அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 1- திங்கள்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 14:13-21

இன்றைய புனிதர்

புனித அல்போன்ஸ் மரிய லிகோரி

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள் மீது பரிவுகொண்டார்: அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார். மத்.14:14

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, தனிமையில் தன் தந்தையிடம் உறவாடப் பாலை நிலத்திற்குச் செல்கின்றார். ஆனால் மக்களோ ஆயனில்லா ஆடுகளைப் போலும், தமக்கு உரியவரை நாம் நாடிச் சென்றால் நமது தேவைகள் பூர்த்தியாகும் என்று ஆவலில் இறைமகனைத் தேடி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தன் பிள்ளைகள் தன்னைத் தேடி வருவதை உணர்ந்த இயேசு அவர்கள் மீது பரிவு கொள்கின்றார். எனவே தான் அவர்கள் கேட்குமுன்னரே வழங்கும் வள்ளலாக இங்கே ஓங்கி நிற்கின்றார். அவர்களது பிணிகளைப் போக்கி - அவர்களுக்கு எந்த நேரத்தில் எது தேவையோ அதை வழங்கிடும் தாயாகவும் தந்தையாகாவும் நிற்கும் காட்சி நமது உள்ளங்களை அன்று மட்டுமல்ல, இன்றும் நம்மை இருகரம் விரித்து அழைக்கின்றார். அவரைக் கண்டுணர்வோம் வாரீர்.

சுய ஆய்வு

  1. நான் என் அன்பரைக் காண-உணர என் நிலை என்ன?
  2. என்னுள் புதைந்துக் கிடக்கும் சுயநலத்தைக் கலைந்துப் பொதுநலம் காண்கிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! எம்முள் இணைந்து, நான் மாற்றுச் சமுதாயம் படைத்திட வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு