தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 22 : திருவருகைக் காலம் மூன்றாம் வாரம் - வெள்ளிக்கிழமை
இரக்கமும் அறச்செயல்களும் மனதில் பெருகட்டும்

வாசகங்கள்:

1 சாமுவேல் 1:24-28 லூக்கா 1:46-56

அருள்மொழி:

"வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்". (லூக்கா 1:52)

சிந்தனை:

நம் வாழ்வில் ஆச்சரியங்களை வியத்தகு முறையில் தருகின்றவர், நம் கடவுள். இன்றைய வாசகங்களில் இந்தக் கருத்தினை கேட்கும்போது, நமது மனம் கலக்கமடையலாம். "செருக்குற்றோரைச் சிதறடிக்கிகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிகிறார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்புகிறார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்". இந்த வார்த்தைகள் நம் மனதில் பதற்றத்தை உண்டாக்கி, சிந்திக்கத் தூண்டுகின்றன. இதில் நாம் எந்தப் பிரிவினராக இருப்போம்? தூக்கி எறியப்படுவோமா? அல்லது உயர்த்தப்படுவோமா?

நம்மில் பலரும் மேலான ஆசீரோடு வாழ்கிறோம் என்பது நிச்சயம் உண்மை. நல்ல வீடு, அன்றாட உணவு, மாற்றிக்கொள்ள ஆடைகள், போக்குவரத்துக்கு வாகனங்கள் - இப்படி தேவையான அடிப்படை வசதிகள் தடையின்றி நமக்குக் கிடைக்கின்றன. சில நேரங்களில், ஏமாற்றமும், அச்சமும் நம் வாழ்க்கை நிலையைச் சீரழிக்கின்றன என்பதும் உண்மைதான். பெரும்பாலும் நமது வாழ்க்கை மனநிறைவோடு நகர்ந்தாலும், இடைஇடையே முணுமுணுப்பும் கூடவே உடன் வருகிறது.

கொல்கத்தா நகரத்தில் சில நாள்கள் தங்கியிருந்த ஜெஃப்ரி புருனோ என்ற நற்செய்தியாளர் தனது இணையதளத்தில் கூறுகிறார்: நான் கொல்கத்தாவிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்தபிறகு, பல நாள்களாகத் தூங்கமுடியாமல் சிரமப்பட்டேன். அந்த நகரத்தில் வீதியோரங்களில், சேறும், குப்பையும், மனிதக் கழிவுகளும் கலந்து ஆங்காங்கே தேங்கி நிற்கின்ற சாக்கடை நீரில், குழந்தைகளைக் குளிக்க வைப்பதை கண்டக் காட்சி, இரவு நேரத்தில் மனதை அச்சுறுத்தும் பயங்கர கனவுகள், என்னைத் தூங்கவிடாமல் பயமுறுத்தின. அத்தகைய மாசு அடர்ந்த இடத்தில், கவனிப்பாரற்று கிடந்த குழந்தைகளுக்கும், ஒதுக்கப்பட்டு தெருவில் வீசப்பட்ட தொழுநோயாளர்கள்-முதியவர்களுக்கும் அன்னை தெரேசா உதவி செய்ய முன்வந்த செயல் ஒரு மாபெரும் அதிசயம் ஆகும்.

இது போன்ற அருவருப்பான இடங்களில் பணியாற்றுவதற்காக நம்மில் சிலர் அழைக்கப்படலாம். ஆனால், அந்த இடங்களில் இன்றைக்கும் பெருகியிருக்கின்ற ஏழ்மைநிலையையும், மனவேதனைகளையும் நாம் எல்லோருமே அறிந்திருக்க வேண்டும். இதைப் போன்ற ‘தாழ்நிலைகள்’ ஏதோ ஒரு இடத்தில் மட்டுமல்ல; உலகில் எல்லா இடங்களிலும், ஏன், நாம் வாழ்கின்ற இடத்திற்கு அருகிலும் கூடக் காணக்கிடக்கின்றன. அத்தகைய இடங்களில் கீழிறங்கி, உடலுழைப்பைத் தந்து சேவை செய்வதென்பது எல்லோராலும் செய்யமுடிவதில்லை. ஆயினும், நமது கருணைக் கொடைகளாலும், ஜெபங்களாலும் துணைநிற்கும்போது நாம் நிறைவான இறையாசீரை பெறுகிறோ என்பது உறுதி.

இறைவேண்டல்:

இயேசுவே! எங்களைச் சுற்றிலும் இருக்கின்ற ஏழ்மையை, வேதனைகளைப் பார்த்து இரக்கம் கொள்கின்ற வகையில் எங்கள் கண்களைத் திறந்தருளும். எங்கள் ஜெபத்தினாலும், ஆறுதல் வார்த்தைகளாலும், அன்புச் செயல்களாலும், தாழ்நிலையிலிருப்போரை உயர்த்திட எங்களுக்கு வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி