தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 25 : கிறிஸ்துப் பிறப்பு பெருவிழா
இருளினின்று தோன்றிய வியத்தகு ஒளி

வாசகங்கள்:

நள்ளிரவுத் திருப்பலி: எசாயா 9:2-4, 6-7; தீத்து 2:11-14, லூக்கா 2:1-14
பகல் திருப்பலி : எசாயா 52:7-10; எபிரேயர் 1:1-6; யோவான் 1:1-18

அருள்மொழி:

"அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்" (யோவான் 1:17-18)

சிந்தனை:

இன்றைய குளிர்கால இரவு, தன்னை மூடியிருக்கின்ற இருளை விலக்கிக் கொள்கிறது. இயல்பாக நிகழ முடியாத வகையில், நம்பமுடியாத இடத்தில் மனிதனாக உருவெடுத்து இம்மண்ணிலே தோன்றிய நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஒளி, உலகில் உள்ள எல்லாவற்றிலும் பெருஞ்சுடராக ஒளிவீசி, நமது வாழ்வில் அன்பும், இரக்கமும், அருளும், உண்மையும் நிறைந்திட செய்கிறது. ஆச்சரியமான இந்த இறைவரவின் கொடை, மனிதகுலத்திற்கு ‘போகிறபோக்கில்’ கிடைத்த பயனில்லாத சின்னஞ்சிறிய பரிசு அல்ல; என்றோ ஒருஇரவில் நடந்து முடிந்த ஒரு சாதாரண நிகழ்வின் நினைவை நாம் கொண்டாடவேண்டிய ஒரு பழங்கதையுமல்ல. கடவுளுடைய மனித அவதாரத்தின் விளைவாக இவ்வுலகில் உள்ள எல்லாவற்றையும் மாற்றியமைத்து, இன்றைக்கும் நமது அன்றாட வாழ்வின் யதார்த்தமான உண்மையாக நிலைத்திருப்பதே, கிறிஸ்துவின் பிறப்பு.

மனிதகுலத்தினுடைய வரலாற்றின் காலஅளவீட்டைக் கணிக்கின்றபோது, கிறிஸ்துவின் பிறப்பு ஒரு திருப்புமுனையாகவும், சரித்திரத்தின் அச்சாணியாகவும், எல்லாக் காலநிலைகளிலும், உலகில் எல்லா இடங்களிலும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு அடிப்படை நிகழ்வாகவும் அமைகின்றது. கடவுள் தன் அன்புப்பெருக்கின் வெளிப்பாடாகத் தகுதியற்ற மனித குலத்தை அரவணைத்துக் கொண்ட நாள் இது. நாம் பரிமாறிக் கொள்கின்ற பரிசுகளும், பலகாரங்களும், அலங்காரத் தோரணங்களும், மாபெரும் சிறப்புமிக்க இந்த நாளின் மேன்மைக்கு எள்ளளவும் தகுதியானவை அல்ல. ஏனெனில், கடவுளின் அன்பு, நம் கீழ்மையைப் பொருட்படுத்தாத, நிபந்தனையற்ற, நிரந்தரமான அன்பாகும். இன்றைய இரவில் தான் இறையருளும், உண்மையும், அன்பும், இரக்கமும் மனிதவடிவில் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டன. கடவுள் தன் மாட்சியை ஆச்சரியமான வகையில் வெளிப்படுத்திய இந்த நாளில், பூவுலகும் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தது.

இறைமகன் இயேசுவின் பிறப்பினை திருவிழாவாகக் கொண்டாடுகின்ற இந்த நாளில், பரிசுகளையும், அன்பளிப்புகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு, உறவினர்களோடும், நண்பர்களோடும் இணைந்து விருந்துண்டு மகிழ்கின்ற வேளையில், இவையெல்லாவற்றிற்கும் நடுவில் கிறிஸ்துவை முதன்மையாக வைத்திடுவோம். விழாவுக்கான தயாரிப்பு வேலைகள் நம்மைச் சோர்வடையச் செய்யலாம்; குடும்பத்தினரிடையே எழுகின்ற கருத்து வேறுபாடுகள் நம்மைப் பதற்றம் அடையச் செய்யலாம்; நாம் வழங்கிய பரிசுகளுக்கு மெச்சத் தகுந்த முறையில் பாராட்டுகள் கிடைக்காது போகலாம் அல்லது நமது முன்னேற்பாடுகள் திட்டமிட்டபடி நடைபெறாமல் போகலாம் - இது போன்ற குழப்பமான நேரங்களில், பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருக்கின்ற குழந்தையிடம் திரும்பி வருவோம். ஆம், அன்றைய இரவிலும் அந்த இடத்தில் மனித மனங்களின் திட்டப்படி எதுவுமே நடக்கவில்லை. மாறாக, எல்லாமே இறைத்திட்டத்தின்படியே நடந்தன. கடவுளின் திட்டம் மட்டுமே சிறப்பானது, நிலையானது.

இறைவேண்டல்:

ஆண்டவரே! உமது மகனை எங்களுக்குக் கொடையாக அளிக்கத் திருவுளம் கொண்டு, இன்றைய நாளில் இவ்வுலகில் அவரைக் குழந்தையாகப் பிறக்கச் செய்தீர். இந்த மாபெரும் கொடைக்காக, இறைவா, உம்மைப் போற்றுகிறோம். ஆமென்

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி