தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 20 : திருவருகைக் காலம் மூன்றாம் வாரம் - புதன்கிழமை
ஒரு அடையாளம் தோன்றிடச் செய்தருளும்!

வாசகங்கள்:

எசாயா 7; 10-14, லூக்கா 1:26-38

அருள்மொழி:

"மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?" (எசாயா 7:13)

சிந்தனை:

நண்பர் ஒருவர் கூறிய நிகழ்ச்சி: “சில ஆண்டுகளுக்கு முன்னர், குளிர் காலலத்தில் ஒரு பௌர்ணமி இரவில் சந்திர கிரகணம் நடப்பதாகச் சமயம். குளிருக்கு பாதுகாப்பாகக் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு, வீட்டுக்கு வெளியே வந்து, கண்ணுக்கு விருந்தாகக்கூடிய விந்தைமிகு காட்சி ஒன்றைக் காணப்போகும் ஆவலுடன் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெகுநேரமாகியும் வானத்தில் எதுவும் தெரியவில்லை. வெண்மையும், கறுப்பும் கலந்து நகர்ந்து கொண்டிருந்த அடர்த்தியான மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருந்த நிலவைக் பார்க்கக்கூட முடியவில்லை. முழுநிலவு வானத்தில் இருந்தாலும், ‘சந்திர கிரகணம்’ என்றவொரு அபூர்வ இயற்கை நிகழ்வு உண்மையிலேயே நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், கண்ணால் பார்க்க முடியாவண்ணம் அது மறைக்கப்பட்டிருந்தது”.

இதைப் போலவே, நமது ஆன்மீக வாழ்விலும் சில சம்பவங்கள் நடக்கின்றன. கடவுளின் உடனிருப்பை அல்லது நம் வாழ்க்கையில் ஒரு அற்புதத்தை அவர் நிகழ்த்துகின்ற வாய்ப்பைக் காண வேண்டும் என்று எத்தனை ஆர்வத்தோடு காத்திருந்தாலும், அது நடைபெறுவதில்லை. "ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்”என்று இன்றைய வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா கூறுவதைப் போல, நமது வாழ்விலும் இதைப் போன்றதொரு அடையாளம் கிடைப்பது நல்லதென நாம் நினைக்கிறோம்.

ஆனால், மிக மிகக் குறைவாகவும், அபூர்வமாகவுமே இது போன்ற இறைஅடையாளங்கள் நம் வாழ்வில் நிகழ்கின்றன. சில நேரங்களில், நமது கவனத்தைக் கவராத விதமாக அல்லது நாம் எதிர்பாராத வகையில் மிக நுட்பமாகப் புதுமையான நிகழ்வு நடப்பதுண்டு. எந்தவிதமான தூண்டுதலும் இல்லாமல், சட்டென அத்தகைய சாதாரண நிகழ்வில் உள்ள அற்புதத்தைக் காணும்போது நாம் வியப்படைகிறோம். இத்தகைய சம்பவங்கள் சோர்வுற்றிருக்கின்ற நம் மனதில் ஒளியேற்றி, ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை எதிர்பார்த்து காத்திருக்காமல், நாமே நல்லதொரு அடையாளமாக மாற வேண்டும் என்னும் கருத்தை நமக்கு நினைவூட்டுகின்றன…

இறைவேண்டல்:

கருணைக் கடலான இறைவா! அவ்வப்போது உம்மை நோக்கி நாங்கள் செய்கின்ற ஜெபங்களின் வழியாக எங்களை மீண்டும் மீண்டும் உமதருகில் வரசெய்கின்ற உமது அருளுக்காக நன்றி சொல்கிறோம். நீர் செய்கின்ற அருஞ்செயல்களின் அடையாளத்தை நாங்கள் காணத் தவறினாலும், எங்கள் வாழ்வில் நற்செயல்களை புரிகின்ற உம்முடைய அருள்கரத்தின் உடனிருப்பை நாங்கள் அறிந்துகொள்ளும் வரத்தை எங்களுக்குத் தந்தருளும். அன்னை மரியா உரைத்ததைப் போல, உமது தூண்டுதலுக்கு ‘ஆகட்டும்’ என்று சம்மதம் தெரிவிக்கின்ற துணிச்சலை எங்களுக்குத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி