தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 15 : திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் - வெள்ளிக்கிழமை ஞானத்தோடு செயலாற்றுவோம்

வாசகங்கள்:

எசாயா 48:17-19, மத்தேயு 11:16-19

அருள்மொழி:

"ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று.” (மத்தேயு 11:19

சிந்தனை:

நம்முடைய வாழ்வில் பலவற்றை நாம் நிரூபித்து உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகிறது; அப்படி மெய்ப்பித்துக் காட்டுவது தான் சரி என்று எண்ணிக்கொண்டு நாம் வாழுகிறோம். எடுத்துகாட்டாகச் சொல்வதென்றால், நம்மிடம் இருக்கின்ற செல்வத்தைக் கொண்டோ, நமது பதவியின் உயர்நிலையைக் கொண்டோ அல்லது நாம் குடியிருக்கும் பகுதியின் உயர்தரத்தைக் கொண்டோ நமது மேன்மையை, உயர்தகுதியை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த நாம் முயல்கிறோம். சமூக ஊடகங்களில் நாம் காணுகின்ற பற்பல பதிவுகள் எல்லாம் இன்றைய மக்களின் மனநிலை இப்படித்தான் உள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. எத்தகைய மாறுவேடத்தில் நாம் காணப்பட்டால், சுற்றியுள்ளவர்கள் நம்மை விரும்புவார்கள் அல்லது நமக்கு மதிப்பு அளிப்பார்கள் என்னும் வெற்று சிந்தனைகேற்ப நாம் அணிந்து கொள்கின்ற ஒரு முகத்திரை போன்றதே இந்த மனநிலை.

இது போன்ற தவறான மனநிலையை இறைமகன் இயேசு எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை; விரும்புவதும் இல்லை. திருமுழுக்கு யோவான் நோன்பிருந்தார்; மக்கள் அவரை ‘பேய் பிடித்தவன்’ என்றார்கள். இறைமகன் இயேசு எல்லாரோடும் விருந்துண்டு மகிழ்கிறார்; மக்கள் அவரை ‘பெருந்தீனிக்காரன், பாவிகளின் நண்பன்’ எங்கிறார்கள். மக்களின் இந்தக் கண்ணோட்டம் “ஒரு இரண்டும் கெட்ட, சிக்கலான மனநிலை” என்று இன்றைய நற்செய்தியில் இயேசு சுட்டிகாட்டுகிறார். மற்றவர்கள் செய்கின்ற எதுவுமே மக்களுக்கு மகிழ்ச்சியைத் தராது. ஏனெனில், இத்தகைய இரண்டும் கெட்ட மனநிலை யோவானையோ அல்லது இயேசுவையோ பற்றியதல்ல. ஆனால், ‘தாங்கள் மட்டுமே எல்லாரையும் விட உயர்வானவர்கள், ஒழுக்கமானவர்கள்’ என்ற மனநிலையே மக்களை இவ்வாறு எண்ணத் தூண்டுகிறது.

நமக்கு ஏற்புடையதல்லாத ஒன்றை மற்றவர்கள் செய்யும்போது, அவர்களை அலட்சியப்படுத்தி, தரக்குறைவான வார்த்தைகளால் இழிவாகப் பேசி, அவமானப்படுத்தும் செயலை நாமும் பலமுறை செய்கிறோமல்லவா? இவ்வாறு மற்றவர்களைக் கீழ்மைப்படுத்தி நாம் பேசுவதற்கான காரணம் என்ன? உண்மையிலேயே அவர்கள் தீங்கிழைப்பவர்கள் என்பதனாலா அல்லது நாம் மற்றவர்களைவிட மேன்மையானவர்கள், மதிப்பு மிக்கவர்கவர்கள் என்ற நமது எண்ணத்தாலா? இது போன்றக் கீழ்த்தரமான எண்ணங்கள் நம்மை விவேகமற்றவர்களாக. குறுகிய மனபான்மை கொண்டவர்களாகவே காட்டுகின்றன. ‘நாம் ஞானம் உடையவர்கள் என்பதற்கு நம்முடைய செயல்களே சான்று’ என்று இயேசு சொல்லுவதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

இறைவேண்டல்:

இயேசுவே! உலக ஆட்சி அதிகார மையங்களின் தவறான நிலைப்பாட்டைத் தயக்கமின்றி எதிர்த்து நின்றீர். ஆனால், எங்கள் வாழ்க்கையில், அதிகார ஆளுமைகளுக்கு வளைந்து கொடுக்கிறோம்; மௌனமாகப் பணிந்து செல்கிறோம். உம்மைப் போல உறுதியோடு தவறுகளை எதிர்த்து நிற்கின்ற வலிமை எங்களுக்கு இல்லை. ஆண்டவரே! அச்சமின்றி, மற்றவர்களுடைய சம்மதத்திற்கு காத்திருக்காமல், விருதுகள்-பரிசுகளை விரும்பாமல் நற்செய்தி பணியை ஆற்றுவதற்கான ஞானத்தை எங்களுக்கு அளித்தருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி