தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 4 : திருவருகைக் காலம் முதல் வாரம் - திங்கள்கிழமை
குணமாக்கும் இறையன்பு

வாசகங்கள்:

எசாயா 2:1-5; மத்தேயு 8:5-11

அருள்மொழி:

நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்” என்றார் ( மத்தேயு 8:8)

சிந்தனை:

ஒரு அருள்பணியாளர் கூறியது: பல ஆண்டுகளுக்கு முன்னர், உரோமைத் திருப்பலி நூலில் திருஅவை சில மாற்றங்களை செய்தபோது, அதிலிருந்த பல புதிய மொழிபெயர்ப்பு வார்த்தைகளை புரிந்து கொள்ள நான் தடுமாறிக் கொண்டிருந்தேன். ஆனால், என்னவென்றியாமல் ஒரு நிகழ்வு நடந்தது. திருவிருந்துக்கு முன்னதாக நாம் சொல்லுகின்ற, “ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும்; என் ஆன்மா நலமடையும்” என்ற ஜெபத்தை நான் உச்சரிக்கும்போது, சட்டென விவிலியத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்ன நூற்றுவர் தலைவன் என் நினைவில் தோன்றினான். அந்த நூற்றுவர் தலைவன் இறைபற்று இல்லாதவன் என்றாலும், என்னைக் காட்டிலும் ஆழமான நம்பிக்கைக் கொண்டவனாகத் தெரிந்தான். இன்று வாசிக்கப்பட்ட நற்செய்தியில் நாம் கேட்ட இந்த வார்த்தைகள் என் நெஞ்சத்தை தொட்டன. இந்த வார்த்தைகளைக் கேட்கின்ற ஒவ்வொரு தடவையும், எத்தகைய ஆழ்ந்த நம்பிக்கையை நாம் கொண்டிருக்கவேண்டும் என்னும் நினைவு என்னுள் எழுந்தது. “இயேசுவிடமிருந்து வருகின்ற ஒரு வார்த்தை, என்னையும், உங்களையும், கேட்கின்ற எல்லாரையும் நலமாக்கும்” என்ற ஐயப்பாடு இல்லாத உறுதியான நம்பிக்கையே இது.

அன்றாடம் நாம் பங்கேற்கின்றத் திருப்பலியில், வார்த்தைகளை விட மேன்மையான இயேசுவின் திருஉடல் நமக்கு உணவாக வழங்கப்படுகிறது. இயேசுவின் பிறப்பு விழாவுக்கான இந்த தயாரிப்பு நேரத்தில், அவருடைய இறப்பினாலேயே நாம் மீட்படைந்தோம் என்னும் கருத்து மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டப்படுகிறது. இந்த கருத்து முரண்பாடுகளை உள்ளடக்கிய நம்பிக்கையாகவும், பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு கொடையாகவும் அமைந்துள்ளது. நம் வாழ்வில் எந்தவொரு நிலையில் நாம் இருந்தாலும், அந்த நூற்றுவர் தலைவனைப் போல நாமும் நம்பிக்கையோடு அவரிடம் செல்லும்போது, முற்றிலும் மாற்றியமைக்கின்ற நலமளிக்கும் இறையருளை இயேசு நமக்கு தருவார் என்பது உண்மையே.

இறைவேண்டல்:

இயேசுவே! உமது பிரசன்னத்தில் அமர்ந்து உம்மிடம் பேசவும், உம்முடைய மேலாடையின் ஓரத்தைத் தொட்டு நலம் பெறவும் எங்களுக்கு வரம் தாரும். வேறெந்த ஒரு தேவையையும் எதிர்பார்க்காமல், உம்மிடமிருந்து ஒரே ஒரு வார்த்தையை மட்டுமே வேண்டி நின்ற நூற்றுவர் தலைவனின் நம்பிக்கை எம்முள் வளர்ந்திட அருள் தாரும். எங்கள் இதயங்களைக் குணப்படுத்தி, எங்கள் நம்பிக்கை வளர்ந்திட செய்தருளும். ஆமென்,

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி