தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 10 : திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு
இப்போதைய காலம் எது?

வாசகங்கள்:

எசாயா 40:1-5, 9-11; 2 பேதுரு 3:8-14 மாற்கு 1:1-8

அருள்மொழி:

அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிட வேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன. (2 பேதுரு 3:8)

சிந்தனை:

இன்றைய நாள்களில் காலத்தையும், நேரத்தையும் நாம் எதிரிகளாகவே பார்க்கிறோம். ஒருநாளில் நமக்குப் போதுமான மணித்துளிகள் இல்லை என்பதே நம் எண்ணம். இப்போது இருப்பதை விட ஒரு மணி நேரமோ, ஒரு நாளோ அல்லது ஒரு வாரமோ கூடுதலாகக் இருந்தால் நன்றாக இருக்கும் என்றே நினைக்கிறோம். நோயுற்றிருக்கின்ற நேரத்தில் அல்லது இரவில் உறங்காமல் விழிப்புடன் படுத்திருக்கும் சமயத்தில் அல்லது யாரோ ஒருவருடைய வருகையை, தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில், காலமும், நேரமும் நகராமல் நின்றுவிட்டதைப் போலத் தெரிகிறது. இது போன்று ஒரு குறிப்பிட்டக் காலகட்டம் இயங்காமல் அசைவற்று நின்றுவிட்டதைப் போன்ற நிலைமை எப்போது வேண்டுமானாலும் நமக்குத் தோன்றலாம்.

நேரத்தையும், அதன் இயக்கத்தின் அசைவையும் பற்றிய நமது கணிப்பு, அதே காலக் கட்டத்தைக் குறித்த கடவுளின் திட்டத்திலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது என்பதை திருத்தூதர் புனித பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் இன்று வாசிக்கக் கேட்டோம். காலத்தைக் குறித்த கடவுளின் திட்டம் முடிவற்றதாகவும், வரையறைக்கு உட்பட்டதாகவும், நமது சிந்திக்கும் திறனுக்குப் புலப்படாததாகவும் இருக்கிறது.

கடவுள் பொறுமையாக இருக்கிறார் என்றும், நாமெல்லாம் அழிந்து போகாமல் மனம் மாற விரும்புகிர் என்றும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கேட்டோம். அதே நேரத்தில், ஆண்டவருடைய நாள் திருடனைப் போல் வருமென்றும், அந்நேரத்தில் வானமும், பூமியும், அதிலுள்ளவை அனைத்தும் தீக்கிரையாகி மறந்தொழியும் என்றும் இன்றைய வாசகத்தில் புனித பேதுரு சொல்கிறார். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடான கருத்துகள் மட்டுமல்ல; நமது வாழ்க்கை நெறிகளையும், காலத்தின் இயக்கத்தைக் குறித்த நமது கணிப்பையும் சீர்தூக்கி ஆய்ந்து பார்த்திட ஆழமான சிந்தனையை நம் முன்னே வைக்கிறது. எதிர்வரும் காலம் அளவற்றதாக நமக்காகக் காத்திருகிறது என்று நமக்கு நாமே அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கிறோம். மிகவும் இக்கட்டான வகையில் நோயுற்றிருக்கின்ற நமது நண்பர்கள் பலர், காலம் குறுகியது என்று அறிந்திருந்தாலும், தங்களுடைய குடும்ப நலனுக்காக இன்னும் நெடுநாள் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். நம்மில் பலரும் அதே கருத்தோடே வாழ்கிறோம்.

இறைவேண்டல்:

அனைத்துலகின் கடவுளே! “முடிவில்லாத நிலைவாழ்வைத் தருவேன்” என்ற உமது வாக்குறுதி, மனித மனங்களின் புரிதலுக்கு அப்பாற்ப்பட்ட பெருங்கொடை ஆகும். எங்களுடைய வாழ்வில் கிடைக்கின்ற ஒவ்வொரு கணமும் உமது கனிவான கொடை என்பதை நாங்கள் கண்டுணரவும், அத்தகைய உமது ஆசீருக்கு நன்றி சொல்லிக் கொண்டாடும் வண்ணம் எங்கள் வாழ்நாளை நன்னெறிகளில் பயன்படுத்தவும் உமது உதவியை எங்களுக்கு அளித்தருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி