திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

07.12.2022 திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் - புதன்கிழமை

உங்கள் சுமைகளோடு என்னிடம் வாருங்கள்

அருள்மொழி:

“பெருஞ்சுமை சுமந்துச் சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” (மத்தேயு 11:28 - 30)

வார்த்தை வாழ்வாக:

இயேசுவிடமிருந்து இதமான ஒஃரு அழைப்பு! மீண்டும் மீண்டும் வாசித்துத் தியானிப்பதற்கும், வாழ்க்கையில் மிகவும் இக்கட்டான தருணங்களில் மனதில் நிறுத்தி ஆறுதல் பெறுவதற்கும் ஏற்ற ஒரு விவிலியப் பகுதி. மனதில் தாங்க முடியாத அழுத்தத்தைத் ஏற்படுத்துகின்ற இன்னல்களை வாழ்க்கையில் நாம் எல்லோருமே சந்திக்க நேருகிறது. துயரமான ஒரு சம்பவம் அல்லது அன்றாட அலுவல்களில் உண்டகிற சலிப்பு - இப்படிப் பல நிகழ்வுகள் நமக்குக் கலக்கத்தையும், மனவேதனையையும் ஏற்படுத்துகின்றன. தினசரி வாழ்வில் நமக்கு மிகுந்த மனாழுத்தத்தை உண்டாக்கக்கூடிய பலவற்றில் முக்கியமானவை நாம் செய்கின்ற பாவங்களே. நமது நிலைமை எப்படி இருந்தாலும், “என்னிடம் வாருங்கள்” என்று இயேசு நம்மை அழைக்கிறார். ‘உங்கள் வாழ்க்கையில் எது எப்படியானாலும் கவலை வேண்டாம்; தயக்கமின்றி, அச்சமின்றி என்னிடம் வாருங்கள்’ என்று இயேசு கனிவோடு அழைப்பு விடுக்கிறார்.

மேலும், “என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்று உறுதியோடு உரைக்கின்றார். இதன் பொருள் என்ன? இயேசுவிடம் சென்றடையும்போது, நம்மை அழுத்துகின்ற இன்னல்கள் எல்லாவற்றையும் அவர் நீக்கிவிடுவார் என்று அர்த்தமா? இல்லை, நிச்சயமாக இல்லை. மாறாக, இயேசுவின் அழைப்பை ஏற்று அவரிடம் நாம் செல்லும்போது, நாம் எதிர்கொள்கின்ற கடினமான சூழ்நிலைகளைத் தாங்கிக் கொள்வதையும், எளிதாக அடுத்தக் கட்டத்திற்கு நடந்து செல்வதையும் இயேசுவின் உடனிருப்புச் சாத்தியமாக்குகிறது.

‘மனிதவாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ள அனைத்து இன்பதுன்பங்களையும் எதிர்கொள்ள விதமாக மனிதவுருவோடும், மனித இயல்போடும் திருமகனாம் கடவுள் இவ்வுலகிற்கு வந்தார்’ என்பதைத் திருவருகைக் காலம் நமக்கு நினைவூட்டுகின்றது. இம்மண்ணுலக வாழ்வில் அவர் எவ்வைகையிலும் பாவம் செய்யாதிருந்தாலும், பாவத்தின் விளைவுகளையும், அது மனிதர்மீதுச் சுமத்துகின்ற அழுத்தங்களையும் நேரிலே எதிர்கொள்ளத் தன்னையே உட்படுத்திக் கொண்டார். இதன் காரணத்தால் மனித வாழ்வின் இடர்பாடுகளை முற்றிலும் அவர் அறிந்துள்ளார். நம் மீது கொண்டப் பேரன்பினால் உலக வாழ்வின் இன்னல்களை ஏற்று வாழ்ந்த இயேசு, நாம் எதிர்கொள்கின்ற எல்லாத் துன்பங்களை மகிழ்ச்சியோடு தாங்கிட உதவி செய்யத் தயாராக இருக்கிறார்.

சிந்தனை:

இயேசு விடுக்கின்ற சிறப்பான, இனிமையான அழைப்பை இன்று தியானிப்போம். நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகின்ற இடர்பாடுகள் எதுவாக இருந்தாலும், இயேசுவை உள்ளத்தில் வரவிடுவோம். நமது சுமைகளை அவர் ஏற்றுக் கொள்ளவும், அவருடைய எளிதானச் சுமையை நமக்குத் தரவும் வேண்டுவோம். நமக்கென்று இருக்கின்ற ‘சிலுவை’ நம்மைவிட்டு அகன்றுப் போகாதிருக்கலாம்; ஆனால், இறையருளால் அஃது எளிதானச் சுமையாக மாற்றம் அடையும் என்பதில் ஐயமில்லை.

இறைவேண்டல்:

ஆண்டவரே! என் வாழ்வையும், என்னில் இருக்கின்ற எல்லாவற்றையும் உமக்குக் கையளிக்கின்றேன். உம்மிடம் வரச்சொல்லி நீர் விடுக்கின்ற அழைப்பை ஏற்றுக் கொள்கிறேன். இறைவா, உம்முடைய அளவற்ர அன்பிற்கும், என்றும் தவறாத கருணைக்கும் நன்றி, இயேசுவே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்.

அன்பின்மடல் முகப்பு