தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 16 : திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் - சனிக்கிழமை
ஞானத்தோடு செயலாற்றுவோம்-செயல்முறைகள்.

வாசகங்கள்:

சீராக்கின் ஞானம் 48:1-4, 9-11, மத்தேயு 17:10-13

அருள்மொழி:

“எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே, மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்” (மத்தேயு 17:11, 12)

சிந்தனை:

இயேசு வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருந்தால், அவருடைய வார்த்தைகளைக் கேட்கின்ற மக்களுடைய உணர்வுகளையும், பேச்சுகளையும் கவனிக்கும்போது நாம் என்ன நினைத்திருப்போம் என்று கற்பனை செய்து பார்ப்போம். இயேசுவின் போதனைகளை நாமும் கேட்டிருந்தால், அவற்றின் சரியான, உண்மையானக் கருத்தைப் புரிந்துகொண்டிருப்போமா என்பது சந்தேகமே. இயேசுவை சூழந்து தொடர்ந்து வந்த கூட்டத்தைப் போலவே நாமும் திருமுழுக்கு யோவனில் எலியாவையும், இயேசுவில் மானிட மகனையும் அடையாளம் கண்டிருக்கமாட்டோம். அவருடைய வார்த்தைகளின் உட்பொருளைப் புரிந்து கொள்ளத் தவறியிருப்போம்.

இத்தகைய குறைபாடுள்ல மனநிலையில் நாம் என்ன செய்திருப்போம்? இயேசுவின் போதனைகளை, அவற்றின் உண்மையான உட்கருத்தை புரிந்து கொள்ளாமல், அவர் காட்டியப் பாதையில் நாமும் அவரைப் பின்தொடர்ந்து செல்வது சாத்தியமற்ற ஒன்றே. ஆனால், அவருடைய வார்த்தகைன் பொருளைப் புரிந்து கொள்ளாத இயலாத நிலையிலேயே இயேசு நம்மை விட்டுவிடவில்லை. நாமும் ஞானத்தில் செயலாற்றுவதற்கான நடைமுறை விதிகளை இயேசு நமக்குத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். "உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக; உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக; மிகச் சிறியோராகிய ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்; இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை" - இவ்வாறு இயேசு கொடுத்த கட்டளைகளே நமது நேரிய வாழ்வுக்கான அடிப்படை விதிமுறைகள் ஆகும்.

இதன்படி, நாம் எதிர்கொள்கின்ற எல்லோருள்ளும், நமது பகைவரிடத்திலும் கூட, கடவுளை நாம் காண வேண்டும்; வரையறை இல்லாமல் மன்னிக்கத் தயாராக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் துறந்து அவரைப் பின்பற்ற வேண்டும்; அவருக்காக நம் உயிரையும் இழக்க தயாராக இருக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயேசுவின் வார்த்தைகளை எவ்வாறு அணுகியிருப்போமோ, அதே மனநிலையில் தான் நாம் இன்றைக்கும் செயல்படுகிறொம் என்பது உண்மை. ஒருவர் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டுவதும், நமக்குத் தீங்கிழைப்போரையும் அன்பு செய்வதும் எளிதான செயல்கள் அல்ல. நமது அயலாரை வெறுத்து அவமானப்படுத்தாமல், அன்பு செய்யவேண்டியது எவ்வளவு முக்கியமானது என்னும் கருத்தையே இயேசு மேற்சொன்னவாறு எடுத்துரைக்கிறார்.

இறைவேண்டல்:

எல்லாவற்றையும் அறிந்தவரே, இறைவா! நாங்கள் வலுவற்றவர்களாகவும், அவ்வப்போது தடுமாற்றம் அடைந்து இடறி விழுபவர்களாகவும் இருக்கிறோம். ஐயமும், அவநம்பிக்கையும் மனதில் ஊடுறுவி, எங்கள் நம்பிக்கையை நிலைகுலையச் செய்யும்போது, நீரே எங்கள் பாறையும் அரணுமாக இருப்பீராக! “நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்” என்று திருத்தூதர் புனித பவுல் கூறுவது போல நாங்களும் வலிமை பெற்றிட உமது அருளை எமக்குத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி