தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 7 : திருவருகைக் காலம் முதல் வாரம் - வியாழக்கிழமை
ஆண்டவர் என் கோட்டை

வாசகங்கள்:

எசாயா 26:1-6; மத்தேயு 7:21, 24-27

அருள்மொழி:

ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்; ஏனெனில், ஆண்டவர் என்றுமுள கற்பாறை! (எசாயா 26:4)

சிந்தனை:

இரண்டு வேறுபட்ட காட்சிகளை இன்றைய விவிலிய வாசகங்கள் நம் கண்முன்னே வைக்கின்றன… எசாயா கூறுகின்ற “என்றுமுள கற்பாறையான ஆண்டவர்” என்பது ஒன்று; மத்தேயு நற்செய்தியில் இயேசு காட்டுகின்ற “மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலி”. என்பது மற்றொன்று. இந்த இரண்டில் எந்தவொரு நிலைக்குப் பொருத்தமானதாக நம் வாழ்க்கை இருக்கிறது? இந்த இரண்டு வேறுபட்ட நிலைகளில் ஏதாவது ஒன்றை நாம் தேர்ந்தெடுத்துள்ளோமா அல்லது இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றோமா? வளங்கள் நிறைந்த உயரமான மலைகளின் எழிலை ரசித்திருக்கிற நாம், மென்மையான கடற்கரை மணலிலும் காலாற நடந்திருக்கிறோம். எனவே, மலைப்பகுதிகளின் வலிமையும், கடற்கரை மணலின் மிருதுதன்மையும் நாம் அறிந்ததே. கடற்கரை மணலைக் கொண்டு நம் குழந்தைகள் கட்டி விளையாடுகின்ற சிறிய மணல் வீடுகளும், கோட்டைகளும், புரண்டோடி வருகின்ற கடல் அலைகளின் மோதலில் இடிந்து விழுந்து சற்று நேரத்தில் காணாமல் போவதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.

ஆகவே, நமது வாழ்க்கை நேறிகளை அமைத்துக்கொள்வதில் நாம் கவனக்குறைவோடு இருந்தால், பொருளாசை, அதிகார வலிமை, பொறாமை, பேராசை மற்றும் ஏமாற்றம் ஆகியவற்றின் போராட்டத்தில் நம் வாழ்க்கை நிலை சிதைவுண்டு, நாமும் மூழ்கிப் போவதற்கான வாய்ப்பும் ஏற்படலாம். “நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்” என்று இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்கிறார். அவருடைய வார்த்தைகலைக் கேட்கின்ற நாம் என்ன செய்யப் போகிறோம்? நமது வீட்டை எங்கேக் கட்டப் போகிறோம்? சிந்திப்போம்.

இறைவேண்டல்:

விண்ணகத் தந்தையே, எளிமையாகத் தெரிகின்ற உலகைச் சார்ந்த வழிகளிலிருந்து விலகி, வலிமையான உம்முடைய வாக்குறுதி, மாறாத உமது அன்பு மற்றும் இரக்கத்தின் அடிப்படையில் எங்கள் எதிர்கால வாழ்வை கட்டியெழுப்பிட திடமனதையும், உமது அருளையும் எங்களுக்குத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி