
தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி
டிசம்பர் 23 : திருவருகைக் காலம் மூன்றாம் வாரம் - சனிக்கிழமை
அச்சத்தின் விளைவான வீண்பேச்சுக்களைத் தவிர்ப்போம்
வாசகங்கள்:
மலாக்கி 3:1-4, 4:5-6 லூக்கா 1:57-66
அருள்மொழி:
"சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது". (லூக்கா 1:65)
சிந்தனை:
இன்றைய வாசகங்களில் இன்னும் பல அதிசயமான அடையாளங்களையும், வியத்தகு நிகழ்வுகளையும் நாம் காண்கிறோம். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட முதிர்ந்த வயதினரான எலிசபெத், திருமுழுக்கு யோவானெனப் பெயரிடப்பட்ட மகனைப் பெற்றெடுக்கிறார். பல நாள்களாகப் பேச்சற்றவராக இருந்த செக்காரியா கடவுளைப் போற்றிப் புகழ்கின்றார். சுற்றியிருந்தோர் மகிழ்ந்து கொண்டாடுகின்ற இந்த நேரத்தில், இந்நிகழ்வுகளைக் கேள்விப்பட்ட வேறு சிலர், உள்மனதில் அச்சம் கொண்டு, “இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?” என்று மறைவாகத் தங்களுக்குள் விவாதிக்கிறார்கள். அச்சமும், குழப்பமும் உண்டாகும் செய்திகள் பரவும்போது, ஆங்காங்கே மக்கள் ஒன்றுகூடி அந்தச் செய்திகளைக் குறித்தத் தத்தம் கருத்துக்களை பரிமாறிக் கொள்வது வழக்கமே அல்லவா? இது போன்ற விவாதங்களை நாம் ‘வதந்தி’ அல்லது ‘ஊர்வம்பு’ என்று நாம் சொல்கிறோம். இது போன்ற வியப்பான நிகழ்ச்சிகளுக்கு என்ன அர்த்தம்? இத்தகைய ஆச்சரியமான அடையாளங்களை வெளிப்படுத்தற்கும், கடவுளின் ஆசீரை பெறுவதற்கும் இவர்கள் யார்?
பொறாமையும், ஆணவமும் மனதில் அச்சத்தைத் தூண்டிவிடுகின்றன. யோசேப்புவும் மரியாவும் கைக்குழந்தையோடு எகிப்து நாட்டிற்கு செல்வது, ஏரோது அரசனின் தவறைத் தட்டிக் கேட்டதற்காகத் திருமுழுக்கு யோவான் தலை வெட்டப்படுவது - இவையெல்லாம் கூடப் பொறாமையால் தூண்டப்பட்டு பின்னாளில் நடைபெற்ற சம்பவங்கள் தான். இதைப் போன்று எத்தனை நிகழ்வுகளை நம் அன்றாட வாழ்வில் காணுகிறோம்? புதிதாகப் பணியில் அமர்த்தப்பட்ட ஒரு ஊழியரைப் பற்றி வம்பு பேசுவது, மணவாழ்வில் சிக்கல் ஏற்பட்டு ப்ரிந்திருக்கும் தம்பதியரை குறித்து, வெளிப்படையாக ஆதரவாகப் பேசினாலும், தனிப்பட்ட முறையில் புறணி பேசுவது, பள்ளியில் தண்டனை பெற்ற சிறுகுழந்தை, என்ன தவறு செய்தது என்றுதெரியா விட்டாலும், மற்ற பெற்றோர் மறைமுகமாக வதந்திகளைப் பரப்புவது - இவையெல்லாம் ஒரு சில எடுத்துக்காட்டுகள் தான். ஆயினும், இத்தகைய அவதூறுகள் எல்லாம் பொறாமையால் தூண்டப்படுகின்ற செயல்கள் அல்லவா?
தனது மறையுரை ஒன்றில் திருத்தந்தை பிரான்ஸிஸ் கூறுகிறார்: “வதந்திகளைப் பரப்புவதைப் போன்ற வீண்பேச்சுக்களை வழக்கமாகக் கொண்டிருப்பது மிகவும் கொடுமையான ஒன்று. முதலில் இந்தப் பழக்கம் சுகமானதாகவும், போகப் போக ருசியான இனிப்பைச் சுவைப்பதைப் போல மனதிற்கு மகிழ்ச்சி தருவதாகவும் தெரிகிறது. ஆனால், இறுதியில் இதயத்தைக் கசப்புணர்வினால் நிறைத்து, நம்முள் நஞ்சை விதைக்கிறது. நாம் ஒவ்வொருவரும் இது போன்ற அவதூறு பரப்புகின்ற வீண்பேச்சுக்களை தவிர்த்து விட முடிவு செய்தோமென்றால், அதன் பயனாக நாமெல்லாம் புனிதர்நிலைக்கு உயர முடியும் என்று நம்புகிறேன்”.
இறைவேண்டல்:
இரக்கத்தின் ஊற்றான இறைவா! நாங்கள் பேசுகின்ற வார்த்தைகளில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்கவும், உண்மையானதையும், அவசியமானதையும், அன்பானதயும் மட்டுமே பேசவும் எங்களுக்கு உதவி செய்தருளும். ஆமென்.
அன்பின்மடல் முகப்பு
உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி