தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 5 : திருவருகைக் காலம் முதல் வாரம் - செவ்வாய்க்கிழமை
மாபெரும் மாற்றத்தை உருவாக்குதல்

வாசகங்கள்:

எசாயா 11: 1-10; லூக்கா 10:21-24

அருள்மொழி:

என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை; கேடு விளைவிப்பார் யாருமில்லை; ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும். (எசாயா 11:9)

சிந்தனை:

கடற்கரையில் நின்று கொண்டு கண்கொட்டாமல் அலையாடும் கடலை பார்க்கின்ற போது, மனித புரிதலுக்கு அப்பாற்ப்பட்ட எல்லையற்ற நீர்பரப்பு நம் கண் முன் தெரிவதை நாம் காணமுடியும். அத்தகைய எல்லையற்ற நீர்த்திரளும், முடிவில்லாத ஆகாயமும் எங்கோ தொலைதூரத்தில் ஒன்றிணைவதைக் காணும் போது, நம்முடைய சிறுமையும், கடவுளின் அளவற்ற மகத்துவமும் நமக்குப் புலனாகின்றன. இதனால் தான் இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற “தண்ணீரால் கடல் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்” என்னும் வரிகளை கேட்கும் போது நம் உள்ளம் வியப்பில் ஆழ்கிறது.

நம்முடைய மனித அறிவுக்கு எட்டிய வகையிலும், முரண்பட்ட மத-அரசியல் கருத்துகளுக்கும் கட்டுப்பட்டதாகக் கடவுளைக் குறித்த நமது புரிதல் ஒரு வரையறைக்குள் அடங்கியுள்ளது. அதற்கேற்ப, நமது உள்ளமும் பதற்றம், மனஉளைச்சல், கோபம் மற்றும் தவறான எண்ணங்களுக்கு ஆட்பட்டு நிற்கிறது. மாறாக, எல்லையில்லாத வகையில் தண்ணீரால் கடல் பரந்து விரிந்திருப்பது போல, அளவற்ற இறைஞானத்தால் இவ்வுலகம் நிறைந்திருப்பதாக கற்பனை செய்யும் போது, நாம் வாழ்கின்ற இந்த உலகம் வியப்பு மிக்கதாகவும், முற்றிலும் மாறுபட்டு அற்புதமானதாகவும் நமக்குத் தோன்றுகிறது. நமது மனமும் அன்பு, இரக்கம், ஒற்றுமை ஆகியப் நற்பண்புகளால் நிறைவு பெறுகிறது.

நம் அன்றாட வாழ்வில் நாம் எதிகொள்கின்ற சிக்கல்களும், பிரச்சினைகளும் நமது கண்களை மறைக்கும் அளவுக்கு பெரிதாகத் தெரிகின்ற நிலையை அகற்றி, தெளிவு தருகின்ற மாபெரும் மாற்றத்தை எவ்வாறு உருவாக்க முடியும்? கொல்கத்தா நகர் புனித அன்னை தெரேசா கூறுகிறார்: “நம்மைச் சுற்றியிருக்கின்ற, முக்கியமாக நமது இல்லத்திலும் உறவுகளிலும், ஏழ்மை நிலையில், ஆதரவற்ற வகையில் இருக்கின்ற சொந்தங்களைக் கண்டுணர்ந்து, அவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்திட முனைந்திடுவோம். அந்த இடத்தில் அன்பும், இரக்கமும் நம்முள் ஆரம்பிக்கட்டும். அத்தகைய நற்செயல்களே நம் உறவுகளுக்கு நாம் வழங்குகின்ற நற்செய்தியாக அமையட்டும்”

இறைவேண்டல்:

எங்களைப் படைத்தவரே, இறைவா! எங்களைச் சுற்றியிருக்கின்ற உம்முடைய படைப்பின் அற்புதங்களைக் கண்டு, உமது அளவற்ற பேரன்பின் மேன்மையை உணர்ந்து கொள்கிறோம். எங்கள் வாழ்க்கை முறைகளின் வழியாக சான்று பகர்ந்து, உமது பேரன்பை பிறரோடு பகிர்ந்து கொள்ளவும், அதன் பயனாக நாங்கள் எதிர்கொள்கின்ற ஏதாவது ஒருவரின் வாழ்வில் பெரும் மாற்றத்தை உருவாக்கவும் துணிவையும், மனதிடனையும் எங்களுக்குத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி