முகிலினம் எழுதிய முகவரி
இயேசுவின் விண்ணேற்றம் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையின் உச்ச தருணங்களில் ஒன்றாகும். சிலுவை, உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் நிறைவாக, அவர் விண்ணேற்றம் பெற்றார். ஆனால் அந்த விண்ணேற்றம் வெறும் “வானத்திற்கு உயர்ந்தார்” என்ற நிகழ்வு அல்ல;. மனித கண்களுக்கு மறைந்த அந்தத் தருணம், தேவ சன்னிதிக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மகிமையின் அறிவிப்பு.
உடலெடுத்த தேவன் தந்தையோடு மீண்டும் மகிமையுடன் ஒன்றிணைந்த நிகழ்வு, மனித குலத்தின் எதிர்கால மகிமைக்கான வாசல் திறந்த தருணம் ஆகும்.
“அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது” (திருத்தூதர் பணிகள் 1:9) என்று எழுதப்பட்டுள்ளது.
“வானத்தில் மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்களின்மீது வருவார்.” (மத்தேயு 24:30). ஆரம்பத்தில் வழிநடத்திய மேகம், விண்ணேற்றத்தில் ஏற்றுக்கொண்ட மேகம், இறுதியில் மகிமையுடன் திரும்பும் மேகமாக மாறுகிறது. இது இரட்சிப்பு வரலாற்றின் முழு வட்டம்.
இயேசுவின் விண்ணேற்றம் நமக்குச் சொல்லுவது இதுதான்:
மகிமை மனிதனுக்குத் தூரமல்ல.
மேகம் நம்பிக்கையின் திரை.
முகிலில் மறைந்தவர் மகிமையில் ஆட்சி செய்கிறார்.
அந்த முகிலினம் எழுதிய முகவரி, இன்று நம்புகிற ஒவ்வொருவருக்கும் திறந்த அழைப்பாக உள்ளது.
விண்ணேற்றம் பிரிவு அல்ல; ஏற்பாடு. இயேசு “நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்.” (யோவான் 14:2) என்று கூறினார். அந்தக் காட்சி தான் விண்ணேற்றம். அவர் சென்ற இடம் அறியாத வெற்றிடம் அல்ல; தந்தையின் வலப்பக்கம் அதிகாரமும் நடுவர் நிலையும் கொண்ட மகிமை நிலை (எபேசியர் 1:20–22).
மேலும், விண்ணேற்றம் பரிசுத்த ஆவியின் வருகைக்கான வாசல். “நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன். (யோவான் 16:7). ஆகவே விண்ணேற்றம் என்பது தூரப்படுதல் அல்ல; புதிய வகை அருகாமை. உடலால் விலகியவர், ஆவியால் உலகெங்கும் நிறைந்தார்.
உயிர்த்தெழுதல் முதல் விண்ணேற்றம் வரை – ஒரு நிறைவு பயணம்
உயிர்த்தெழுந்த இயேசு நாற்பது நாட்கள் சீடர்களுடன் இருந்தார் (திரு.பணி 1:3). “இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார் இந்தக் காலம், பயந்த சீடர்களைச் சாட்சிகளாக மாற்றும் பயிற்சி காலமாக இருந்தது.
நற்செய்திகளில் மேகம்
1. வழிநடத்தும் சன்னிதி – மேக தூண்
“ஆண்டவர், பகலில் அவர்களை வழிநடத்த மேகத் தூணிலும், இரவில் ஒளிகாட்ட நெருப்புத் தூணிலும் இருந்தார். (விடுதலைப் பயணம் 13:21)”
இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் இருந்தபோது, மேகம் அவர்களை வழிநடத்தியது,
🕁 பாதுகாத்தது,
🕁 தேவன் அவர்களோடு இருப்பதை உறுதி செய்தது.
🕁 மேகம் இங்கே தேவன் தூரத்திலிருந்து ஆளுபவர் அல்ல; நடுவில் நடக்கிறவர் என்பதைக் காட்டுகிறது.
2. தங்கும் சன்னிதி – கூடாரத்தை நிரப்பிய மேகம்
“மேகம் சந்திப்புக்கூடாரத்தை மூடிற்று; ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று.”(விடுதலைப் பயணம்:40:34-35). பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் இஸ்ரயேல் வீட்டார் திருஉறைவிடத்தின்மேல் நின்று பாதுகாத்தது.
3. வெளிப்பாட்டு மேகம் – சீனாய் மலையில்
“ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ! நான் உன்னோடு பேசுவதை மக்கள் கேட்கும்படியும் என்றென்றும் உன்னை நம்பும்படியும் நான் கார் மேகத்தில் உன்னிடம் வருவேன்” என்றார்”. (விடுதலைப் பயணம் 19:9)
4. ராஜ மகிமையின் மேகம் – ஆலயம் நிரம்பியது
குருக்கள் தூயகத்தினின்று வெளியே வருகையில் ஒரு மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிரப்பிற்று. அம்மேகத்தின் பொருட்டு குருக்கள் திருப்பணி புரிய அங்கு நிற்க இயலவில்லை. (1 இராஜாக்கள் 8:10–11). தேவனின் மகிமை மனித செயல்களை நிறுத்துகிறது.
5. கிறிஸ்துவின் வாழ்க்கையில் மேகம்.
“ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. (மத்தேயு 17:5)
மேகம் இங்கே:
🕁 இயேசுவின் தெய்வீக அடையாளம்
🕁 தந்தையின் சாட்சி
🕁 மகிமை வெளிப்பாடு
6. விண்ணேற்றத்தில் மேகம்
மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது” (திருத்தூதர் பணிகள் 1:9) (அப்போஸ்தலர் 1:9) இது இயேசு மறைந்தார் என்பதல்ல; தேவ சன்னிதிக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்பதைக் குறிக்கிறது.
7. எதிர்கால நம்பிக்கையின் மேகம்
“மானிட மகன் வானத்தின் மேகங்களின்மீது வருவார்.”(மத்தேயு 24:30)
மேகம்:
🕁 தீர்ப்பின் சின்னம்
🕁 ராஜ்யத்தின் வருகை
🕁 மகிமையின் திரும்புதல்
🕁 விவிலியத்தில் மேகம் என்பது:
🕁 தேவன் அருகில் இருப்பதின் அடையாளம்
🕁 தேவ மகிமையின் மறைவு
🕁 தேவ வெளிப்பாட்டின் மேடை
🕁 ராஜ மகிமையின் சின்னம்
8. கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்
“இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.”
(மாற்கு 16:19)
“வலப்பக்கம்” என்பது அதிகாரம், தீர்ப்பு, நடுவர் நிலை ஆகியவற்றைக் குறிக்கும் (சங்கீதம் 110:1).
“கடவுளின் வலப்புறம்” – அதன் தெய்வீக முக்கியத்துவம்
நற்செய்தியில் “வலப்புறம்” என்பது ஒரு சாதாரண திசை அல்லது உட்காரும் இடத்தை மட்டும் குறிக்கவில்லை. அது அதிகாரம், மகிமை, வெற்றி, மரியாதை, நடுவர் நிலை ஆகியவற்றின் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு “அவர் கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்” என்று மாற்கு நற்செய்தி கூறுகிறது. இது இயேசு ஒரு இடத்தில் உட்கார்ந்தார் என்பதைக் காட்டுவதல்ல; அவர் தேவ அதிகாரத்திலும் மகிமையிலும் பங்குபெற்றார் என்பதைக் குறிக்கிறது.
1. பழைய ஏற்பாட்டில் “வலப்புறம்” – அதிகாரத்தின் சின்னம்
“ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது;
ஆண்டவரே, உமது வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது..”
(விடுதலைப் பயணம் 15 15:6)
இங்கு “வலது கை” என்பது தேவனின் சக்தியும் வெற்றியும் குறிக்கிறது.
மனித சமுதாயத்திலும் வலப்புறம் மரியாதையின் இடமாக இருந்தது. ஒரு ராஜாவின் வலப்பக்கத்தில் அமர்வது மிக உயர்ந்த மரியாதை.
இதையே (திருப்பாடல்கள் 110 :1) மிகவும் தெளிவாகக் கூறுகிறது:
“ஆண்டவர் என் தலைவரிடம், ‛நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்’.” இந்த வசனம் மெசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனம். அதாவது மெசியா தேவனின் அதிகாரத்தில் பங்குபெறும்.
2. “வலப்புறம்” – நடுவர் நிலை
இயேசு வலப்புறத்தில் இருப்பது அவர் மனிதருக்காக நடுவராக இருப்பதை காட்டுகிறது. “கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார்.” (ரோமர் 8:34)
இதன் பொருள்: மனிதர் மற்றும் தேவன் இடையே பாலமாக அவர் நிற்கிறார்.
3. தீர்ப்பில் வலப்புறம்
இயேசு இறுதி தீர்ப்பைப் பற்றிக் கூறும்போது: “செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்;.”
(மத்தேயு 25:33) இங்கு வலப்பக்கம் இரட்சிப்பும் ஆசீர்வாதமும் குறிக்கிறது.
“கடவுளின் வலப்புறம்” என்பது:
• தேவ அதிகாரத்தில் பங்கு
• ராஜ்ய மகிமை
• நடுவர் நிலை
• வெற்றி மற்றும் உயர்வு
• இரட்சிக்கப்பட்டவர்களுக்கு இடம்
இயேசு தேவனாக மட்டுமல்ல, முழுமையான மனிதராகவும் விண்ணேற்றம் பெற்றார். இதுவே விண்ணேற்றத்தின் மிக ஆழ்ந்த தத்துவம். மனித உடல், மனித இயல்பு—இவை தேவ சன்னிதிக்குள் கொண்டு செல்லப்பட்டன. இதனால்,
• மனித வாழ்க்கை அவமதிக்கப்படவில்லை
• மனித உடல் நிராகரிக்கப்படவில்லை
• மனித எதிர்காலம் மகிமைப்படுத்தப்பட்டது
இயேசு சென்ற பாதை, நம்புகிற ஒவ்வொருவருக்கும் திறக்கப்பட்ட பாதை.
இயேசுவின் விண்ணேற்றம் என்பது,
• சிலுவையின் வெற்றிக்கு முத்திரை
• உயிர்த்தெழுதலின் நிறைவு
• மனிதருக்கான மகிமையின் வாக்குறுதி


