தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 19 : திருவருகைக் காலம் மூன்றாம் வாரம் - செவ்வாய்க்கிழமை
நன்னெறி நடத்தும் வானதூதர்கள்

வாசகங்கள்:

நீதித் தலைவர்கள் 13:2-7, 24-25; லூக்கா 1:5-25

அருள்மொழி:

“நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன்" (லூக்கா 1:19)

சிந்தனை:

இன்றையத் திருப்பலி வாசகங்கள் இரண்டிலும் இடம் பெறுகின்ற வானதூதர்கள்பற்றிய செய்தி, 1988-ஆம் ஆண்டு வெளியான ““Wings of Desire” ” என்னும் திரைப்படத்தை எனக்கு நினைவூட்டியது. அதிலே வானதூதர்கள் போன்ற விண்ணுலகவாசிகள், தங்களுடைய உண்மையான உருவத்தோடு, எவருடைய கண்களுக்கும் புலப்படாதவண்ணம் இந்தப் பூமியில் உலவிக் கொண்டிருப்பதாகப் புனையப்பட்ட ஒரு கற்பனைக் கதை. ஆனால், நீதித்தலைவர்கள் நூலிலிருந்தும், புனித லூக்கா நற்செய்தியிலிருந்தும் இன்றைக்குத் தரப்பட்டுள்ள வாசகங்களில் வருகின்ற வானதூதர்கள் உண்மையானவர்களாகவும், ஆன்மீக வாழ்வில் மிக முக்கியமானவர்களாகவும் உள்ளார்கள். அவர்கள் கடவுளின் தூதுவர்களாகவும், மனித்ருக்கும், கடவுளுக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றத்திற்கு பாலமாகவும் செயல்படுவதைக் காண்கிறோம்.

இன்றைய காலக்கட்டத்தில், இறைவனின் விருப்பத்தையும், வார்த்தைகளையும் சுமந்துகொண்டு, இறக்கைகளோ, இசைக்கருவிகளோ இல்லாத தேவதூதர்கள் நம்மிடையே வலம்வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குப் புலப்படுவதில்லை. நடக்க இயலாதவற்றை கடவுளின் அன்பாலும், ஆற்றலாலும் சாத்தியமாகுகின்ற வானதூதர்களை இன்றைய வாசகங்கள் நமக்குக் காட்டுகின்றன. எனவே, திருவருகைக் காலத்தில் பயணம் செய்துகொண்டிருக்கின்ற இவ்வேளையில், தூதுவர்களின் வழியாக நம்மைத் தேடி வருகின்ற கடவுளின் பிரசன்னத்தைக் கண்டுணர்வதற்கு விழிப்பாயிருப்போம். தவறான வழியில் செல்லும் நம்மையும் நாடி வருகின்ற இறைத்தூதர்களை வரவேற்க தயாராக இருப்போம்.

இறைவேண்டல்:

கடவுளின் திருமுன் நிற்கின்ற வானதூதர்களே! எங்கள் அன்பான காவல் தூதர்களே! எங்கள் மண்ணுலக வாழ்வுப் பாதையின் ஏற்ற இறக்கங்களில் தளர்ந்து தடுமாறுகின்ற எங்களோடு நடந்து வாருங்கள். எங்களுக்குச் சோதனைகளாக அமைகின்ற அன்றாட நிகழ்வுகளின்போது, எங்கள் கண்களுக்குப் புலப்படாத வகையில் நீங்கள் எங்கள் அருகிலே நிற்கிறீர்கள் எனபதை உணர்ந்து கொள்ள உதவி செய்வீர்களாக. ஆமென்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி