்டு. இப்பின்னணியில்‌ தான்‌ பவுல்‌ அடியார்‌ தன்னையே இயேசுவின்‌ தூதுவர்‌ என்றழைக்கிறார்‌. அவர்‌ இயேசுவால்‌ அனுப்பப்பட்டவர்‌. இறைவனின்‌ அன்பையும்‌ கருணையையும்‌ எடுத்துரைப்பதும்‌, அனைவரையும்‌ கடவுளோடு ஒப்புரவாக்குவதுமே தன்‌ . பணிஎன்கிறார்‌. “நாங்கள்‌ கிறிஸ்துவின்‌ தூதுவர்களாய்‌ இருக்கிறோம்‌. கடவுளே எங்கள்‌ வாயிலாக வேண்டுகோள்‌ விடுக்கிறார்‌. ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள்‌ என்று கிறிஸ்துவின்‌ சார்பில்‌ நாங்கள்‌ மன்றாடுகிறோம்‌” (20). ஒவ்வொரு கிறிஸ்தவனும்‌ திருமுழுக்கு, உறுதிபூசுதல்‌ வழியாக இறையரசின்‌ தூதுவன்‌. தன்‌ வாழ்வால்‌ தன்‌ நாட்டின்‌ பெருமையை நிலைநாட்டி, ஏனைய நாடுகளைத்‌ தன்‌ நாட்டுடன்‌ இணைக்க முயலும்‌ தூதுவர்‌ போல்‌, ஒவ்வொரு கிறிஸ்தவனும்‌ தன்னுடன்‌ தொடர்பு கொள்பவர்களை மாற்றும்‌ சக்தியாய்‌, வேறுபட்‌ட சமுதாயத்தில் அமைதி நிலைநிறுத்தும் பாலமாய் செயல்பட வேண்டும்.

நாம் அனைவரும் பாவிகள்

பரம தந்தை தனது சொந்த மகனையே அனுப்பி, அவரைப்‌ பாவத்திற்குப்‌ பலியாக்கி, நம்மைத்‌ தம்முடன்‌ இணைத்துக்கொண்டார்‌ (உரோ. 8:3;) நமக்காகக்‌ கிறிஸ்து சாபத்துக்கு உள்ளானார்‌ (கலா 3: 13) ஒப்புரவுசெய்வதென்பது மேடு பள்ளங்களைச்‌ சமப்படுத்தி, ஒழுங்குபடுத்தலாகும்‌.இறைவனிடமிருந்து நம்மைப்‌ பிரித்தது பாவம்‌. மீண்டும்‌ நம்மை.இறைவனுடன்‌ இணைத்த பெருமை இயேசுவையே சாரும்‌. இறைவனேமுன்‌ வந்து, இயேசு வழியாக நம்மைத்‌ தம்முடன்‌ இணைத்துள்ளார்‌. கல்வாரியில்‌ தன்‌ இரத்தத்தால்‌ முத்திரையிட்டு, இந்த இணைப்பை இயேசு ஏற்படுத்தியுள்ளார்‌. இதன்‌ பயன்‌ அனைத்து மக்களுக்கும்‌. ஒப்புரவு திருவருட்சாதனத்தின்‌ வழியாகக்‌ கிடைக்கிறது. என்‌ பாவங்களை மையப்‌ பொருளாகக்‌ கொள்வதைவிட, அவற்றை அழித்து என்னை இறைவனுடன்‌ இணைத்த, இயேசுவையே என்‌ வாழ்வின்‌ மையப்‌ - பொருளாக, நன்றியின்‌ மூலப்‌ பொருளாகக்‌ கொள்ள வேண்டும்‌. ஒப்புரவு அருட்சாதனம்‌ என்னில்‌ ஏற்படுத்தும்‌ மாற்றம்‌ என்ன?

தனக்கு அளிக்கப்பட்ட இறையருள்‌ வீணாகவில்லை என்பதை, “நான்‌ நல்லதொரு போராட்டத்தில்‌ ஈடுபட்டேன்‌. என்‌ ஓட்டத்தை முடித்து விட்டேன்‌. விசுவாசத்தைக்‌ காத்துக்கொண்டேன்‌ ” என்ற (2 திமொ 4:7) பகுதியில்‌ குறிப்பிடுகின்றார்‌ பவுல்‌ அடியார்‌. நமக்குத்‌ தடையாயிருக்கும்‌ எந்தச்‌ சுமையையும்‌, நம்மை எளிதில்‌ வயப்படுத்தும்‌ பாவத்தையும்‌ உதறித்‌ தள்ளிவிட்டு நமக்குக்‌ குறிப்பிட்டுள்ள பந்தயத்தில்‌ மன உறுதியோடு ஒடுவோமாக என்பது பவுல்‌ அடியாரின்‌ அறிவுரை. இயேசுவின்‌ முதல்‌ வருகையாகிய பிறப்புக்கும்‌, மாட்சிமையுடன்‌ கூடிய இரண்டாம்‌ வருகைக்கும்‌ இடையே உள்ள காலமே மக்கள்‌ மன மாற்றத்தின்‌ காலம்‌. அக்காலத்தில்‌ அந்நியராய்‌ அஞ்சி நடக்கவேண்டும்‌ (1 பேதுரு 1 : 17); இக்காலத்தை முற்றிலும்‌ பயன்படுத்திக் கொள்ள வேண்டும்‌ (1 தெசலோ 5: 6). “தகுந்த வேளையில்‌ நான்‌ உமக்குப் பதிலளித்தேன்‌. விடுதலை நாளில்‌ உமக்குத்‌ துணையாய்‌ இருந்தேன்‌” என்று கூறிய ஆண்டவர்‌ (எசா 49 : 8) தவக்காலத்தில்‌ சிறப்பான வரங்களை வாரி வழங்கக்‌ காத்திருக்கிறார்‌. இவற்றை ஏற்க நாம்‌ தயாரா?

நீங்கள் பெற்ற கடவுளின் அருளை வீணாக்க வேண்டாமென மன்றாடுகிறோம்.

நற்செய்தி: மத்:6: 1-6,16-18

ஒரு யூதனுடைய சமய வாழ்வின்‌ அடிப்படைத்‌ தூண்களாகக்‌ கருதப்பட்டவை மூன்று. அவை, ஈதல்‌ (பிச்சை இடல்‌), செபித்தல்‌, நோன்பு இருத்தல்‌ ஆகும்‌. தவக்காலத்தைத்‌ துவக்கும்‌ இன்று, இக்காலத்திலே கிறிஸ்துவின்‌ பாடுகளை நம்‌ கண்முன்‌ வைத்து, நம்‌ பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டுவதற்கு, இம்மூன்று நற்செயல்களும்‌ நமக்கும்‌ உதவ வேண்டும்‌ என்ற முறையில்‌ இவை இன்றைய வாசகமாக தரப்படுகின்றன. இங்கு, இயேசு கோடிட்டுக்‌ காட்ட விரும்புவது இந்நற்செயல்களைப்‌ பிறர்‌ அறிய வேண்டும்‌, அறிந்து புகழ வேண்டும்‌ என்பதற்காக நாம்‌ செய்யக்‌ கூடாது என்பதாகும்‌.

பிறர்க்கு ஈந்து வாழ்வோம்‌

தவக்காலத்தில்‌ நாம்‌ செய்யக்கூடிய பயனுள்ள செயல்களில்‌ ஒன்று, பிறருடைய தேவைகளில்‌ அவர்களுக்கு உதவுவதாகும்‌. பிறரை மகிழ்ச்சிப்படுத்துவதற்கும்‌, நம்‌ பாவங்களுக்கு மன்னிப்புப்‌ பெறுவதற்கும்‌ ஏற்ற ஒரு சாதனம்‌ இது. ஈயென்று வருபவனுக்கு இரங்கிப்‌ பிச்சை கொடுப்பதில்‌ மட்டும்‌ அடங்காது இது; நாமே வலியத்‌ தேடிச்‌ சென்று பிறருக்கு உதவும்‌ போதுதான்‌ இது முழுமை பெறும்‌. எனவே பலன்‌ கருதாது கொடுப்போம்‌; கொடுத்துக்‌ கொடுத்துக்‌ கைகள்‌ காய்த்துப்‌ போகும்‌ அளவிற்குக்‌ கொடுப்போம்‌. “வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; மற்ற எல்லாம்‌ குறியெதிர்ப்பை நீரதுடைத்து”' (குறள்‌-221) என்ற முறையிலே, அளவின்றி, கணக்கு வழக்கின்றிக்‌ கொடுப்போம்‌. “தருமம்‌ சாவினின்று காப்பாற்றும்‌; எல்லாப்‌ பாவத்தினின்றும்‌ தூய்மையாக்கும்‌. தருமம்‌ செய்வோரின்‌ வாழ்வை அது நிறைவுள்ளதாக்கும்‌” (தோபி 12 : 9) என்ற சொற்கள்‌ இத்தவக்காலத்தை மிகப்‌ பயனுள்ளதாக நமக்கு மாற்றுவனவாக. “ஈதல்‌ இசைபட வாழ்தல்‌ அது அல்லது ஊதியமில்லை உயிர்க்கு ' (குறள்‌-231).

நமது செபத்தை வலுப்படுத்துவோம்‌.

“செபம்‌ உயர்ந்தது; மற்றெல்லா நற்செயல்களையும்விட மிக உயர்ந்தது” என்பது யூத ராபியர்‌ கூற்று. ஒவ்வொரு யூதரும்‌ “உற்றுக்கேள்‌”(Sheme) என்று துவங்கும்‌ விசுவாச அறிக்கையையும்‌ (காண்‌: இச. 6 : 4-9; 11 13-21 எண்‌ 15:37- ௭), பதினெட்டுப் புகழுரைச்‌ செபத்தையும்‌ (Shemoneh Esreh) ஒவ்வொரு நாளும்‌ மும்முறை செபித்தல்‌ மரபு. இயேசுவும்‌ இம்மரபிலே வளர்ந்தவர்‌. எனவே அவர்‌ அடிக்கடி செபித்ததுமின்றி, நம்மையும்‌ செபிக்க அழைக்கிறார்‌. இத்தவக்காலம்‌ செபக்‌ காலம்‌. கிறிஸ்தவ உலகமே இந்நாற்பது நாளும்‌ அதிகமாக செபத்திலும்‌ வழிபாட்டிலும்‌ ஈடுபட்டு இருப்பதும்‌ செபத்தின்‌ முக்கியத்துவத்தைச்‌ சுட்டுகிறது. “கற்பனைக்கும்‌ அரிதான காரியங்களைக்கூட செபத்தின்‌ வழி அடையலாம்‌” என்றார்‌ பெரியவர்‌ ஒருவர்‌. எனவே இக்காலத்தில்‌ நம்‌ செபம்‌ பன்மடங்காகப்‌ பெருகட்டும்‌. உலகிற்காகச்‌ செபிப்போம்‌. ”அடுத்தவர்களுக்காகச் செபிப்போம். நமக்காகச் செபிப்போம்.”

தவங்கள்‌ செய்வோம்‌.

நோன்பிருத்தல்‌ வழி இறை அருள்‌ நாடல்‌ எம்மதத்திலும்‌ காணப்படுவது. தவக்காலம்‌ நோன்புக்கு ஏற்ற காலம்‌. உண்ணாதிருந்து தான்‌ நோன்பு செய்யவேண்டுமென்று இல்லை. நோன்புக்கேற்ற மனநிலையை பல்வழிகளில்‌ காட்டலாம்‌. “அடக்கறும்‌ புலன்கள்ஐந்தடக்கி ஆசையாமவை துடக்கறுத்தலும்‌” நோன்பே; “நேசபாசம்‌ எத்திறத்தும்‌ வையாத நிலையும்‌” நோன்பே. “நின்பற்று அலால்‌ ஓர்பற்று மற்றது. உற்றிலேன்‌” என்ற நிலையில்‌ வாழ்வதும்‌ நோன்பே, “மெய்வருத்திக்‌ கூடாக்கி நிற்றலும்‌” நோன்பே (திருமழிசை). இத்தகைய பலதரப்பட்ட நோன்புகள்‌ நம்முடைய தவக்காலத்தை நிறைக்கட்டும்‌.

இவற்றைக்‌ கைம்மாறு கருதாது செய்வோம்‌.

நாம்‌ செய்யும்‌ நற்செயல்களைப்‌ பிறர்‌ காணச்‌ செய்யும்போது, பிறரிடமிருந்தே இந்நற்செயல்களுக்குப்‌ புகழும்‌ பரிசும்‌ பெற்று விடுகிறோம்‌. மறுஉலக வாழ்வுக்கு இவை உதவா. எனவே பிறர்‌ அறியாத முறையில்‌ நற்செயல்கள்‌ புரிவதே ஒரு தவம்தான்‌ என்பதை உணர்ந்து இத்தவக்காலத்தை, ஈதல்‌, செபம்‌, தவம்‌ ஆகிய நற்செயல்களில்‌ செலவளிப்போம்

மறைவாயுள்ளதைக்‌ காணும்‌ உங்கள்‌ தந்தை கைம்மாறு அளிப்பார்‌.



விபூதி புதன்

இரு நண்பர்கள் மாந்தோப்பு வழியே நடந்து சென்று கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ வந்த கருங்கல் ஒன்று நண்பனின் நெற்றியைப் பதம் பார்த்தது. சுற்றும் முற்றும் பார்த்தபோது ஒரு சிறுவன் மாங்காய் பொறுக்கிக் கொண்டிருந்தான். "நீ அடித்த கல் என் நெற்றியைக் காயப்படுத்தியது பார்," என்றபோது, "நான் மாங்காய்க்காகத்தான் அடித்தேன். எனக்கு மூன்று மாங்காய் கிடைத்தது. தவறுதலாகக் கல் உங்கள் நெற்றியைக் காயப்படுத்தியது. மன்னித்துவிடுங்கள்”, எனச் சிறுவன் கெஞ்ச, "இனி வழியில் யாராவது நடக்கிறார்களா எனப் பார்த்துக் கல் எறி", எனச் சொல்லி நண்பன் சிறுவனை அனுப்பிவிட்டான். "உன் நெற்றியைக் காயப்படுத்திய அவனை அடிக்காமல் விட்டுவிட்டாயே", என மற்றொரு நண்பன் கேட்க, அடிபட்ட நண்பன், "ஒன்றுமறியாத மாமரம் தன்னை அடித்தவனுக்கு மூன்று மாங்காய் கொடுத்தது. எல்லாம் தெரிந்த மனிதனாகிய நான் மன்னிப்பையாவது அடுத்தவர்களுக்குக் கொடுக்க வேண்டும்", எனச் சொன்னான்.

பாஸ்கா ஆயத்த காலம் என்றழைக்கப்படும் தவக்காலம் அருளின் காலம். இரக்கத்தின் காலம். மன்னிப்பின் காலம். கடவுள் நம்மைத்தேடி நம்மை மீட்கும் காலம். கடவுளின் அருளை, கனிவை, இரக்கத்தை, மன்னிக்கும் அன்பை அதிகமதிகமாக அனுபவிக்கும் காலம். இயேசுவின் வாழ்வில் முக்கிய நிகழ்வுகளான அவரின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு எனும் மறைநிகழ்ச்சிகளைத் தகுதியான உள்ளத்துடன் கொண்டாட நம்மைத் தயாரிக்கும் காலம். தவக்காலம் விபூதி புதன் திருவிழாவிலிருந்து ஆரம்பமாகிறது.

தவக்காலம் - வசந்தகாலம்:

காலங்களை நாம் இயற்கையின் மாறுதலுக்கேற்ப, தட்பவெப்ப சூழ்நிலையின் அடிப்படையில் வசந்தகாலம், கோடைக்காலம், மழைக்காலம், குளிர்காலம், பனிக்காலம் எனப் பிரிக்கிறோம். தவக்காலம் இலையுதிர்காலம் முடிந்து, புதிய இளமையுடன் துளிர்க்கும் வசந்தகாலத்தில் வருகிறது. புதிய இளம் தளிர்கள் பச்சைபசேலென துளிர்த்து நிற்கும் பருவம் வசந்தகாலம். நம் ஆன்மீக பயணத்தில் பழையன உதிர்ந்து, பழைய பாவநாட்டங்கள், பாவ வழக்கங்கள் உதிர்ந்து, புத்துயிர் துளிர்க்கும் ஆன்மீக வசந்தகாலம்தான் தவக்காலம். புது சிந்தனைகளுடன், புதுதெம்புடன், புது பலத்துடன், புது சக்தியுடன் புதிய வாழ்வை ஆரம்பிக்கும் நோக்குடன் நமக்குக் கொடுக்கப்பட்ட காலம் தவக்காலம்.

தவக்கால வரலாற்றுப் பின்னணி:

ஆதித்திருச்சபையிலே வருடத்துக்கு ஒரு முறை மட்டும்தான் பெரியவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்தார்கள். புதுக்கிறிஸ்தவர்கள் தம்மை நாற்பது நாட்களுக்குத் தயாரித்து ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா அன்று திருமுழுக்குப் பெறுவர். எனவே தவக்காலம் திருமுழுக்குத் தயாரிப்புக் காலம்.

ஆதித்திருச்சபையிலே கிறிஸ்தவர்கள் ஆடம்பரமாக கொண்டாடிய ஒரே ஒரு பெருவிழா உயிர்ப்பு பெருவிழாதான். அந்த உயிர்ப்பு பெருவிழாவை அர்த்தமுடன் கொண்டாட நீண்ட தயாரிப்பு காலம்தான் தவக்காலம். அதனால்தான் பாஸ்கா ஆயத்தகாலம் என்றார்கள்.

தவக்காலம் பாவப்பரிகார காலம். பெரிய பாவம் செய்தவர்களைக் கிறிஸ்தவ சமூகத்திற்கு புறம்பாக்கி, அவர்கள் மீண்டும் ஒப்புரவாக விரும்பினால், நாற்பது நாட்கள் கடின தபசு, நோன்பும், ஒருவேளை உணவு மட்டும் உண்டு பாவப்பரிகாரத்தைத் தேடிக் கொள்வர். செபமும், தபசும்தான் பாவப்பரிகாரத்தின் அடையாளங்கள்.

தவக்காலம் கடினதபசுக்காலம். பெரும்பாவிகளுக்கு திருநீற்றுப் புதனன்று பரிகார உடைகொடுத்து, தலையில் சாம்பல் பூசி அவர்களைக் கோயிலிலிருந்து அழைத்துச்சென்று ஊருக்கு வெளியே விட்டுவிடுவார்கள். நாற்பது நாட்கள் அவர்கள் ஊருக்கு வெளியே இருக்கும்போது, கோயிலுக்கு வருபவர்களைப் பார்த்துத் தங்களுக்காகக் கடவுளிடம் வேண்டச் சொல்வார்கள். இவர்கள் நாற்பது நாட்கள் கடினதபசுக்குப் பிறகு, உயிர்ப்புபெருவிழா இரவு திருவிழிப்பு சடங்கின்போது தான் சேர்த்துக் கொள்ளப்படுவர். தனிமனிதன் பாவம் சமூகத்தைப் பாதிக்கிறது. தனிமனிதனின் மனம்திரும்புதலுக்கும் சமுதாயத்தில் உள்ள அனைவரும் பரிந்துபேச வேண்டுமென்ற சமூகஉணர்வை ஏற்படுத்துகின்ற காலம்தான் தவக்காலம்.

நாற்பது நாட்கள்:

தவக்காலம் என்பது நாற்பது நாட்கள். விபூதிபுதன் கிழமையிலிருந்து பெரிய வெள்ளி வரை ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்துக் கணக்கிட்டால் நாற்பது நாட்கள் வரும். ஒவ்வொரு ஞாயிறும் ஆண்டவரின் உயிர்ப்பு ஞாயிறு என்பதால் நாம் ஞாயிற்றுக்கிழமைகளை கணக்கிடுவதில்லை. இந்த நாற்பது நாட்களுக்கு விவிலிய வரலாற்றுப் பின்னணி உண்டு.

  • →நோவா காலத்தில் நாற்பது நாட்கள் இரவும் பகலும் மழை பெய்தது.
  • →இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தில் நாற்பது ஆண்டுகள் பயணம் செய்தனர். எண் 32:13; இச 8:2.
  • → மோயீசன் சீனாய் மலையில் கடவுளின் உடன்படிக்கை பலகையை, பத்துக் கற்பனைகளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு, நாற்பது நாட்கள் இரவும் பகலும் உண்ணாமலும், தண்ணீர் குடியாமலும் இருந்தார். விப 24:18, 34,28, இச 9:9.
  • → எலியாசு நாற்பது நாட்கள் உண்ணாமலும் குடியாமலும் தொடர்ந்து நடந்து சென்று ஒரேப் என்ற கடவுளின் மலையை அடைந்தார். 1அரச 19:8
  • → எசேக்கியேல் இஸ்ராயேல் மக்களின் சுமையை நாற்பது நாட்கள் சுமந்தார். எசே 4:6
  • → ஆண்டவர் இயேசு தம் பணிவாழ்வினை தொடங்குமுன் தயாரிப்பாக நாற்பது நாட்கள் தவமிருந்து ஆவியாரால் நிரப்பப்பட்டு, வழிநடத்தப்பட்டார். சாத்தானின் சோதனைகளை முறியடித்தார்.

இங்கு நாற்பது நாட்கள், நாற்பது ஆண்டுகள் என்பது மணிக்கணக்கையோ, நேரத்தையோ குறிப்பது அல்ல. மாறாக இறைவன் வழங்கிய அருளின் காலத்தைக் குறிக்கிறது.

விபூதி - திருநீறு - சாம்பல்;

அடையாளங்களால் பின்னிப்பிணையப்பட்ட மனித வாழ்விலே மாலைகள், அன்பளிப்புகள், தேர் திருவிழாக்கள் எல்லாமே அடையாளங்கள்தான். நம் அருள் வாழ்வும் அடையாளங்களால் அர்த்தமும், ஆழமும் பெறுகிறது.

விபூதி வெறுமையின், ஒன்றுமில்லாமையின் அடையாளம். விவிலியத்தில் விபூதி மனிதனுடைய நிலையற்ற தன்மையையும், குறைநிறையையும், முற்றிலும் சார்புடைய நிலையையும், பாவத்தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய பலவீன நிலையையும் குறிக்கிறது. ஆபிரகாம் தன்னை ஆண்டவர்முன் "புழுதிக்கும் சாம்பலுக்கும் சமமாயிருக்கிற அடியேன்", தொநூ 18:27 என்று தனது அற்பமான நிலையை ஏற்றுக்கொள்கிறார். "மனிதர்களின் மூதுரைகள் சாம்பலை ஒத்த பழமொழிகளே," யோபு 13:12 என்று யோபு மனிதனின் உறுதியற்ற நிலையைப் பறைசாற்றுகிறார். "சாம்பலை நான் உணவாகக் கொள்கிறேன்" திபா 102:9 என்று தன் வெறுமைநிலையை சங்கீத ஆசிரியர் விளக்குகிறார். தனது நலிந்த நிலையையும், சிறுமை வாழ்வையும் எடுத்துக்காட்டும் சாம்பலைத் தன்மீது போட்டுக் கொள்கிறான் மனிதன். எஸ்தர் 4:1-4; 2சாமு 13:19, எசே 28:18; சாஞா 15:10. 'மனிதனே! நீ மண்ணாக இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்' என்ற அறிக்கை, மனிதரின் இத்தகைய குறைநிலையை உண்மை நிலையாக நினைவுப்படுத்துகிறது.

விபூதி பாவத்தையும், பலவீனத்தையும் உணர்த்துகிறது

பாவத்தின் விளைவாக மனிதன் வீழ்ச்சியுற்ற, கேடுற்ற உருவிழந்த தனது இழிநிலையை தனக்குத்தானே உணர்த்திக் கொள்ளவும், பிறருக்கு அதை அறிக்கையிடவும் சாம்பலை வெளி அடையாளமாகப் பயன்படுத்தினர் மனிதர். "என்னையே நான் கடிந்துகொள்கிறேன். புழுதியிலும் சாம்பலிலும் அமர்ந்து மனம் வருந்துகிறேன்" யோபு 42:6 எனத் தனது வெறுமை நிலையை விளக்குகிறார். பாவி தன் அகந்தையை அகற்றி, பாவ நிலையை உணர்ந்து, சாம்பலில் அமர்வதன்மூலம், யோனா 3:6; மத் 11:21 தலையில் சாம்பலைத் தூவிக் கொள்வதன் மூலம் யூதித் 4:15; எசே 27:30, தனது உண்மைநிலை அனுபவத்தை மற்றவர்களுக்கு அறிக்கையிடுகிறார்கள். பாவத்தையும், பலவீனத்தையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

விபூதி மறுமலர்ச்சி, மனமாற்றம், மறுபிறப்பின் அடையாளம்:

‘மனம்திரும்பி நற்செய்தியை நம்புங்கள்' என்ற அழைப்புடன் குரு விபூதியை நெற்றியில் பூசுகிறார். மனிதன் அதைப்பெற்றுக் கொள்ளும்போது, இறைவனின் நீதித்தீர்ப்பை உணர்ந்தவனாக, அவரது இரக்கம் அருட்துணைப் பெற்று, அவரது புதுவாழ்வை, மறுபிறப்பை, மறுமலர்ச்சியைப் பெறுகிறான்.

விபூதி குணமளிப்பதற்கு அடையாளம்:

மருத்துவமுறையில் சாணத்தை எரித்துக் கிடைக்கும் சாம்பல் உடலில் உள்ள கெட்ட கிருமிகளைச் சாகடிக்கும் சக்தி பெற்றிருக்கிறது. தீர்த்தம் கலந்த சாம்பல் இறந்த உடலைத் தொட்டு, தீட்டுப்பட்டவர்கள் மீது தெளிக்கப்பட்டதாக எண் 19:9-13-ல் காண்கிறோம். எனவே தனது உண்மை நிலையில் இறைவனைத் தேடும் மனிதன், பாவ சக்திகளை முறியடிக்கும் சக்தி பெற்று, தன்னைத்தூய்மையாக்கி நலமாக்கிக் கொள்கிறான் என்பதை விபூதி தெளிவுபடுத்துகிறது.

விபூதி புதுவாழ்வுக்கு அடையாளம்:

சாம்பலில் எரிக்கப்படுவதற்கு முன் இருந்த பழைய பொருளை எவ்வளவு துழாவித் தோண்டித் தேடினாலும் அதில் கிடைக்காது. அது முற்றிலும் உருவிழந்து மறைந்து மடிந்துவிடுகிறது. அதுபோல ஒப்புரவாகி உயிர்த்த ஆண்டவரில் இணையும் எல்லாரிலும் பழையதும் பாவமானதுமான அனைத்தும் மறைந்து மடிய, அவர்கள் புதுப்படைப்பாக உருவாவதை 2கொரி 5:17-18 விபூதி புதனன்று அறிக்கையிட்டு அனுபவித்து ஆண்டவரில் புதுவாழ்வு வாழ்கிறோம்.

தவக்காலத்தில் ஆண்டவரின் அழைப்பு

உள்ளத்தைக் கிழித்துக் கொள்ளுங்கள்:

"இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக் கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். நீங்கள் உங்கள் உடைகளை அல்ல, உள்ளத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்". யோவேல் 2:12-13. நாம் பழைய பாவவாழ்வை விட்டுவிட்டு, ஆண்டவரின் புதுவாழ்வு பெற நம்மை அழைக்கும் காலம். இருளுடன், சாத்தானுடன், உலகக் காரியங்களுடன், காலத்தைக் கடத்தி, கடவுளன்பை, நிம்மதியை, அருளை இழந்து கொண்டிருக்கும் நாம், அவரில் புதுவாழ்வு பெற, பாவமன்னிப்பு சமாதானம் பெற அழைக்கும் காலமிது.

கடவுளின் இரக்கத்தைப் பெறுங்கள்:

"கடவுள் அருள்நிறைந்தவர்; இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர்; பேரன்புமிக்கவர்; செய்யக்கூடிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்" யோவே 2:13. இறை இரக்கத்தை நாம் அனுபவித்து, இறை மன்னிப்பைப் பெற்று, இறைவனோடு இணைந்து வாழ அழைக்கும் காலமிது. தவக்காலம் சோகத்தின் காலமல்ல; பாவத்தை மட்டும் நினைத்துக் கண்ணீர்விடும் காலமும் அல்ல. உடல் ஒறுத்து வருத்தி, கடினதபசு மட்டும் செய்யும் காலமல்ல; ஆண்டவர் இயேசுவின் பாடுகளை நினைத்து, அவர்மீது பரிதாபப்பட்டு கண்ணீர்விடும் காலமும் அல்ல. மாறாக இறைவனின் அருளை, இரக்கத்தை, அன்பை நமக்கு அதிகமதிகமாகப் பெற்றுத்தந்து, அதை அனுபவிக்க வைக்கும் காலமிது. நாம் இறைவனோடும், அயலாரோடும் கொண்ட உறவைச் சீர்தூக்கிப்பார்த்து உறவின் விரிசல்களை சரிசெய்யும் ஒப்புரவின் காலமிது. இறைவனோடு இணைந்து வாழவும், உழைக்கவும் அழைக்கும் காலமிது. 2கொரி 5:20, 6:1

+ அன்புப்பணி செய்யுங்கள்:

நாம் சுயநல எண்ணம், கௌரவ சிறையிலிருந்து மீண்டு, பொதுநலப்பணிகளில் அர்ப்பணமாக்கிடத்தூண்டும் நாட்கள் தவக்கால நாட்கள். நம் அறச்செயல்களால் பிறர் வாழ்வை அலங்கரிக்கத் தூண்டும் நாட்கள். யோவே 2:16; மத் 6:1-4

+ தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்:

நம் இதயங்களைச் செபத்தால் சுத்திகரித்து, தூய்மைப்படுத்திக் கொள்ள துணையாகும் நாட்கள் மத் 6:6. நாம் வெளிவேடங்களை களைந்து, வெள்ளை உள்ளத்தோடு வாழப் பணிக்க உதவும் நாட்கள் மத் 6:2,5,16.

+ புதுப்படைப்பாக மாறுங்கள்:

நாம் கிறிஸ்துவுக்குள் வாழ, புதுப்படைப்பாக மாற அழைப்பு விடும் நாட்கள். 2கொரி 5:17. கிறிஸ்துவுக்குள் வாழ்பவர்கள் புதுப்படைப்பாகிறார்கள். புதுவாழ்வு கடவுள் நமக்குக் கொடுக்கும் அரிய கொடை. "ஏனெனில் பாவத்திற்கு கிடைக்கும் கூலியோ சாவு: மாறாக கடவுள் நமக்குக் கொடுக்கும் அருட்கொடை நம் ஆண்டவர் இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு" உரோ 6:22. மாற்றம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழவேண்டிய நிகழ்வு. மாறவில்லையெனில் நாம் மனிதர்கள் அல்ல. உலகை மாற்ற எல்லாருக்கும் விருப்பம். ஆனால் தன்னை மாற்ற எவருக்கும் விருப்பமில்லை. கடவுளின் அன்பை, அன்புக்கொடைகளை பிரித்துப் பார்த்து மகிழ்ந்து, அனுபவித்து, அதைப் பகிர்ந்து வாழ்வதுதானே உண்மையான மனமாற்றம். இத்தகைய மனமாற்றத்திற்கு இத்தவக்காலத்தில் நாம் தயாரா?

+ உறவுகளைச் சரிசெய்யுங்கள்:

நம்மோடு நமக்குள்ள உறவு, பிறரோடு உள்ள உறவு, ஆண்டவரோடு உள்ள உறவுகளைச் சரிசெய்ய நம்மை அழைக்கும் காலம்தான் தவக்காலம். உறவுகளைச் சரிசெய்ய உதவும் மூன்று பணிகள்.

செபம்: செபம் ஒரு உறவு நிகழ்ச்சி. படைத்தவராகிய கடவுளுக்கும், படைப்பாகிய நமக்குமிடையேயான உறவைப் புதுப்பிக்கும். பலப்படுத்தும், பயனளிக்கச் செய்யும் செயல் செபம். தனிச்செபம், பொதுச்செபத்தின் மூலமாகக் கடவுளருளைப் பெற்று ஆண்டவரோடும் அயலாரோடும் அன்பு உறவு வாழ்வு வாழ வேண்டும்.

பகிர்வு: தர்மம் என்றால் நம்மிடம் உள்ள ஒரு பகுதியை, நமக்குத் தேவையில்லாததை, பிறருக்குத் தருவது. (உம்) பழைய சோற்றைக் கொடுப்பது. ஆனால் பகிர்வு என்பது நமக்கென்று, நமது பயன்பாட்டிற்கென்று வைத்திருப்பதை பிறருக்குத் தருவது. இதில் அன்பு அடங்கியுள்ளது. நமது நேரம், உழைப்பு, கரிசனை, பாசம், அன்பு ஆகியவற்றை தேவையானவர்களோடு பகிர்ந்துகொள்வதே உண்மையான பகிர்வு. நாம் நம்மிடம் உள்ளதை மட்டுமல்ல, நம்மையே பிறருக்குக் கொடுக்க வேண்டும்.

நோன்பு:

தன்னை அன்பு செய்பவன்தான் பிறரை அன்பு செய்ய முடியும். நோன்பு என்பது ஒரு நேர உணவை மட்டும் விட்டுக்கொடுக்கும் செயல் அல்ல. மாறாக இறைவனுடன் தனித்திருப்பது, தனித்திருந்து செபிப்பது. சிந்தித்தல் மூலம் நம் குறைநிறைகளை அறிந்து, பலம் பலவீனங்களை ஏற்றுக்கொண்டு, ஐம்புலன்களையும் அடக்கி, கெட்டகுணங்களை விட்டொழித்து இறைஉறவில், மனித உறவில் வளரும், வாழும் மனிதராக வாழ்வதுதான்.

ஒறுத்தல் முயற்சிகளால் கடவுள் நம் மனத்தை மேலே எழுப்புகிறார். ஆணவத்தையும் தீய குணங்களையும் அடக்குகிறார். நற்பலன்களையும், அதன் பரிசாக நல்வாழ்வையும் நம் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாகக் கடவுள் வழங்குகிறார்.
விவிலியத்திலே நோன்பின் பண்புகளையும், பலன்களையும் பார்க்கிறோம். பல்வேறு நோக்கங்களுக்காக நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது.

  1. → இறந்தோருக்காக: நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள் இறந்தபோது அந்தப் பரிவுத்துயர் தாளாமல் உணவை ஒறுத்தனர் யூதர்கள். 1 சாமு 31:13; 2சாமு 1:12, 3:35.
  2. → நாட்டு நலனுக்காக: இஸ்ராயேல் மக்கள் பென்மியன் மக்களுடன் போரிட்டு, பதினெட்டாயிரம் போர்வீரர்கள் இறந்தபோது, ஆண்டவர் திருமுன் நோன்பிருந்தனர் தீதி 20:26; 1சாமு 14:24; 1அரசா 21:9.
  3. → பாவப்பரிகார திருவிழாவின்போது: இஸ்ராயேல் மக்கள் பாவக்கழுவாய் திருவிழாவின்போது, தங்கள் பாவங்களுக்கு பரிகாரமாக, அனைவரும் வேலை செய்யாது நோன்பிருந்தனர். லேவி 16:29, 23:28; எண் 29:7.
  4. → செபத்துடன் நோன்பு: பலர் தனிப்பட்ட கருத்துக்களுக்காக இறைவனிடம் செபித்தபோது, நோன்பிருந்து செபித்தால் அது அதிகப் பயன் தரும் என்று நம்பி நோன்பிருந்தனர். திபா 25:13, 69:11; 2சாமு 12:16; மாற் 9:29.கடவுள் பிரசன்னத்தை உணர: இறைப்பிரசன்னத்தை தம் வாழ்விலே உணர மோசே சீனாய் மலையிலும், தானியேலும் நோன்பிருந்து, அதன்மூலம் இறைவெளிப்பாட்டை உணர்ந்தனர். விப 34:28; இச 9:9.
  5. → உண்மையான நோன்பு விடுதலைப்பணியே: நாம் அனுசரிக்கும் நோன்பு உண்மையான உள்ளரங்க மாற்றத்திற்கும், பிறர் நலப்பணிகளுக்கும் நம்மை இட்டுச் செல்ல வேண்டும். எசா 58:3-7; எரே 14:12; செக்கரி 7:5; கொலோ 2:23.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்