தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 6 : திருவருகைக் காலம் முதல் வாரம் - புதன்கிழமை
வாழ்க்கைப் பயணத்தில் நலமருளும் உணவு

வாசகங்கள்:

எசாயா 25: 6-10; மத்தேயு 15:29-37

அருள்மொழி:

“நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்” (மத்தேயு 15:32)

சிந்தனை:

திருநற்கருணை என்னும் ஆன்மீக உணவின் உன்னதம் நாம் அறிந்ததே. ஆயினும், சில சமயங்களில் நமது உள்மனதில் எதிர்மறை உணர்வுகளால் எழுகின்ற தடைகளின் காரணமாக நற்கருணை உட்கொள்வதை நாம் தவிர்க்கிறோம். இதன் விளைவாக நமது குடும்பத்தில் கணவன்-மனைவிக்கு இடையே அல்லது நம் பிள்ளைகளோடு வாக்குவாதம் கூட ஏற்படுகிறது. நம் வாழ்வில் ஏமாற்றம் அளிக்கின்ற சில நிகழ்வுகளினால், கடவுளின் மீதே நமக்குக் கோபம் உண்டாவதால், “கிறிஸ்தவ நெறியில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம்” என்று வருந்துகிறோம் அல்லது “பயனற்ற ஒன்றை தவிர்ப்பது தவறல்ல” என்றொரு மதிமயக்கநிலைக்கு ஆளாகிறோம்.

“நான் இம்மக்கள் மீது பரிவு கொள்கிறேன்” என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு சொல்வது மலையடிவாரத்தில் பசியோடு அவரைப் பின்பற்றி வந்த மக்கள் கூட்டத்திற்கு மட்டுமல்ல; நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட சிக்கல்களால் மன உளைச்சலில் வருந்துகின்ற நமக்காவும் தான். சலிப்படைந்து, சோர்வுற்றிருக்கும் நம் மனநிலையை இயேசு அறிந்திருக்கிறார். துயருற்ற அல்லது நம்பிக்கை இழந்த நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிற இயேசு, நமது மனக்குறையை நீக்கி நம்மை வலுப்படுத்தவே திருநற்கருணையின் வடிவில் எந்நாளும் நம்மோடு இருக்கிறார்; உணவாகத் தன்னையே நமக்குத் தருகிறார்.

எனவே, இயேசு தருகின்ற திரூணவை பெறுவதற்கு தேவையான முறையில் தயாரித்துக் கொண்டு, நம்மையே தகுதியாக்கிக் கொள்வோம். ஏனெனில், இயேசு தருகின்ற உணவைப் பெறாமல் தவிர்க்கின்ற நேரங்களில் நமது மண்ணுலக வாழ்வின் பயணத்திலும், ஆன்மீக வாழ்விலும் நாம் தளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆகவே, தன்னையே முழுமையாக இயேசு தருகின்ற திரூணவை தவிர்க்காமல் தகுதியோடு உட்கொள்வோம்.

இறைவேண்டல்:

அன்பு தெய்வமே, இயேசுவே! உமக்கு நன்றி கூறுகிறோம். வாழ்க்கைப் பயணத்தில் இறையருளால் வளம் பெறுவதற்காக உமது திரூடலையே உணவாகத் தந்து எங்களைப் பாதுகாக்கின்றீர். ஆண்டவரே, நீர் அளிக்கின்ற பெருங்கொடையான திருநற்கருணையைப் உட்கொள்வதற்கு நாங்கள் எல்லா நேரங்களிலும் தகுதியோடு இருப்பதில்லை. இயேசுவே, எங்களை மன்னித்து ஏற்றுக் கொண்டு, உமது திரூணவை உட்கொள்ளவும், அதன் பயனாய் நாங்கள் வலிமை அடையவும் வரம் தந்தருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி