தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 9 : திருவருகைக் காலம் முதல் வாரம் - சனிக்கிழமை
வாசத்தை வைத்து ஆடுகளைத் தெரிந்து கொள்தல்

வாசகங்கள்:

எசாயா 30:19-21, 23-26; மத்தேயு 9:35-10:1, 5-8

அருள்மொழி:

"திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள்மேல் பரிவுகொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்" (மத்தேயு 9:36)

சிந்தனை:

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் உரையாற்றிய திருத்தந்தை பிரான்ஸிஸ், “ஆடுகளின் வாசத்தை அறிந்து செயல்படுகின்ற மேய்ப்பர்களாக இருங்கள்” என்று திருஅவையின் ஆயர்களையும், குருக்களையும் கேட்டுக்கொண்டார். திருஅவையின் நெறியில் பயணிக்கின்ற மக்கள், சீரிய ஆளுமை கொண்ட மேய்ப்பகளுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள் என்பதை திருத்தந்தை பிரான்ஸிஸ் தெளிவாக அறிந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை திருவழிபாட்டின்போது, மறையுரை மேடையிலிருந்து கடவுளைப் பற்றிப் பேசுகின்ற போதகர்களாக மட்டுமில்லாமல், அன்றாட வாழ்வின் துயரமான நேரங்களிலும், மகிழ்ச்சியான தருணங்களிலும் கடவுளின் உடனிருப்பை எடுத்துக் காட்டுகின்ற தூதுவர்களாக ஞான மேய்ப்பர்கள் இருக்க வேண்டும் என்ற மக்களின் தேடலைத் திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.

மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காகவே, தன்னைப் பின்தொடர்ந்து வந்த திரளான மக்கள் கூட்டத்தின் மீது இயேசு பரிவு கொண்டார் என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். தன்னைச் சூழ்ந்திருக்கின்ற மக்கள், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல, கலங்கித் தவித்துச் சோர்வுற்றிப்பதை இயேசு பார்க்கிறார். ஆகவே தான் “வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் செல்லுங்கள்; நோயுற்றோரை குணமாக்குங்கள்; தீயஆவிகளை ஓட்டுங்கள்” என்றுத் தன் சீடர்களிடம் சொல்லுகிறார்.

மனபதற்றம், போதைப்பொருள் மற்றும் மது பானங்களின் எல்லைமீறிய பயன்பாடு, தற்கொலை முயற்சிகள், இணையதளத்தில் கட்டுபாடற்ற பாலியல் பதிவுகள் - இது போன்ற பற்பல தாக்கங்களால் இன்றைய காலக் கட்டத்தில் மனிதர்கள் மிகவும் கலக்கமும், சோர்வும் அடைந்து, கைவிடப்பட்ட நிலையில் தான் இருக்கிறோம் என்பது தெளிவு. ஒரு சமுதாயமாக இணைந்திருக்கின்ற நாம், நம்மை நாமே நெறிபடுத்திக் கொள்வதற்கான நற்செயல்களை செய்வதற்கு இன்னும் முனைப்புடன் துணியவில்லை. நமது ஆன்மீகத் தேடல்களைப் பகிர்ந்து கொண்டு மனந்திறந்து கலந்துரையாடி, ஒரு மேய்ப்பனைப் போல நம்மை நல்வழியில் நடத்துவதற்காக, குருக்களைப் போன்ற ஒரு துறவுநிலையினர் அல்லது நமது வாழ்க்கைத் துணைவர் (கணவன்/மனைவி) அல்லது நெருங்கிய நண்பர் - இப்படி யாராவது ஒருவரை நாடிச் சென்று மனத்தெளிவு பெறுவது அவசியமாகிறது.

இறைவேண்டல்:

இயேசுவே, நீரே எங்கள் நல்லாயன். நாங்கள் வழிதவறிச் செல்லும்போது எங்களைக் காப்பாற்றுபவர் நீரே. வாழ்க்கைப் பாதையில் நாங்கள் திசைமாறி தடுமாறும்போது, நல்வழி கண்டுணரவும், எங்கள் இறைநம்பிக்கையைக் காத்துக்கொள்ளவும் வலுப்படுத்தி, அதற்கான புரிதலையும், ஞானத்தையும் எங்களுக்குத் தருவீராக. ஆமென்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி