தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 17 : திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு
சிறியவற்றிலும் மேன்மை உண்டு

வாசகங்கள்:

எசாயா 61:1-2, 10-11; 1 தெசலோனிக்கர் 5:16-24 யோவான் 1:6-8, 19-28

அருள்மொழி:

"எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்". (1 தெச 5:16-17)

சிந்தனை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் புனித பவுல் தருகின்ற சில அறிவுரைகள், நம்பிக்கை ஊட்டுவனவாகத் தோன்றினாலும், கடைபிடிக்க முடியாதவையாகவே தெரிகின்றன. "எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்". ஆனால், ‘நல்லது நடக்கும்போது மகிழ்ச்சியாக இருப்போம்; நமக்குத் தேவை எழும்போது இறைவனிடம் வேண்டுவோம்’ என்பதே நிதர்சன உண்மையாக இருக்கிறது. எனவே, இதுபோலச் சவால் விடுக்கின்ற நடைமுறைகளை, தொடர் போராட்டங்கள் நிறைந்த நம்முடைய வாழ்க்கையோடு ஒருங்கிணைத்துச் செயலாற்றுவது எப்படி இயலும்? ஆம். இதைப் போன்ற ஐயப்பாடு நமக்கு உண்டாவது இயற்கையே. ஆனால், உண்மையிலேயே இது சிக்கல் இல்லாத எளிமையான ஒரு நடைமுறை தான். சவாலான இந்த அறிவுரையை நம் வாழ்வோடு இணைத்துக் கொள்ளவதற்கான அடிப்படைத் தேவை: நன்றியுணர்வு.

ஆன்மீக குருக்களும், சுயஉதவி அமைப்பின் ஆதரவாளர்களும் நன்றியுணர்வின் ஆற்றலையும், அவசியத்தையும் விளக்கிக் கூறுவதை நாம் கேட்டிருப்போம். நன்றியுணர்வோடு நாம் நடந்துகொள்ளும்போது, நமது செயல்பாடு சிறப்பாகக் காணலாம். நாம் நன்றி சொல்லவேண்டிய நிகழ்வுகள் நமது வாழ்க்கையில் எவ்வளவோ நடக்கின்றன. அவற்றையெல்லாம் அன்றாடம் பட்டியலிட்டுப் பார்த்தால், வாழ்க்கைப் பாதையில் நமது கவனம் சீரடைந்து, ஒவ்வொரு நொடியும் தொடர்ச்சியான இறைவேண்டலாக மாறுகிறது. அனுதினமும் நமக்குக் கிடைக்கின்ற இறைஆசீரை எண்ணிப் பார்க்கும்போது, நாம் மென்மேலும் நன்றி உடையவர்களாகிறோம். வாழும் ஒவ்வொரு நேரத்தையும் இறைவேண்டலுக்கு உகந்ததாக மாற்றுகிறோம். மளிகைக் கடைகள், மருத்துவமனைகள், போக்குவரத்து நெரிசல் - இங்கெல்லாம் தாமதம் ஏற்பட்டுக் காத்திருக்கும் நேரங்களை இறைவேண்டலுக்கான வாய்ப்புகளாகக் கையாளலாம். அதற்காக இது போன்ற சமயங்களில் ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ ‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ ஆகிய ஜெபங்கலை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை. இறைவேண்டலுக்கு அது ஒரு சரியான வழிமுறைதான். ஆனாலும், சலிப்பூட்டுகின்ற அன்றாட வாழ்வில் நடைபெறுகின்ற புதுமைகளைக் கண்டுணர்ந்து, அவற்றிக்காகக் கடவுளுக்கு நன்றி கூறுவது மிகப் பொருத்தமான இறைவேண்டலாகும்.

இறைவேண்டல்:

எல்லாம் வல்ல இறைவா! மாபெரும் உன்னதமானவர் நீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். உமது பேரன்பின் கருணையால் எங்களுக்கு நீர் வழங்கியிருக்கின்ற ஏராளமான நலங்களுக்காக, ஆசிகளுக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இடையறாத உம்முடைய அருள்நலனை உள்ளத்தில் உணரவும், அதற்காக மகிழ்ந்து நன்றி கூறவும் எங்களுக்கு வரம் தந்தருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி