தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 24 : திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு
சொந்த விருப்பம் விளைவிக்கும் சவால்கள்

வாசகங்கள்:

2 சாமுவேல் 7:1-5, 8-12, 14; உரோமையர் 16:25-27; லூக்கா 1:26-38

அருள்மொழி:

பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்”என்றார். (லூக்கா 1:38)

சிந்தனை:

விழிப்போடு காத்திருந்த காலம், அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. நாம் இத்தனை நாள்களாகச் சிந்தித்து வந்த நிகழ்வுகளுக்கெல்லாம் ஆரம்பமாக இருந்த தருணத்தை, இன்றைய நற்செய்தி நம் கண் முன்னே நிறுத்துகிறது. “உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று சொல்லி, கடவுளின் திட்டத்திற்கு மரியா சம்மதம் தெரிவித்தது தான் அந்தத் தருணம். நாம் கடந்த மூன்று வாரங்களாகச் சிந்தித்து வந்த கடவுளுடைய மீட்பு திட்டத்தின் பலநிலைகளையும் நம்மை மறுபரிசீலனை செய்ய வைத்து, மனித உடலெடுத்து இந்த உலகிற்கு வருவதற்கான கடவுளின் முடிவை நமக்கு இன்றைய நற்செய்தி நினைவூட்டுகிறது. சிந்தனைக்கெட்டாத இந்த மாபெரும் இறைத்திட்டத்தை நிறைவேற்றித் தருவதற்கான வேண்டுகோளை, தன் சொந்த விருப்பத்தோடு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று முடிவெடுக்குமாறு ஒரு இளம்பெண்ணின் கையில் கடவுள் கொடுக்கிறார்.

இந்த ‘சொந்த விருப்பம்’ என்னும் ஒரு அரும்பண்பு நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, மரியாவுக்குத் தரப்பட்டது போல, தேர்வு செய்யும் உரிமையும், வாய்ப்புகள் பலவும், கூடவே வாழ்க்கை வழியில் இடையூறுகளும் நமக்கும் உள்ளன. நாம் நம்பிக்கை வைத்து முன்னேறிச் செல்லலாம்; அல்லது மறுத்து ஒதுக்கிவிட்டு, அச்சத்தோடு முடங்கிவிடலாம். கடவுளின் வார்த்தைகளுக்குச் சம்மதம் சொல்வதா வேண்டாமா என்று யோசிக்கும்போது, நாம் சில தவறுகளைச் செய்ய நேருகிறது. அத்தகைய நேரங்களில், கடவுளின் வார்த்தையில் நமக்குச் சந்தேகமே வரக்கூடாதென்றும், இயல்பாக எழக்கூடிய கேள்விகளுக்கு விளக்கம் கேட்கக்கூடாதென்றும் நாம் எண்ணுகிறோம். மனதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்காமல் சம்மதம் சொல்ல வேண்டும் என்று கடவுள் எதிர்பார்ப்பதில்லை. “இது எப்படி நிகழும்?" என்று மரியாவும் தன் மனதில் எழந்த சந்தேகத்தை நேரிடையாகவே கேட்டார். கடவுள் எதிர்பார்ப்பது நம்பிக்கையே. அதனால் தான் வானதூதர், ‘அஞ்ச வேண்டாம்’ என்று சொல்கிறார்.

நம் திருஅவையின் புனிதர்கள், இறையடியார்கள் பலரும், கடவுள் உறவிலிருந்து துண்டிக்கப்பட்டவராக, கடவுளால் கைவிடப்பட்டவராக, நம்பிக்கை என்னும் ஒளியை இழந்தவராக உணர்ந்திருக்கிறார்கள். ஆயினும், அவர்களெல்லாம் தங்கள் ஊழியத்தின் வழியாகவும், ஜெபவாழ்வின் வழியாகவும் கடவுளின் வார்த்தைக்குத் தொடர்ந்து தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தார்கள். அவர்கள் இதயத்தில் பற்பல கேள்விகள் இருந்தாலும், கடவுளின் அழைப்புக்கு ஏற்றவாறு தங்கள் பணிகளைச் செவ்வனே செய்தார்கள். ஆனால், அது எளிமையான பாதையல்ல என்றாலும், ஆறுதலும், அன்பும் தந்தது. நமது மனதிற்குகந்த புனிதர்களுக்குக் கிடைத்த நற்பலன்கள் நமக்கும் கிடைக்கும் என்பதே நம்பிக்கை. கடவுள்மீது நம்பிக்கை வைத்து, அவரது வழிகாட்டலுக்கு சம்மதம் சொல்லுவோம்.

இறைவேண்டல்:

தூய ஆவியாரே! நம்பிக்கை என்னும் இறையருளால் எங்கள் இதயங்களை நிரப்பும். எங்கள் மனதை மூடியிருக்கின்ற இருளை அகற்றியருளும். இறைவனின் அழைப்பிற்கு செவிமடுக்கவும், அதற்குச் சீரிய வகையில் பதிலளிக்கவும் உமது அருளை பொழிந்தருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி