தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 18 : திருவருகைக் காலம் மூன்றாம் வாரம் - திங்கள்கிழமை நெறிபிறழ்ந்த வழிகள்… நேர்மையற்ற வாழ்வு…

வாசகங்கள்:

அருள்மொழி:

“யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்" (மத்தேயு 1:20)

சிந்தனை:

“அஞ்ச வேண்டாம்”… நம்பமுடியாத இன்னல்களால் ஒருவர் துயருறுகின்ற நேரங்களில், மீண்டும் மீண்டும் மறைநூலில் நாம் வாசிக்கின்ற ஒரு வார்த்தை தான், “அஞ்ச வேண்டாம்”. தனக்காக இல்லையென்றாலும், மரியாவுக்காக யோசேப்பு அச்சப்படுவதற்கான காரணங்கள் பல இருந்தன. ஆயினும், வானதூதர் ஒருவர் கனவிலே சொன்ன வார்த்தையை முன்னிட்டு, அக்காலத்தைச் சார்ந்த யூத ஆண்மகன் செய்யத் துணியாத ஒரு காரியத்தைச் செய்ய யோசேப்பு முடிவெடுக்கிறார். இன்றைய நற்செய்தியில் குறிப்பிடப்படுவதைப் போல, யோசேப்பு உண்மையாகவே ஒரு நேர்மையாளராக இருந்தார். அதனால் தான், கனவில் தான் உரைத்த செய்தியைப் பற்றுறுதியோடு யோசேப்பு நம்பி ஏற்றுக்கொள்ளச் செய்ய வானதூதரால் முடிந்தது. ஆம்! சாதாரண மனிதர்களைவிட மனதளவில் திடமான உறுதியும், வலிமையும் கொண்டவராக யோசேப்பு இருந்தார். அதனால் தான், மரியாவின் உதரத்தில் வளர்கின்ற குழந்தை தன்னுடைய குழந்தையல்ல என்பதைத் தெளிவாக அறிந்திருந்தும், அவளைத் தன் மனைவியாக ஏற்றுக்கொள்ள அவரால் முடிந்தது. எதிர்வரும் நாள்களில் என்ன நடக்கும் என்பதை யோசேப்பு அறிந்திருக்கவில்லை. ஆனாலும், கடவுள் தனக்கு வெளிப்படுத்துகின்ற நேரான வழியைக் கடைபிடித்தால், கடவுள் தன்னைக் கைவிடாமல், நிச்சயம் பாதுகாப்பார் என்பதை யோசேப்பு உறுதியாக நம்பினார்.

யோசேப்பு துணிவோடு எதிகொண்ட இது போன்ற சம்பவங்கள் நம் வாழ்வில் எத்தனையோ நடந்திருக்கும் அல்லவா? அந்நேரங்களில் நாம் கவலைப்பட்டு, மனக்கலக்கமடைந்து, குழம்பி நின்ற தருணங்கள் எத்தனை? ஒன்றுக்கும் உதவாத மிகச் சிறிய காரியமோ அல்லது உண்மையிலேயே நமக்குக் கவலைத் தருகின்ற பெரிய ஒரு சம்பவமோ - எந்தவொரு நிலையிலும் நமது மனாமைதியை ஒதுக்கி வைத்துவிட்டு, தேவைற்ற கலக்கமும், அச்சமும் அழுத்தும்படியான நிலக்கு நம்மை நாமே ஆட்படுத்திக் கொள்கிறோம். இத்தகைய கலக்கமும், அச்சமும் நம்முடைய வருத்தமுற்ற நிலைக்கு என்ன தீர்வைத் தருகின்றன? ஒருவகையில் பார்த்தால், இந்தக் கலக்கமும், அச்சமும் நமது குழப்பத்தைத் தீர்ப்பதை விடுத்து, இன்னும் பல புதுப்புது கவலைகளைத் தூண்டிவிடுகின்றன. நமது வாழ்க்கைப் பாதையில் சற்று பின்னோக்கிப் பார்த்தால், வலுவின்றி சறுக்கி விழுந்த பல நேரங்களில் கடவுளின் வலிமையான கரம் நம்மைத் தூக்கிப் பிடித்துக் காப்பாற்றி, நேரிய வழியில் நம்மை அழைத்துச் சென்றிருப்பதைக் காணலாம். இவ்வாறு, நெறிபிறழ்ந்த வழிகளிலிருந்து நம்மைக் காத்து நடத்திய கடவுளின் மேல் நம்பிக்கை வைப்பதை கடினமானதென்று நினைப்பது தவறல்லவா?

இறைவேண்டல்:

கடவுளின் வழிகாட்டுதல் மீது குறையாத நம்பிக்கைக் வைத்திருந்த புனித யோசேப்புவே! உம்முடைய வாழ்வில் நீர் கடைபிடித்த துணிவை, உறுதியை, மனவலிமையை நாங்களும் அடைந்திட எங்களுக்காகப் பரிந்துபேசுவீராக. சவால்களின் தாக்கத்தால் நாங்கள் நெறிபிறழ்கின்ற நேரத்தில், எங்களுக்குத் துணையாக எம்மோடு வருவீராக. ஆமென்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி