அருள்வாக்கு இன்று

ஜூன் 7-சனி

இன்றைய நற்செய்தி

யோவான் 21:20-25

புனித வில்லிபால்டு St. Willibald
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சுச் சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டாரென இயேசு கூறவில்லை. மாறாக, "நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன?" என்றுதான் கூறினார். யோவான் 21:23

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், உயிர்த்த இயேசுவின் அன்புச் சீடரும் அவரைப் பின்தொடர்வதைக் கவனித்த பேதுரு, “ஆண்டவரே, இவருக்கு என்ன ஆகும்” என்ற ஆவலில் கேட்கின்றார். ஆனால் இறைமகனோ, “நான் வரும் வரை இவன் இருக்க வேண்டும் என விரும்பினால் உனக்கு என்ன?” என்று கூறிவிட்டு, “நீ என்னைப் பின் தொடர்” என்று முற்றுப்புள்ளி வைக்கின்றார். இதற்குப் புனித யோவானே சாட்சி. எப்படி எனில், இறைமகனுடன் இறுதி வரை உடன் பயணித்தவர். இந்த நற்செய்தி நூலை எழுதியவரும் இவரே. இதனூடே திருமடல்களையும் எழுதி, இயேசுவின் அன்புச் சீடர் என இறைமகனால் உலகுக்கு அறிவிக்கப்பட்டவரும் இவரே. இவரது சான்று உண்மையானது. இயேசு செய்த அருள்குறிகள் பல உண்டு. அவற்றைப் பதிவு செய்ய இயலாது எனும் நற்செய்தியை உணர்ந்திடுவோம், வாழ்வோம்.

சுயஆய்வு

  1. நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என்பவரை அறிகிறேனா?
  2. அன்புச் சீடர் யார் என்பதை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே, உமது அன்புச் சீடரைப் போல உமது மார்பில் சாய்ந்திடும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு