ash

மறையுரை சிந்தனைகள்

இன்றைய வாசகங்கள்:-
யோவேல் 2 : 12-18 - 2 கொரிந்தியர் 5:20-6:2 - மத்தேயு 6:1-6, 16-18

sermen

வளர வேண்டிய செடிக்குத் தண்ணீர் அறவே ஊற்றவில்லையென்றால் அது பட்டுப்போகும். அளவுக்கு மீறி தண்ணீர் தேங்கி நின்றாலும் அதுவும் ஆபத்து. ஏனெனில் செடி அழுகிவிடும். இசைக் கருவிகள் வீணை அல்லது வயலின் நரம்புகளை அதிகம் முறுக்கினாலும் இசையில் இன்பம் கிடைக்காது. அதிகம் தளர்த்தினாலும் இன்பம் தராது. நரம்புகளின் விரைப்பு இருக்க வேண்டிய நிலையில் இருந்தால்தான் இசையின் இன்பத்தை நுகர முடியும். இயல்பாக இருக்கும். எல்லாம் இனிமையாக இருக்கும். இயல்பு மாறும்போது எல்லாம் கசந்துவிடும். இயல்பாக நாம் வாழாத நேரத்தில், பிறரை இயல்பாக நோக்காத நேரத்தில் நாம் பல்வேறு மன அழுத்தத்திற்கும், வியாதிகளுக்கும் ஆளாக்கப்படுகிறோம் என்பது உளவியலார் கருத்து.

இன்று நாம் இயல்பாக இருக்க, வாழ அழைப்பு விடுக்கிறார் நம் ஆண்டவர் இயேசு. இயல்பு மாறி செயல்படும்போது தான் அதற்கு வெளிவேடம் என்று பெயரிட்டு அழைக்கின்றார் (மூன்றாம் வாசகம்). வெளிவேடம் என்பது மோசமான குணம், அது மனிதனைக் கீழான நிலைக்கு இட்டுச் செல்லும் நஞ்சு போன்றது. இயல்பாகச் செயல்படாத யூதர்களை, பரிசேர்களை, சதுசேயர்களை வெளிவேடக்காரர் என்றும் அழைக்கிறார். நீங்கள் தர்மம் செய்யும்போது, இறைவேண்டல் செய்யும்போது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம் (மத். 6:2, 5) என்கிறார் இயேசு. இன்றைய நற்செய்தியிலே, அறச்செயல்களாக தர்மம், இறைவேண்டல், நோன்பு ஆகிய மூன்றையும் குறிப்பிட்டு, இவை மூன்றும் இயல்பாக செயலில் காட்டும்போது நிறைவாழ்வை நோக்கி இட்டுச் செல்லும் கொடைகள் என்றும், இதில் வெளிவேடம் புகுந்தால் அனைத்தையும் தலைகீழாக்கிவிடும் எனவும் எச்சரிக்கிறார் இயேசு. இது எப்படியெனில் ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் என்ற நிலைக்கு வந்துவிடும்.

இதை முன் வைத்துத்தான் இறைவாக்கினர் யோவேல் மூலமாக, "நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம். உங்கள் இதயத்தைக் கிழித்துக்கொண்டு, (யோவே. 2:13) உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்'' என்றும் அழைப்பு விடுக்கின்றார் (முதல் வாசகம்).

ஞானத்தோடு வாழ்ந்த ஒரு லட்சாதிபதியைப் பார்த்து ஒரு ஞானி கேட்டார்: "உன்னிடம் உள்ள சொத்துக்கள் எவ்வளவு" என்று. "10 லட்சம்" என்றான் அந்தப் பணக்காரன். "உனக்கு வயது என்ன என்று ஞானத்தோடு கேட்டபோது, எனக்கு வயது இரண்டு மட்டும்தான்" என்றான் அந்தப் பணக்காரன். ஞானியோ, " நீ பொய் சொல்லுகிறாய்” என்று சொன்னவுடன் அந்தப் பணக்காரன் சொன்னான், "அய்யா, எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் என்னோடு வரப்போவது நான் செய்யும் தர்மம். இது ஒரு வயது. எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் நான் இறைவேண்டுதலுக்குச் செலவிடும் நேரம் மட்டும்தான். இது இரண்டாவது வயது. இவை இரண்டுமே என் வயது" என்றான். ஆம், சிந்திக்க வேண்டிய நிகழ்வு!

இறுதியாக, சபை உரையாளர் (சஉ 3:1-8) சொல்வதுபோல், ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு. பிறப்பதற்கு ஒரு காலம், இறப்பதற்கு ஒரு காலம் உண்டு என்று. அதேபோல நமது உறவையும், தொடர்பையும் சரி செய்து நம்மைப் புதுப்பிக்கும் காலம் தான் இந்தத் தவக்காலம். இந்தப் புனித காலத்தில் இயல்பாக, தாழ்ச்சியோடு, தர்மம், இறைவேண்டல், நோன்பு என்ற அறச் செயல்களால் நம்மையே புதுப்பித்து அலங்கரித்துக் கொள்வோம்.


sermen

இடி முழக்கமாய் இன்று எதிரொலிக்கும், அதிரச் செய்யும் இறைவாக்கு “மனிதனே, நீ மண்ணாக இருக்கிறாய்” என்பது.

செப வணிகர்கள் தங்கள் செப வியாபாரத்தில் பெரிதும் முதலீடு செய்யும் இறைவார்த்தை : "உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்”. (யோவான் 16:20) ஆனால் இன்றைய வழிபாட்டின் அழைப்பு : "பாவிகளே உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள் இருமனத்தோரே, உங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துங்கள். உங்கள் நிலையை அறிந்து துயருற்றுப் புலம்பி அழுங்கள். உங்கள் சிரிப்புப் புலம்பலாகவும், மகிழ்ச்சி ஆழ்துயரமாகவும் மாறட்டும்”. (யாக்கோபு 4:8,9).

ஐரோப்பாவில் பெரும் பணக்காரன் ஒருவன் தன் பணச் செருக்கால், நலமற்ற அரசியல் செல்வாக்கால் இழைத்த தீமைகள், செய்த அட்டூழியங்கள் கணக்கில் அடங்கா. திமிரான செயல்பாடுகள் அவனைத் தீயவன் என ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக்கின. காலப் போக்கில் அவன் வாழ்வில் ஒரு மாறுதல். திருந்தி வாழ விரும்பினான். திருத்தந்தையை நாடி ரோமை சென்றான். அப்போது திருத்தந்தை 6ஆம் பத்திநாதர் அவனை வரவேற்றார். கட்டி அணைத்து ஆறுதல் சொன்னார். அவன் பாவ அறிக்கை செய்த போது என்ன பரிகாரத் தண்டனை கொடுப்பது என்று தெரியாமல் திணறினார். உடல் நலிவு, உள்ளச் சோர்வு, அலுவல் தொல்லை என்று எந்தக் கடினத்துவத்துக்கும் தடையாய் இருந்தது. நெடுநேரம் யோசித்து முடிவில் ஒரு மோதிரத்தை அவனிடம் கொடுத்து அணிந்து கொள்ளச் சொன்னார். அதில் “நீ சாவாய் என்பதை மறவாதே” என்று பொருள்பட “மேமந்தோ மோரி" என்ற இரு இலத்தீன் வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. அதனை ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லும்போதும் விழித்தெழும் போதும் மூன்றுமுறை படிக்க வேண்டும் என்பதே திருத்தந்தை கொடுத்த பரிகாரம். தொடக்கத்தில் இது எளிதாகத் தோன்றினாலும் விரைவில் வாழ்வின் நிலையாமை பற்றிய உணர்வு அவனை ஆட்கொள்ள கடைசியில் செய்யத் தயங்கிய பரிகாரத்தையெல்லாம் செய்து நல்லவனாக இறந்தானாம்.

திருநீற்றுத் திருநாள் இன்று தாய்த்திருச்சபை அந்தத் திருத்தந்தையைப் போல நமக்கெல்லாம் மோதிரத்தைத் தருவதில்லை. பதிலாகச் சாம்பலைத் தருகிறது. எந்தக் கருத்தைப் புலப்படுத்தத் திருத்தந்தை மோதிரத்தைத் தந்தாரோ, அதே கருத்தை இன்னும் ஆழமாக வலியுறுத்தச் சாம்பலை நெற்றியில் பூசி உணர்த்துகிறது "நீ மண்ணாக இருக்கிறாய். மீண்டும் மண்ணுக்குத் திரும்புவாய்".

இந்தத் திருநீறுதான் எத்துணை அர்த்தமுள்ளது!

இதோ நான் பூசியிருக்கிறேனே சாம்பல். இதுதான் நம் கடைசிக் கதி! இறுதியில் நாமெல்லாம் மண்ணாகப் போகிறவர்கள் தாம். பின் இதற்கு இந்த அர்த்தமற்ற டாம்பீகம்? வாழ்வின் பொருள் உணர்ந்து வாழ்வோம் - இப்படி ஓர் அர்த்தம்.

சாம்பல் அணிந்த நெற்றி பார்ப்பவரையெல்லாம் தெய்வத்தை நினைக்கச் சொல்கிறது - இப்படி ஓர் அர்த்தம்.

காலையும் மாலையும் கடவுள் இவன்/ள் என்னுடையவன்/ள் கான்கிற பொருளில் நம் நெற்றியில் போடும் கையெழுத்து - இப்படி ஓர் அர்த்தம்

.

குருத்தோலை ஞாயிறன்று நாம் பிடித்த அதே மந்திரித்த ஒலைகளை சுட்டெரித்து அதன் சாம்பலை நெற்றியில் இடுகிறபோது வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான். கிறிஸ்தவனுக்கு வாழ்வதும் சாவதும் ஒன்றுதான். கிறிஸ்து மட்டும் போதும் - இப்படியும் ஓர் அர்த்தம்.

அதுசரி, நெற்றியில் திருநீற்றை இட்டுக் கொள்வது ஒருநாள்தான். ஆனால் அது ஊட்டும் உணர்வுகள் ஒவ்வொரு கணமும் நம் உள்ளத்தில் நிரம்ப வேண்டாமோ?

திருநீறு - திருச்சபையின் அருள் கருவிகளுள் ஒன்று. சுவை - யான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. மனவருத்தத்துக்கும் மனத் தாழ்ச்சிக்கும், ஒறுத்தலுக்கும், ஒப்புரவுக்கும் உரிய நினைவுப் பொருளாகத் திகழ்வது. அதற்குப் பழைய ஏற்பாட்டில் எத்தனை சான்றுகள்!

- இறை வல்லமையை உணர்த்தும் சாம்பல். (வி.ப. 9:8-9)
- இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தும் சாம்பல்.(2 சாமு. 13:19)
- தவறினை உணர்ந்து செயல்படத் தூண்டும் சாம்பல். (யோனா 3:6)
- உலகப் பற்றினை ஒழித்திடத் தூண்டும் சாம்பல். (எசாயா 44:20)
- பாவ மன்னிப்புக்கு வழிகாட்டும் சாம்பல். (எரே.6:26)

தவக்காலம் நமது மீட்பின் காலம். நம் ஆன்மாவின் வசந்த காலம். பாவத்தால் நாம் மூவித உறவுகளை முறித்துள்ளோம். இவ்வுறவுகளை மீண்டும் புதுப்பித்து ஆழப்படுத்த, ஏன் முன்னிலும் வலிமையுடையதாக்க மிக எளிய மூன்று வழிகளை நமக்குத் திருச்சபை சுட்டிக் காட்டுகிறது. செபம், தவம், பிறரன்புச் செயல்கள்.

செபத்தால் இறைவனோடும் தவத்தால் (தன்னல மறுப்புச் செயலால்) நம்மோடும் பிறரன்புச் செயல்களால் நம் சகோதரரோடும் உறவைப் புதுப்பிக்க இந்தவக்காலம் நம்மை அழைக்கிறது. அதற்குக் கூட உண்மையான, நேர்மையான முழுமையான மனமாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட மனநிலை வேண்டும்.

அடிப்படை மனமாற்றம் என்பது தன்னலத்திலிருந்து விடுபட்டு கிறிஸ்துவுடன் இணைந்து இறைத்தந்தைக்காகத் தூய ஆவியானவரில் வாழ்வதாகும்.தூய ஆவியானவரில் வாழ்வதாகும்.

.
sermen3

மறையுரைச் சிந்தனை - சாம்பல் புதன் - கடவுளோடு ஒப்புறவாவோம்.

இன்று அன்னையாம் திரு அவை சாம்பல் புதனை/விபூதிப் புதனை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றது. கடவுளோடு ஒப்புறவாகவும், அதன்வழியாக நம்மோடு வாழக்கூடிய உடன் சகோதர, சகோதரிகளோடு ஒப்புறவாகவும் இறைவனால்/ திருச்சபையால் தரப்பட்ட அருளின் காலம்தான் இந்த தவக்காலம். இத்தவக்காலத்தில் நாம் இறைவனோடும், நம் அயலாரோடும் எப்படியெல்லாம் ஒப்புறவாகலாம் என்பதை இன்றைய வாசகங்களின் வழியாகச் சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவாக்கினர் யோவேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் கூறுகிறார், “இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்.. நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்” என்று. இங்கே ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள் என்ற வார்த்தையானது திரும்பத் திரும்ப வருவதை நாம் நமது கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதேபோன்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அதாவது கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 5:20 ல் பவுலடியார் கூறுவார், “ஆகவே, கடவுளோடு ஒப்புரவாகுங்கள்” என்று. எனவே நாம் ஆண்டவராகிய கடவுளிடம் திரும்பி வந்து, அவரோடு ஒப்புறவாகவேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுளமாக இருக்கின்றது.

கடவுளோடு எப்படி ஒப்புறவாகலாம் என்பதற்கு ஆண்டவர் இயேசு நற்செய்தியில் மூன்று முக்கியமான காரியங்களை கூறுவார். அவையாவன 1.தர்மம் 2.நோன்பு 3.இறைவேண்டல். இதில் தர்மம் என்பதை மட்டும் குறித்துச் சிந்தித்துப் பார்த்து இறைவனோடு ஒப்புறவாக முயல்வோம்.

எலியாஸ் என்ற ஓர் ஆன்மீக எழுத்தாளர் கூறுவார், “தபால் பெட்டியில் போடப்படும் கடிதம் உரிய இடத்தில் போய் சேர்வதுபோல, ஏழை ஒருவருக்கு நாம் செய்யும் தர்மம் இறைவனுக்கு நேரடியாகச் சென்று சேர்ந்துவிடுகிறது” என்று. ஆம், ஏழைக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்கே கடன் கொடுக்கிறவர் என்று நீதிமொழிகள் புத்தகம் 19:17 ல் வாசிக்கின்றோம். ஆகவே ஏழைகளுக்கு/ எல்லா மக்களுக்கு தர்மம் செய்வதன் வழியாக எப்படி இறைவனோடு ஒப்புறவாகலாம் என்பது பற்றி சிந்தித்துப் பார்ப்போம்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக சிகாகோ நகரிலே காவல்துறையினர் மத்தியில் வித்தியாசமான போட்டி நடைபெற்றது. அது என்னவென்றால் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டு மக்கள் கூட்டம் கூடுகிறது என்றால், அவர்களை எப்படி அங்கிருந்து கலைப்பது என்பதுதான் அக்கேள்வி.

காவல்துறையினர் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பதிலைச் சொன்னார்கள். ‘கண்ணீர் புகைகுண்டு வீசுவேன், துப்பாக்கியைப் பயன்படுத்துவேன், லத்தியை வைத்து அடித்து விரட்டுவேன்’ என்று சொல்லிக்கொண்டே போனார்கள். இறுதியாக ஒரு காவல்துறை அதிகாரி எழுந்து நின்று, “கலவரக் கூட்டத்தை விரட்ட, நான் என்னிடம் இருக்கும் தொப்பியைக் கழற்றி, மக்களிடம் யாசிப்பேன் (பிச்சை கேட்பேன்), உடனே எல்லாரும் தெறித்து ஓடி விடுவார்கள்” என்றார்.

அங்கே இருந்தவர்கள் இதைக் கேட்டு குபீர் என்று சிரித்தார்கள். இறுதியில் அவருக்கே பரிசையும் தந்தார்கள்.

நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்ற மனநிலையானது படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது என்பதை இந்த நிகழ்வானது நமக்கு மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது.

தவக்காலத்தைத் தொடங்கி இருக்கும் நாம், கிறிஸ்தவர்களின் மூன்று முக்கியக் கடமைகளில் ஒன்றான தர்மம் செய்வதில்/ அறச்செயல் புரிவதில் சிறந்து விளங்கவேண்டும் என்று திருச்சபையானது நமக்கு அழைப்புத் தருகிறது. ஆண்டவர் இயேசு, நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்ற இக்கருத்தை நற்செய்தியின் பல பகுதியில் விளக்கிக் கூறுவார். குறிப்பாக தன்னைப் பின்பற்ற நினைத்த செல்வந்தனாகிய இளைஞனிடம், “உன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும், பின்னர் வந்து என்னைப் பின்பற்றும்” என்கிறார். (மத் 19:21)

ஆகவே, இயேசு தன்னுடைய போதனைகளில் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்திக்கூறுகிறார் என்பது தெளிவு.

மேலும் நாம் கொடுக்கின்றபோது, தர்மம் செய்கிறபோது எப்படிப்பட்ட மனநிலையோடு செய்யவேண்டும் என்பதையும் மிகத் தெளிவாகக் கூறுகிறார்: “நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழவேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்” என்பார்.

எனவே தர்மம் செய்கிறபோது ஏதோ விளம்பரதிற்காகச் செய்யாமல், மறைவாக யாருக்கும் தெரியாமல் செய்யவேண்டும் என்பது இயேசுவின் போதனையாக இருக்கின்றது.

ஆனால் இன்றைக்கு விளம்பர உலகத்தில் இருக்கும் நம்மால் விளம்பரமே இல்லாமல் ஒரு நல்ல காரியத்தை, அறச்செயலை செய்ய முடிகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இயேசு “உங்கள் வலக்கை செய்வது இடக்கைத் தெரியாதிருக்கட்டும்” என்கிறார். அப்படியென்றால் நாம் ஒன்று கொடுக்கிறபோது அதை கொடுக்கிறோம் என்ற மனநிலையே இல்லாமல் கொடுக்கவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் பிரதிபலன் எதிர்பாராமல் கொடுக்கவேண்டும்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் “Natinal Morrow Donor Programme” என்ற ஓர் அமைப்பு இருக்கிறது. இதன் முக்கியமான நோக்கம் இலவசமாக எலும்புக் குறுத்துத் தசை அறுவைச் சிகிச்சை செய்து தருவதுதான்.

இந்த அமைப்பில் சேர்ந்து எலும்புக் குறுத்துத் தசையை யார் வேண்டுமானாலும் இலவசமாகப் பெறலாம், கொடுக்கலாம். ஆனால் இதில் முக்கியமான அம்சம் என்ன வென்றால் எலும்புக் குறுத்துத் தசை அறுவைச் சிகிச்சை செய்துகொள்வோர், தனக்கு யார் அதைத் தானமாகத் தந்தார் என்பதை அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. அதைப் போன்று எலும்புக் குறுத்துத் தசையை தானமாகத் தந்தவர், அது யாருக்குப் பொறுத்தப்பட்டிருக்கிறது என்றுகூட தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை.

பிரதிபலன் பாராமல் முகம் தெரியாத மனிதருக்கு உதவி செய்யவேண்டும் என்பதுதான் இவ்வமைப்பின் நோக்கம். ஆண்டவர் இயேசுவும் நமக்கு அதைத்தான் எடுத்துச் சொல்கிறார்.

ஆதலால் தொடங்கியிருக்கும் இந்த தவக்காலத்தில் இறைவனோடு நாம் செய்யும் தர்மத்தின் வழியாக (நோன்பின் வழியாக, இறைவேண்டலின் வழியாக) ஒப்புறவாகுவோம். “உடல் நலத்திற்கு இரத்த ஓட்டம் எந்தளவுக்கு முக்கியமோ, அதைபோன்று உலக நலனிற்கு தர்மம் முக்கியம்” என்பான் ஓர் அறிஞர்.

ஆகவே நம்மிடம் இருப்பதை பிறருக்குத் தர்மமாகக் கொடுப்போம். அதன் வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம்.


sermen4

தவக்காலம் - ஒரு அருளின் காலம்

இறைவனின் அருளையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் ஆசீரையும் மீட்பையும் பெற்றுக்கொள்ள நமக்கு கொடுக்கப்பட்ட காலம் தான் இந்த தவக்காலம். இந்த தவக்காலத்தில் நாம் நம்மோடும் பிறரோடும் இறைவனோடும் நல்லுறவு கொண்டு உடல் உள்ளம் ஆன்மா நலம் பெற நம்மையே அர்ப்பணிக்க கூடிய காலம். இந்த தவக்காலம் ஒரு விடுதலையின் காலம். இந்த தவக்காலம் இறைவனோடும் சக மனிதர்களோடும் நம்மோடும் நல்லுறவு கொள்ள கிடைக்கப்பட்ட கொடையாக இருக்கின்றது. மனம் மற்றும் உடலின் ஆசைகளையும் விருப்பங்களையும் தாண்டி பிறருக்கு உதவி செய்வதன் வழியாக நிறைவு காணும் காலமாக இத்தவக்காலம் இருக்கின்றது. இப்படிப்பட்ட தவக்காலம் திருநீற்றுப் புதன் அன்று தொடங்குகின்றது. தவக்காலம் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 40 நாட்களை உள்ளடக்கிள்ளது.

தவக்காலத்தில் ஏன் 40 நாட்கள் நினைவு கூறப்படுகின்றது? என்ற கேள்வி நமக்கு எழலாம். விவிலியத்தில் 40 என்ற எண் அதிக முக்கியத்துவம் வாய்ந்த எண்ணாக இருக்கின்றது. இயேசு தன்னுடைய இறையாட்சி பணியை செய்வதற்கு முன்பாக 40 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தன்னை ஆயத்தப்படுத்தினார். பழைய ஏற்பாட்டில் மோசேயும் எலியாவும் 40 நாட்கள் நோன்பிருந்தார்கள் என்று விவிலியத்தில் வாசிக்கிறோம். நோவாவின் காலத்தில் 40 இரவும் பகலும் பேழையில் நோவாவும் அவரின் குடும்பத்தாரும் இருந்தார்கள் என்று வாசிக்கிறோம். மோசே பத்து கட்டளையை பெறுவதற்கு முன்பாக 40 நாட்கள் மலையில் இருந்ததாக வாசிக்கிறோம். இஸ்ராயேல் மக்கள் 40 ஆண்டுகள் பாலை நிலத்தில் பயணமானார்கள். எலியா நாற்பது நாட்கள் அலைந்து திரிந்த பின் ஓரேபு மலையில் இறைபிரசன்னத்தை உணர்ந்தார் எனவும் நாம் காண்கிறோம்.

நமக்கு வருடா வருடம் கொடுக்கப்படும் இந்த நாற்பது நாட்கள் எதற்காக? நம் உள்ளங்களை கிழித்துக்கொண்டு மனம் மாறுவதற்காக. நினவே நகரம் நாற்பது நாட்களில் அழிக்கப்படும் என்ற செய்தி கேட்கப்பட்ட போது அரசன் தொடங்கி மக்கள் கால்நடைகள் என அனைவரும் நோன்பிருந்து பாவம் நிறைந்த தங்கள் இதயங்களைக் கிழித்துக்கொண்டு இறைவனின் இரக்கத்தால் புதுவாழ்வு பெற்றார்கள். அதேபோல நாமும் நம்முடைய இதயங்களைக் கிழித்துக் கொள்ள வேண்டும்.

எத்தகைய இதயங்கள்?
****பகை நிறைந்த
****இச்சை நிறைந்த
****கர்வம் நிறைந்த
****பேராசை நிறைந்த
****உலக போதைகள் நிறைந்த
****அலட்சியம் நிறைந்த
****இறையச்சம் இல்லாத நம்முடைய இதயங்களை கிழித்துக் கொள்ள வேண்டும். அப்போது நம்முடைய இறைவேண்டல் அர்த்தமுள்ளதாகும். நம்முடைய தர்மம் பயனுள்ளதாகும். நம்முடைய நோன்பு பொருளுள்ளதாகும். நம்முடைய வாழ்வில் இறையருள் நிறைந்து வழியும். எனவே தான் தவக்காலம் இறையருளின் காலமாகிறது.

மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டோம். மண்ணிற்கு தான் போகப்போகிறோம். இதை உணர்ந்து வாழுகின்ற வாழ்க்கையை இறையருளால் நிரப்ப வேண்டியது நமது கடமையல்லவா? எனவே இந்த தவக்காலத்தில் ஜெபம் தவம் தானம் போன்ற புண்ணியங்கள் வழியாக இறைவனை இன்னும் ஆழமாக அனுபவிக்கவும் அவர் தருகின்ற இரக்கத்தையும் மன்னிப்பையும் நிறைவாக சுவைக்கவும் தேவையான அருளை வேண்டுவோம். ஜெபத்தின் வழியாக இறைவனோடு நல்லுறவு கொண்டு இந்த நாற்பது நாட்களும் பயணமாவோம். அதன் வழியாக கடவுள் தருகின்ற அன்பையும் அருளையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் சுவைப்போம். தானத்தின் வழியாக பிறருக்கு உதவி செய்வோம். பிறருக்கு நம்முடைய சொல் செயல் பொருள் போன்றவற்றின் வழியாக உதவி செய்து பிறரோடு நல்லுறவு கொள்வோம். அப்பொழுது நிச்சயமாக மனித சேவையில் புனிதம் காண முடியும். தவத்தின் வழியாக உண்ணா நோன்பு இருந்து நம்மையே நாம் பக்குவப்படுத்துவோம். நம்முடைய இதயத்தைக் கிழித்து பாவ வாழ்வையும் இச்சை நிறைந்த வாழ்வையும் கடவுளுக்கு எதிரான வாழ்வையும் விட்டுவிட்டு புதிய ஆற்றலான ஆசீர்வாதமான தூய்மையான இதயத்தை அணிந்து கொள்வோம். அப்பொழுது நிச்சயமாக நம்முடைய உடல் உள்ள ஆன்மாவோடு நல்லுறவு கொண்டு அதிகமான ஆசீர்வாதங்களை நாம் பெற முடியும். இவ்வாறாக இந்த 40 நாட்களும் முடிந்தவரை இறைவனோடும் பிறரோடும் நம் ஆன்மாவோடு நல்லுறவு கொள்வோம். அதன் வழியாக சிறந்த கிறிஸ்தவர்களாக வாழ்ந்திட முன் வருவோம். மனம் மாறி நற்செய்தியை நம்பி புது மாற்றத்தையும் புது வாழ்வையும் பெற்றுக் கொள்வோம். இந்த தவக்காலத்தை அருளின் காலமாக மாற்ற முயலுவோமா! உணர்ந்து செயல்பட இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! தவக்காலத்தை தொடங்கியுள்ள இன்றைய நாளில் நாங்கள் எங்களுடைய மனமாற்ற வாழ்விற்காக ஜெபிக்கிறோம். நீர் தாமே தொடர்ந்து உமது வல்லமையும் ஆற்றலையும் பொழிந்து எங்கள் தீய வாழ்வையும் பாவ வாழ்வையும் விட்டுவிட்டு தூய வாழ்வு வாழ்ந்திட அருளைத் தாரும். ஆமென்.


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்