தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 14 : திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் - வியாழக்கிழமை
கடவுளுக்குச் செவிசாய்க்க கவனமாக இருப்போம்

வாசகங்கள்:

எசாயா 41:13-20, மத்தேயு 11:11-15

அருள்மொழி:

"கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" (மத்தேயு 11:15)

சிந்தனை:

ஒரு குறிப்பிட்ட நொடிகளுக்குள் பதில் சொல்லவேண்டிய ‘வினாடி வினா’ அல்லது ‘புதிர்’ போட்டிகள் பலவற்றை நாம் பார்த்திருப்போம். அந்தப் போட்டிகள் நடைபெறுகின்ற நேரத்தில், நொடிப்பொழுதின் கால அளவை உணர்த்துவதற்காக ‘டிக், டிக்’ என்ற ஒலியுடன் கருவி ஒன்று ஒலித்துக் கொண்டிருக்கும். அத்தகைய போட்டிகளில் பங்கேற்கின்ற போட்டியாளர் ஒருவர், இந்த ‘டிக்’ ‘டிக்’ சத்தம் மிக அருகில் காதில் ஒலிப்பதை விரும்புவதில்லை. ஏனெனில், வினாவுக்கான சரியான விடையைக் கண்டுபிடிப்பதற்காகத் தீவிரமாகச் சிந்திக்கின்ற பொழுதில், தனது கவனத்தைச் சிதைத்து, எண்ண ஓட்டத்தைத் தடை செய்கின்ற பெரும் இடையூறாகவே இந்த ‘டிக்’ ‘டிக்’ சத்தம் அவருக்குத் தெரிந்தது. இதைப் போலவே, நமக்குப் பழக்கமில்லாத ஒரு புதிய இடத்தில் ஒரு நண்பரை அல்லது ஒரு முகவரியைத் தேடி நாம் செல்லும்போது, காரில் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இசைக்கருவியை நிறுத்திவிடுவது நல்லது என நமக்குத் தோன்றும். நமது கேட்கும் திறன், நமது பார்வை மற்றும் நமது சிந்தனை - இவையெல்லாம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து தொடர்புடையவையாக உள்ளன.

நமது காலத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நமது முன்னோர்களுடைய வாழ்க்கையை விட நம்முடைய வாழ்க்கை ரொம்பவும் சுறுசுறுப்பாகவும், மும்முரமானதாகவும் இருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால், மனித வாழ்க்கை எப்போதுமே சுறுசுறுப்பானதாக, கடினமானதாகவே இருந்துள்ளது என்பதே உண்மை. ஒருவகையில் நமது முன்னோர்கள் நம்மைவிட இடர்பாடுகள் நிறைந்த வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்றே சொல்லலாம். எல்லா காலத்திலும் மனிதர்கள் வாழும் இடங்களிலும், பல்வேறு பணிகளுக்காகச் சென்று வருகின்ற இடங்களிலும் சுற்றுச்சூழலில் நீக்கமற நிறைந்து பரவுகின்ற பலவகையான ஒலிக்கலவைகளின் தாக்கம், எப்போதும் மனித மனங்களின் கவனத்தை திசைதிருப்பி, தேவையானவற்றை அறிந்து கொள்ளவிடாமல் தடுக்கிறது.

தவறானவற்றை மட்டுமே கவனத்தில் கொள்கின்ற மனிதர்களின் இத்தகைய இயல்பான மனப்பாங்கினை அடையாளம் கண்டுகொண்டதால் தான், "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். நமது கவனத்தைச் சிதைத்து, நேரிய நம் வாழ்க்கைநெறியை மடைமாற்றம் செய்யக்கூடிய ஏராளமான செய்திகளை, பெருகிவரும் எண்ணற்ற தொழில்நுட்பச் சாதனங்களும், சமூக ஊடகங்களும் தடையின்றி பரப்புகின்றன. இத்தகைய தேவையற்ற செய்திகளை நாம் ஒதுக்கித் தள்ள வேண்டும் என்பதை, "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்ற வரிகளின் வழியாக இயேசு நமக்கு நினைவூட்டுகிறார்.

இறைவேண்டல்:

ஞானத்தின் ஊற்றாகிய இறைவா! எங்கள் உள்ளங்களின் உணர்வுகளை எல்லாம் அறிந்தவர் நீர்! சுற்றிய சுழன்று எம்மை அழுத்துகின்ற பலவகையான சத்தங்களுக்கிடையே உம்முடைய உண்மையானக் குரலை நாங்கள் கேட்பதற்கு எங்களுக்குத் துணைசெய்வீராக! உமது வார்த்தைகளைக் கேட்டு, அவற்றைப் புரிந்து கொண்டு எங்கள் வாழ்வில் செயல்படுத்தவும் உதவி செய்தருளும். இறைவா! கேட்கத் தயாராயிருக்கும் செவிகளை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி