டிசம்பர் 11 : திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் - திங்கள்கிழமை
புதுமையான செயல்பாடுகள்
எசாயா 35:1-10, லூக்கா 5:17-26
இதைக் கண்ட யாவரும் மெய்மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், “இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!” என்று பேசிக் கொண்டார்கள். (லூக்கா 5:26)
நம்பமுடியாத, புதுமையான காரியங்களை நம்முடைய வாழ்க்கையில் பலதடவை கடவுள் செய்திருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். சில நேரங்களில் அவை நமக்கு வியப்பும், ஆச்சரியமும் தருகின்ற நிகழ்வுகளாகவும், வேறுசில நேரங்களில் மனதை நெகிழச்செய்து கவலையும், அச்சமும் தருவனவாகவும் அமைகின்றன. இத்தகைய புதுமையான நிகழ்வுகள் நடைபெறுகின்றபோது, நாம் தொட்டு உணர்ந்திடும் விதமாக, கண்ணால் காணக்கூடிய வகையில் கடவுளின் உடனிருப்பு நம்மோடு இருப்பதை பற்றுறுதியோடு நம்ப முடிகிறது. மேலும், இதுநாள் வரையில் நாம் எதிர்பார்த்துக் காத்திருந்த முழுமையான உள்ளார்ந்த மனமாற்றம் நம்மில் உருவாகியிருப்பதை நாம் கண்டுணர்கிறோம்.
ஆயினும், இவ்வாறு நம் மனதில் தோன்றிய வியப்புணர்வு, நாளாக ஆக நம்மிலிருந்து விலக ஆரம்பித்து, நம்மைவிட்டு அகன்றுவிடுகிறது. நாமும் கடவுள் நமக்குச் செய்த மேலான நன்மைகளை மறந்துவிட்டு, தவறான பழக்கவழக்கங்களைப் பின்பற்றத் தொடங்கி, கடவுள் நமக்கு உதவி செய்வதில்லை என்று குறை சொல்ல ஆரம்பிக்கிறோம். இன்றைய நற்செய்தியில் முடக்குவாதமுற்ற ஒருவரை இயேசு குணமாக்கியதைக் கண்ட சிலரும் இத்தகைய நம்பிக்கைக் குறைவுடையோராக இருந்திருக்க வேண்டும். இயேசு செய்த புதுமையை நேரிலே கண்டு, கடவுளைப் போற்றியவர்களில் சிலர் பின்னாளில் “இவனைச் சிலுவையில் அறையும்” என்று கூச்சலிட்ட மக்கள் கூட்டத்திலும் இருந்திருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது. இயேசுவுக்கு மரண தண்டனை தரச் சொல்லிக் கோஷமிட்ட கூட்டத்தில் நானும் இருந்திருப்பேனா? அல்லது இயேசு செய்த நம்பமுடியாத புதுமைகள் நம் உள்ளத்திலும், இதயத்திலும் நிலையான மாற்றத்தை உணடாக்கி உள்ளனவா? சிந்திப்போம்.
மனிதனாகப் பிறந்து எங்களை மீட்க வந்தக் கடவுளே! தீவனத் தொட்டியில் சிறு குழந்தையாக நீர் பிறந்த திருவிழாவிற்காகவும், உலக முடிவில் மாட்சியோடு வரவிருக்கின்ற உமது இரண்டாம் வருகைக்காகவும் ஆவலோடு நாங்கள் காத்திருக்கிறோம். எங்கள் இதயங்களைப் புதுப்பித்தருளும். எந்நாளும் உமது திருப்பெயரை மாட்சிபடுத்துவதற்கு உமது அருளை பொழிந்தருளும். இந்த உலகத்திலும், எங்கள் வாழ்க்கையிலும் நீர் எந்நாளும் செய்து வருகின்ற எண்ணற்ற அருங்கொடைகளுக்கு சாட்சிகளாக வாழ்ந்திடும் வரத்தை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
அன்பின்மடல் முகப்பு
உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி