திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

19.12.2022 திருவருகைக் காலம் நான்காம் வாரம் - திங்கள்கிழமை

செக்காரியாவின் சந்தேகங்கள்

அருள்மொழி:

வானதூதர் அவரிடம், “நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால், அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்; உம்மால் பேசவே இயலாது” என்றார். (லூக்கா 1:19, 20)

வார்த்தை வாழ்வாக:

“நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்” இத்தனை ஆணித்தரமாக வல்லமையோடும், அதிகாரத்தோடும் எல்லோராலும் கூறமுடியுமா? இங்கு, விண்ணுலகத் தூதரான கபிரியேல் கூறுகிறார். இவருடைய கூற்றைக் கீழ்க்கண்ட வார்த்தைகள் விவரிக்கின்றன: வல்லமையானவை, அதிகாரமுள்ளவை, உறுதியானவை, அதிர்ச்சி தருபவை, பணிவு கொள்ளச் செய்பவை, ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை மற்றும் தெய்வீகத்தன்மை கொண்டவை.

செக்காரியாவோடும், மரியாவோடும் வானதூதர் கபிரியேல் செய்த உரையாடல்களுக்கிடையே உள்ள முரண்பாடுகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. தூதர் கபிரியேலுடன் இருவருமே ஒரே மாதிரியாகத் தான் உரையாடுகிறார்கள்; ஐயம் கொண்டு வினா எழுப்புகிறார்கள். ஆனால், தூதர் கபிரியேல் மரியாவுக்கு ஒருவகையான பதிலும், செக்காரியாவுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையிலும் பதில் தருகிறார். “இஃது எப்படி நிகழும்?" என்று மரியா கேட்டதற்கு, “தூய ஆவி உம்மீது வரும். உன்னதக் கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்" என்ற சிக்கலற்ற எளிமையான ஒரு விளக்கத்தைத் தூதர் கூறுகிறார். ஆனால், இதே போன்ற ஒரு கேள்வியைச் செக்காரியா கேட்டபோது, அதற்கு விளக்கம் சொல்லாமல், தான் சொல்வதை நம்ப மறுத்த செக்கரியாவை பேச்சற்றவராக்குகிறார்.

மரியாவும், செக்காரியாவும் ஒரே மாதிரியான ஐயப்பாடுகளை எழுப்பினாலும், அநத இருவரின் உள்ளத்து உணர்வுகளும் வெவ்வேறாக இருந்தன. மரியா வானதூதரை நம்பினார்; அவர் சொன்ன செய்தியையும் நம்பினார். அந்த நம்பிக்கையின் விளைவாகவே, தூதரின் செய்தியில் மறைவாயிருந்த இறையுண்மையைப் புரிந்துகொள்வதற்கான விளக்கத்தை மரியா கேட்டார். அதற்கான விளக்கத்தைத் தூதர் அளித்தபோது, பணிவோடு ஏற்றுக்கொண்டார்.

ஆனால், தூதரின் செய்தியைக் கேட்ட செக்காரியா, “இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்?" என்று வினவுகிறார். அதாவது, வானதூதர் சொன்ன செய்தியை நம்பாமல், அஃது உண்மையாக இருக்க முடியாது என்ற மனநிலையில் இருந்த செக்காரியா, “இது நடக்கும் என்று நான் அறிந்து கொள்வது எவ்வாறு?” என்று ஓர் அடையாளத்தைக் கோரும் விதமாகக் கேட்கிறார். நம்பிக்கை இல்லாத இடத்தில் மேற்கொண்டு உரையாடலுக்கு வாய்ப்பில்லை என்பது போல, நாவு கட்டப்பட்டு, பேச்சற்ற நிலையைச் செக்காரியாவுக்கு அளித்துவிட்டு தூதர் சென்றுவிடுகிறார்.

சிந்தனை:

நமது நம்பிக்கையின் நிலை என்ன? தெளிவாகவும், கடவுள் வெளிப்படுத்தும் செய்திகளை ஏற்றுக்கொள்வதில் ஆர்வமாகவும் இருக்கிறதா? கடவுள் நம்மோடு பேசுவதை நம்புவதற்கு நாம் விருப்பத்தோடு தயாராக இருக்கிறோமா? கண்ணுக்குப் புலப்படும் வகையில் வானதூதர் நம்முன்னே தோன்றி, கடவுளின் வார்த்தைகளை நமக்குச் சொல்லாவிட்டாலும், மறைநூல் வாசங்கள், மறையுரைகள், நமது தனிப்பட்ட உள்ளார்ந்த இறைவேண்டல்கள் ஆகியவற்றின் வாயிலாகக் கடவுள் தொடர்ந்து நம்மோடு பேசுகிறார். அவருடைய வார்த்தையை உள்ளத்தில் உணரும்போது, செக்காரியாவைப் போலத் தயக்கம் காட்டாமல், அன்னை மரியாவைப் போல நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்வோம்.

இறைவேண்டல்:

ஆண்டவரே! உமது அன்னை மரியா கொண்டிருந்தது போல, தூய்மையான ஆழமான நம்பிக்கையையை எனக்குத் தாரும். பலவீனமும், பாவமும் நிறைந்த மனிதன் நான். ஆயினும், அன்னை மரியாவின் பரிந்துரையால், நீர் என்னோடு பேசுபவற்றையெல்லாம் நான் நம்பிக்கையோடு ஏற்று நடந்திட உதவியருளும். இயேசுவே, உம்மிடம் நம்பிக்கை வைக்கிறேன்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி