அருள்வாக்கு இன்று

அக்டோபர் 7-திங்கள்

இன்றைய நற்செய்தி

லூக்கா 10:25-37

இன்றைய புனிதர்


புனித செபமாலை அன்னை

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அதற்குத் திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார். லூக்கா 10:37

வார்த்தை வாழ்வாக:

இயேசுவின் காலத்திலிருந்து இன்றுவரையிலும் உள்ளப் பெரிய பிரச்சனையே அயலான் யார் என்ற தெளிவு இல்லாததுதான். அருகில் இருப்பவன் எல்லாம் அயலான் அல்ல. ஆடை அணிகலன்களோடு விருந்து விழாக்களில் கூடி வருபவன் எல்லாம் அயலான் அல்ல. சட்டத்தையும் சம்பிரதாயத்தையும் கடைபிடிப்பதால் அயலானின் அன்பன் ஆகிவிட முடியாது. மனிதாபிமானம் இல்லாத மதமும் சாரமற்ற வழிபாடும் அயலானின் அன்பன் ஆக்க உதவாது. அடித்தள மனிதனின் ஆதங்கத்தை உணராமல் ஆகாயத்தில் சிறகடிக்கும் மனிதனால் அயலானைக் காணக் கண் பார்வைப் போதாது. தேவையில் இருப்பவன் அயலான். சமூகம், பொருளாதாரத்தால் தாக்குண்டுத் தவிக்கும் மனிதன் ஓர் அயலான். கொள்ளை,கொலை வன்முறையால் பாதிக்கப்பட்டவன் அயலான். அநீதியாலும் சாதீயத்தாலும் நசுக்கப்பட்ட மனிதன் ஓர் அயலான். தனிமையில் வாடுவோர், அனாதைகள், ஆதரவற்றோர் அனைவரும் அயலானே.

சுயஆய்வு

  1. என் அயலானைக் கண்டுக்கொண்டேனா?
  2. அவர்களுக்கு உதவ என் முயற்சிகள் என்ன?

இறைவேண்டல்

இரக்கமே உருவான எம் இயேசுவே! அயலானை அடையாளம் கண்டு அவர்களுக்கு இரக்கச் செயல்களைச் செய்யும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு