தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 8 : திருவருகைக் காலம் முதல் வாரம் - வெள்ளிக்கிழமை
புனித கன்னி மரியாவின் அமல உற்பவம் அன்னை மரியாவின் வழியாக இயேசுவிடம்

வாசகங்கள்:

தொடக்கநூல்: 3:9-15, 20; எபேசியர் 1:3-6, 11-12; லூக்கா 1:26-38

அருள்மொழி:

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே* வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். (லூக்கா 1:28)

சிந்தனை:

தன் அன்னையின் உதரத்தில் கருவாக உற்பவித்த நேரத்திலேயே ஜென்ம பாவம் இல்லாத தூயவராக உருவான கன்னி மரியாவின் அமல உற்பவத்தை பெருவிழாவாக திருஅவை இன்றுக் கொண்டாடுகிறது. கருவிலே மாசற்றவராக அன்னை மரியா இருந்தார் என்ற உண்மையே, அவர் நம்மிலிருந்து வேறுபட்டிருந்தார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இத்தகைய ஆழமானக் கோட்பாட்டின் பொருளை நம் மனித மனங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல் கடினமே. ஆயினும், கடவுளுடைய மேலான அன்பையும், ஆதரவையும் பெற்றவராக, புதிய ஏவாளாக மரியா தெரிந்து கொள்ளப்பட்டதை குறிப்பதே இன்றைய விழாவின் கருத்து ஆகும். கடவுளின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கு ‘சம்மதம்’ தெரிவித்ததன் வழியாக, நமது முதல் பெற்றோர் செய்த தவறுகளைத் திருத்துவதற்கான இறைத்திட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள மரியா ஒப்புதல் அளித்தார். இவ்வாறு, ‘உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்ற வார்த்தையின் வழியாக மரியா தெரிவித்த சம்மதம், வெகுசிறப்பான உன்னத நிலைக்கு அவரை உயர்த்தியது.

ஆயினும், இம்மண்ணுலக வாழ்வில் ஒரு சாதாரண ஏழைப் பெண் எதிர்கொள்ள வேண்டிய எல்லா இடையூறுகளும் மரியாவுக்கும் நேர்ந்தன. தனக்குத் தரப்பட்ட மாபெரும் பொறுப்பின் பெருஞ்சுமையை புரிந்துகொள்ள இயலாத ஒரு இளவயது பெண்ணாக மரியா அந்நேரத்தில் இருந்தார். அக்காலத்தில் வாழ்ந்த அன்னையர் எல்லாருக்கும் தன் குழந்தையின் நலன், அதன் பாதுகாப்பு, இல்லத்தின் பணிகளில் கவனம், தனது இறைநம்பிக்கைச் சார்ந்த நெறிகளைத் தவறாது கடைபிடித்தல் எனக் கவலையும் அச்சமும் தருகின்ற பணிகளை அன்றாடம் அக்கறையோடு செய்யவேண்டிய கடமை இருந்தது. தன் இளம்வயதில் இது போன்ற குழப்பமான, கடினமான வேலைகளைச் செய்யவேண்டிய நிலையில் இருந்த மரியா, இவற்றையெல்லாம் துணிவோடு செய்ததனால் தான் சிறப்புமிக்கவராகப் போற்றப்படுகிறார்.

இன்றைய நாளில் நமது வாழ்வில் வருகின்ற துன்பங்களை எல்லாம், தான் வாழ்ந்த காலத்திலே அன்னை மரியாவும் அனுபவித்தார். ஆகவே நம்முடைய துன்ப நேரங்களில் அன்னை மரியாவிடம் நேரடியாகவும், அவர் வழியாக அவருடைய மகன் இயேசுவிடமும் செல்வோம். இறைமகன் இயேசுவுக்கு தாயாரக இருந்தது போல, நமக்கும் தாயாக இருந்து நம் வாழ்க்கைப் பயணத்தில் வழித்துணையாக நம்மோடு அவர் நடந்து வருவார். அமல உற்பவ அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட புதுமைப் பதக்கத்தில் (Miraculous Medal) நாம் வாசிக்கின்ற “பாவமின்றி உற்பவித்த ஓ மரியாவே, உம்மைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்” என்ற ஜெபத்தை சொல்லி அன்னை மரியாவிடம் மன்றாடுவோம்.

இறைவேண்டல்:

கன்னி மரியாவே, இறைவனின் அன்னையே! அன்று கடவுளின் கட்டளைக்கு நீர் சம்மதம் தெரிவித்ததற்காகவும், இன்று எங்கள் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காகவும் நன்றியோடு உம் முன்னே நாங்கள் வருகின்றோம். வானதூதர்கள் மற்றும் புனிதர் அனைவரோடும் சேர்ந்து விண்ணக வாழ்வின் நிறைவில் நாங்களும் பங்கு பெறுவதற்காக உம் மகன் இயேசுவிடம் எங்களைக் கூட்டிச் செல்வீராக! ஆமென்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி